PUBLISHED ON : ஆக 11, 2013

ராமச்சந்திரன், வேலூர்: அசைவ உணவு சாப்பிட்டால் துணுக்குகள் பல்லில் மாட்டிக் கொள்கின்றன. அவற்றால் பற்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
அசைவ உணவு வகைகளில் பெரும்பாலானவற்றை மெல்லும் போது, அவை மெல்லிய நார்களாக பிரியும். பற்களின் இடையே சிறிய இடைவெளி இருந்தாலும், அவற்றில் இவை புகுந்து விடும். ஈறு நோய் உள்ளவர்கள், பல்சொத்தை உள்ளவர்களுக்கு, பற்களின் நடுவே உள்ள இடைவெளி, பெரிதாக இருக்கும். அப்போது அசைவ உணவு மாட்டுவது, அதிகம் இருக்கும். மற்ற உணவுகள் போல, பெரிய துண்டுகளாக பற்களில் மாட்டிக் கொள்வதை, சுலபமாக எடுத்து விடலாம். இந்த நார் போன்ற உணவு மாட்டிக் கொண்டால், எடுப்பது கடினம்.
இதற்கு, 'டென்டல் ப்ளாஸ்' என்ற நூலை, பற்களின் இடையே விட்டு சுத்தம் செய்யலாம். இதன் மூலம் உணவுத் துண்டுகளை எடுப்பதுடன், பற்களின் இடுக்குகளையும் சுத்தம் செய்யலாம். பல்குச்சி, பின், ஊசி போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
இது இடைவெளியை பெரிதாக்கி ஈறுகளை புண்ணாக்கி விடும். இவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
எப்போதும் பற்களின் நடுவே உணவு மாட்டிக் கொள்ளும் தொந்தரவு இருப்பவர்கள், பற்களின் இருபக்கமும் உள்ள இடைவெளியை, மூடும் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.
இடைவெளிக்கு இருபக்கமும் உள்ள பற்களில், 'கேப்' போட்டும், இதனை அடைக்கலாம். ஈறுகள் கீழே இறங்கி, இடைவெளி ஏற்பட்டு இருந்தால் ஈறுகளின் அடியில் சுத்தம் செய்து, மருந்து வைத்து கட்டி, ஈறுகளை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும்.
இது போன்ற சிகிச்சைகளாலும், சரியாக சுத்தம் செய்யும் முறைகளாலும், பற்களின் இடையே அசைவ உணவு மாட்டிக் கொள்ளாமல் தவிர்க்கலாம்.
குகன், திருச்சி: என் மகனின் கீழ்த்தாடை மட்டும் பார்க்க சிறிதாக உள்ளது. இது தானாக சரியாகுமா அல்லது சிகிச்சை ஏதாவது செய்ய வேண்டுமா?
தாடையின் அளவு சிறியதாக இருக்க முக்கிய காரணம், ஒரு சில பரம்பரை நோய்கள் குழந்தைகளுக்கு இருப்பதே. வளரும் வயதில் ஏற்படும், ஹார்மோன் சம்பந்தப்பட்ட நோய்களாலும், தாடை சரியாக வளராமல் சிறிதாக இருக்கலாம். சிலருக்கு, தாடை அளவு சிறிதாக இருப்பதால், எந்த தொல்லையும் வராது. பலருக்கு, தாடை சிறிதாக இருப்பதால், பல்வரிசை கோணலாக இருக்கும். சாப்பிடுவதற்கும், சில நேரங்களில் சுவாசிப்பதற்கும் சிரமமாக இருக்கும்.
இது போன்று இருந்தால், கண்டிப்பாக சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால், இது பின்னாளில், பல உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். இதன் காரணத்தை அறிந்து, சரியான சிகிச்சை செய்ய வேண்டும். பல் மற்றும் முகச் சீரமைப்பு நிபுணரின் பங்கு, இதில் முக்கியமானது. தாடை எலும்பு, நாடி எலும்பு மற்றும் பற்களையும் சோதனை செய்து, அதன் வளர்ச்சி நிலையை அறிய வேண்டும்.
பின் அதற்கேற்றவாறு, தாடையில் பொருத்தும் சாதனங்களை செய்து, மாட்ட வேண்டும். இது, தாடை எலும்பு வளர்ச்சியை சீராக்கும். ஒரு சிலருக்கு, தாடை எலும்பில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும்.
சிகிச்சை காலம் முடிந்து, தாடை எலும்பும், அதைச் சுற்றி உள்ள பாகங்களும், முழுமையான வளர்ச்சி அடையும் வரை, சரியான இடைவெளியில் கண்காணிக்க வேண்டும். உரிய நேரத்தில் செய்யும் தாடை எலும்பு சிகிச்சை, பற்களுடன் சேர்ந்து, முக அமைப்பையும் சீராக்கும்.
டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை. 94441 54551