தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நடைபயிற்சி செய்வதால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுமா?

நடைபயிற்சி செய்வதால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுமா?

நடைபயிற்சி செய்வதால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுமா?


PUBLISHED ON : பிப் 12, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 12, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எலும்பு மூட்டுகள் இயல்பாக செயல்படுவதற்கு வசதியாக, இயற்கையிலேயே மூட்டுகளின் உட்பகுதியில் கொழகொழப்பான திரவம் சவ்வு போன்று இருக்கும். உடல் எடையை தாங்குவதற்கு இது உதவியாக இருக்கும். வயது ஆக ஆக, இந்த திரவத்தின் தரம் மாறுவதோடு, திரவம் சுரப்பதும் குறைந்து, எலும்பின் உட்பகுதி கடினமாக மாற ஆரம்பிக்கும்.

இதனால் இரண்டு மூட்டுகளும் சேரும் இடம் உராய்ந்து, வலியை ஏற்படுத்தும். இந்த நிலையை தான், 'ஆஸ்ட்டியோ ஆர்த்ரைடீஸ்' எனப்படும் மூட்டுத் தேய்மானம். இதுவே, கழுத்தில், முதுகின் பின்பக்கத்தில் வந்தால் அது, 'ஸ்பான்டிலைட்டிஸ்!'

முப்பது ஆண்டுகளுக்கு முன், இந்தப் பிரச்னை, 50 வயதிற்கு மேல் தான் வந்தது; ஆனால் தற்போது, இளம் வயதிலேயே வந்து விட்டது. உயரத்திற்கு ஏற்ற சராசரி உடல் எடையுடன் இல்லாமல், அதிக பருமனுடன் இருந்தால், அது மூட்டுகளை பாதிக்கும். எந்தவித உடல் உழைப்பும் இல்லாமல் இருப்பதும், மூட்டுகளை பாதிக்கிறது.

பிரச்னை இருப்பது உறுதியானால், வலியைக் குறைக்கும் வலி நிவாரணிகளை தருவோம்; அடுத்தது பிசியோதெரபி பயிற்சி.

வலிமை அடையும்

பயிற்சியில், முதலில் பாதித்த இடத்தில் உள்ள தசைகளை தளர்வடையச் செய்வதற்காக தசைகளை துாண்டும் விதமாக, மென்மையாக வெப்பத்தை செலுத்துவோம்; இது தவிர, மூட்டுகளைச் சுற்றி உள்ள தசைகள் வலிமையடைய, பயிற்சிகள் செய்ய வேண்டும்.

'டாக்டர் எனக்கு மூட்டுத் தேய்மானம், இடுப்புத் தேய்மானம் இருக்கிறது. நான் நடக்கலாமா?' என்பது பொதுவான கேள்வி. நடந்தால் வலிக்கிறது என்று நடக்காமல் இருந்தால், மூட்டுகளில் உள்ள திரவம் மேலும் குறைந்து, பிரச்னை இன்னும் பெரிதாகும்.

நடக்கும் போது தான் மூட்டுகளின் உட்பகுதி துாண்டப்பட்டு, திரவத்தைத் சுரக்கச் செய்யும். நடைபயிற்சி, உடற்பயிற்சிகளை செய்யும் போது தான் தசைகள் வலிமை அடையும்.

சீரான உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்வது மிகவும் முக்கியம்; அதிலும், தினசரி நடைபயிற்சி செய்வது தான் மூட்டுகளுக்கு நல்லது.

இதுவரை நடைபயிற்சியே செய்ததில்லை என்றால், எடுத்த உடனேயே ஒரு மணி நேரம், அரை மணி நேரம் என்று நடப்பது நல்லதல்ல; இது மூட்டுகளில் வலியையே ஏற்படுத்தும். பிரச்னை மேலும் பெரிதாகும். தினமும் நிதானமாக, 15 நிமிடங்கள் நடந்தால் போதும்.

இதை போன்று ஓரிரு மாதங்கள் செய்த பின், சிறிது சிறிதாக நேரத்தையும், துாரத்தையும் அதிகரிக்கலாம். நடக்கும் போது மூட்டுகளின் உட்பகுதி துாண்டப்பட்டு, திரவம் சுரக்கும்.

ஆஸ்ட்டியோ ஆர்த்ரைடீஸ்சை பொருத்தவரை, 90 சதவீதம் பேருக்கு, வலி நிவாரணி, நடைபயிற்சி, பிசியோ தெரபி மூலமே பிரச்னை கட்டுக்குள் வந்து விடும்.

நிவாரணம் கிடைக்கும்

அதிகப்படியான உடல் எடையில் 5 கிலோ குறைத்தாலே வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இதையும் தாண்டி சிலருக்கு வலி இருந்தால், 'லுாப்ரிகன்ட், ஜெல்' ஊசி போடலாம். வீரியம் குறைந்த, 'ஸ்டிராய்டு' மருந்துகள் சிலருக்கு அரிதாக தேவைப்படலாம்; இது எந்த பக்க விளைவும் இல்லாதது.

இதிலும் வலி குறையாமல், காலின் அமைப்பே கோணலாக மாறினால், கடைசி கட்டமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வது தான் ஒரே வழி. வெறும் 1 சதவீதம் பேருக்கே இப்படி நிகழும்.

பொதுவாக, 55 வயதிற்கு மேல் தான் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வோம். இளம் வயதில் கால்களின் அமைப்பு மாறியிருந்தால், கால்களை நேராக்க, 'ஆஸ்ட்டியோ ஆட்டமி' என்ற நவீன தொழில்நுட்பம் உள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

மரபியல் ரீதியாகவும் இந்த பிரச்னைகள் வரலாம்.

டாக்டர் கிரீஷ்,

எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us