'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டவர்களுக்கு மருந்து அவசியமா?
'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டவர்களுக்கு மருந்து அவசியமா?
PUBLISHED ON : ஜன 05, 2014

'ஸ்டென்ட்' சிகிச்சை செய்தவர்களுக்கு மருந்து, மாத்திரை தான் அத்தியாவசியமானது. கொடுக்கப்பட்ட மருந்துகளை, அவசியம் எடுத்தாக வேண்டும். நீங்களாக மருந்தை நிறுத்தக் கூடாது
பி.முருகேசன், சிவகங்கை: நான் உயர் ரத்தஅழுத்தத்திற்காக, டெல்மிசார்டான் 40 மி.கி., அம்லோடிபின், 5 மி.கி., என்ற மருந்துகளை தொடர்ந்து எடுத்து வருகிறேன். தற்போது, ரத்தஅழுத்தம் 160/90 என்ற அளவில் உள்ளது. இம்மருந்துகளை தொடரலாமா?
நீங்கள், உயர் ரத்தஅழுத்தத்திற்கு எடுக்கும், இரண்டு மருந்துகளுமே, மிகச் சிறந்தவை. டெல்மிசார்டான் என்பது, A.R.D., வகை சார்ந்த மருந்து. அம்லோடிபின் என்பது, 'கால்சியம் பிளாக்கர்' வகையைச் சேர்ந்தது. இந்த, இரு மருந்துகளையும், சேர்த்து எடுக்கும் போது, நம் உடலுக்கு, பல வகைகளில் பலனளிக்கிறது. ஆனால், உங்களுக்கு, இவ்விரு மருந்துகளை எடுத்தும், ரத்தஅழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, உங்களுக்கு மூன்றாவதாக ஒரு மருந்து, அவசியம் தேவைப்படும்.
நீங்கள், உங்கள் டாக்டரை சந்தித்து, உயர் ரத்தஅழுத்த மருந்துகளை, அவசியம் மாற்றி அமைத்தாக வேண்டும். நம் நாட்டில், ரத்தக் கொதிப்பு உள்ள பெரும்பாலோர், தங்களுக்கு அந்த வியாதி உள்ளது என்பதையே, அறியாதவர்களாக உள்ளனர். இந்த வியாதி உள்ள பலர், தங்களுக்கு, வியாதி உள்ளது எனத் தெரிந்தும், மருந்து எடுத்துக் கொள்வது இல்லை. மருந்து எடுத்துக் கொள்ளும் பலருக்கு, உங்களைப் போல ரத்த அழுத்தம், கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. எனவே, உயர் ரத்த அழுத்தம் உள்ள பெரும்பாலோருக்கு, பல்வேறு காரணங்களால், ரத்த அழுத்தம், கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. ஒருவர், எந்த வயதிலும், எந்தத் தருணத்திலும், ரத்த அழுத்தத்தின் அளவை, 140/90 க்குக் கீழ் வைத்திருந்தால் தான், உடல் உள்ளுறுப்புகள், குறிப்பாக, கண், மூளை, நரம்புகள், சிறுநீரகங்கள், இதயம், ரத்த நாளங்களை பாதுகாக்க முடியும்.
ஈ.செல்வம், தேனி: என் வயது, 39. சமீபத்தில், காய்ச்சலுக்காக, டாக்டரிடம் சென்ற போது, சர்க்கரை அளவு, 395 மில்லி கிராம் இருப்பதாக, தெரிய வந்துள்ளது. நான் என்ன செய்ய வேண்டும்?
சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரையின் அளவு, திடீரெனத் தான் வெளிப்படும். உடனடியாக, உங்கள் வாழ்க்கை முறையை, மாற்றி அமைத்தாக வேண்டும்.
குறிப்பாக காபி, டீயை சர்க்கரை இன்றி குடிப்பது, அரிசி உணவை தவிர்ப்பது, நொறுக்குத் தீனிகளை (ஸ்நாக்ஸ்) தவிர்ப்பது முக்கியம்.
உடல் எடையை, உயரத்திற்கேற்ப சரியாக வைத்துக் கொள்வது, தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது, அத்தியாவசியமானது. இந்தளவு, அதிகமாக சர்க்கரை இருந்தால், மருந்துகளும், தேவைப்படின், இன்சுலின் ஊசியையும் துவங்க வேண்டும். ரத்தத்தில், சர்க்கரையின் அளவு, வெறும் வயிற்றில், 100 மி.கி.,க்கு கீழும், சாப்பிட்டு, 2 மணி நேரத்திற்குப் பின், 140 மி.கி.,க்கு கீழும் இருக்கும் வகையில், பராமரித்துக் கொள்ள வேண்டும்.
எஸ். ராபர்ட், விருதுநகர்: எனக்கு, சென்னையில், பிரபலமான ஒரு மருத்துவமனையில், 2 மாதங்களுக்கு முன், 2 'ஸ்டென்டு'கள் பொருத்தப்பட்டன. தற்போது, நான், 18 வகை மருந்துகளை எடுத்து வருகிறேன். இதனால், என் வயிற்றில், எரிச்சல் இருப்பதாக உணர்கிறேன். நான் என்ன செய்வது?
'ஸ்டென்ட்' சிகிச்சை செய்தவர்களுக்கு மருந்து, மாத்திரை தான் அத்தியாவசியமானது. வேளை தவறாமல், கொடுக்கப்பட்ட மருந்துகளை, அவசியம் எடுத்தாக வேண்டும். நீங்களாக மருந்தை நிறுத்தக் கூடாது. மருந்துகளை நிறுத்தினால், 'ஸ்டென்ட்' மூடிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டவர், பொதுவாக, சக்திவாய்ந்த மருந்துகளை, ஒரு ஆண்டுக்கும், அதன்பின், மருந்துகளை நன்கு குறைத்து, வாழ்நாள் முழுவதும், எடுக்க வேண்டியது வரும்.
இருப்பினும், உங்களுக்கு வயிற்றில் எரிச்சல் போல ஏற்பட்டால், மருந்தின் அளவை குறைத்து, வயிற்றுக்கு இதமாக இருக்கும்படி, மருந்துகளை மாற்றி அமைக்கவும் முடியும். ஆதலால், மருந்துகளை நீங்களாக நிறுத்தி விடாதீர்கள்.
டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை.

