PUBLISHED ON : ஜன 20, 2013

'ஆன்டிபயாடிக்' மருந்து கொடுத்தார். அம்மருந்தை மீண்டும், மீண்டும் கொடுக்கலாமா?
வெளிநாடுகளில் டாக்டர் பரிசோதித்த 5 முதல் 10 நாட்களுக்குள், அவரது மருந்து சீட்டுக்கு மருந்துகளை வாங்க வேண்டும். தவறினால் மீண்டும் டாக்டரை ஆலோசித்துதான் மருந்து வாங்க முடியும். உங்கள் மகனுக்கு ஒரே வகையான ஆன்டிபயாடிக்கை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவதன் மூலம், அம்மருந்தின், நோய் எதிர்ப்பு திறன் குறைகிறது.அந்த நோய் கிருமிக்கும் மருந்தை எதிர்க்கும் சக்தி வந்துவிடுகிறது. அதனால் டாக்டரை ஆலோசிக்காமல் ஒரே ஆன்டிபயாடிக்கை திரும்பத் திரும்ப பயன்படுத்தக் கூடாது. ஒரு நோய் கிருமிக்கு ஆன்டிபயாடிக்கை எதிர்க்கும் சக்தி வந்துவிட்டால், உங்கள் குழந்தைக்கு மட்டுமின்றி, இந்த சமூகத்து மக்கள் அனைவருக்கும் அந்த ஆன்டிபயாடிக் பயன்படாமல் போகிறது. அதனால் ஆன்டிபயாடிக் மருந்துகளை ஒரு சுழற்சி முறையில்தான் பயன்படுத்த வேண்டும். இதை 'ஆன்டிபயாடிக் சைக்கிள்' என்பர்.
எனக்கு ஒருமாதமாக சளி இருந்தது. டாக்டர் எனது மார்பு எக்ஸ்ரேயை பார்த்துவிட்டு, இடதுபக்க நுரையீரலில் சிறு கட்டி உள்ளது. இதற்கு சி.டி., ஸ்கேன் செய்ய வேண்டும் என்றார். இது ஏன்?
நுரையீரலில் ஏதேனும் தொந்தரவு இருந்தால், அதை கண்டறிய எக்ஸ்ரே எடுப்பது நல்லது. உங்கள் இடதுபக்க நுரையீரலில் கட்டி உள்ளது என்பதால், அதன் தன்மை என்னவென்று ஆராய, சி.டி.,ஸ்கேன் மிகவும் இன்றியமையாதது.பொதுவாக எக்ஸ்ரேயில் மறைக்கப்படும் பகுதி உள்ளது. இதனால் சில பகுதிகளை தெளிவாக கண்டறிய முடியாது. ஆனால் சி.டி.,ஸ்கேனில் அப்படி இல்லை. ஒரு அன்னாசி பழத்தை நாம் நறுக்குவது போல, சி.டி.,ஸ்கேன் நம்நுரையீரலை நறுக்கி, நுரையீரலின் தன்மையை மிகவும் துல்லியமாக காட்டுகிறது. இதனால், உங்கள் இடதுபக்க நுரையீரலில் எவ்வகை கட்டி உள்ளது என அறிய முடிகிறது. மேலும் அது எவ்வகை கட்டி என்பதை உறுதி செய்ய, 'பயாப்ஸி' செய்து பார்ப்பது மிகவும் நல்லது. சி.டி.,ஸ்கேன் ரிப்போர்ட்டை மட்டும் வைத்து உறுதி செய்ய இயலாது.
25 வயதான எனக்கு, ஐந்து மாதங்களாக அதிகசளி, இருமல் உள்ளது. பால் குடிப்பதால் சளி அதிகமாகும் எனவும், பாலை தவிர்க்க வேண்டும் என கூறுகின்றனர். அது சரிதானா?
ஒரு சிலருக்கு உணவு பொருட்களால் அலர்ஜி உண்டாகிறது. 4 சதவீதத்திற்கு குறைவான மக்களுக்குத்தான் உணவுப் பொருட்களால் அலர்ஜி உண்டாகும். பெரும்பாலான மக்களிடம் அலர்ஜியை உண்டாக்கும் பொருட்கள் இரால், நண்டு, மீன்வகைகள், வேர்க்கடலை, பால், கோகோ, கத்தரிக்காய், தக்காளி, சில பயறுவகைகள் போன்றவை. ஆனால் உணவு அலர்ஜி உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த அனைத்து பொருட்களாலும் அலர்ஜி உண்டாவதில்லை. அதனால் பால் உங்களுக்கு அலர்ஜியை உண்டு பண்ணுகிறதா என்பதை கண்டறியுங்கள். ஏனெனில் மிகக்குறைந்த சதவீத மக்களுக்குத்தான் பாலால் அலர்ஜி ஏற்படலாம். மேலும் பல குழந்தைகளுக்கு சாக்லெட்டால் அலர்ஜி ஏற்படுவதில்லை. சாக்லெட்டில் உள்ள கோகோவால் அலர்ஜி ஏற்படலாம். ஆகையால் கண்டிப்பாக தாங்கள் பால், தயிர், மோர் குடிக்கலாம். அதனால் சளி ஏற்படாது. ஆனால் குளிரூட்டப்பட்ட பால் மற்றும் மிகவும் புளித்த தயிர் மோரை தவிர்ப்பது நல்லது.
- டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425-24147