தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/ரத்த தானம் செய்யுங்க மாரடைப்பு வராது! - உடல் நலம் காக்க அறிவுறுத்துகிறார் எத்திராஜன்

ரத்த தானம் செய்யுங்க மாரடைப்பு வராது! - உடல் நலம் காக்க அறிவுறுத்துகிறார் எத்திராஜன்

ரத்த தானம் செய்யுங்க மாரடைப்பு வராது! - உடல் நலம் காக்க அறிவுறுத்துகிறார் எத்திராஜன்


PUBLISHED ON : டிச 27, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 27, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கிப் பணியிலிருந்து, இரண்டு மாதங்களுக்கு முன், விருப்ப ஓய்வு பெற்று, டேபிள் டென்னிஸ் பயிற்சியாளராக களம் இறங்கி இருக்கிறார், சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த, ஆர். எத்திராஜன், 50. இவர், அந்த வங்கி அணியில், தொடர்ந்து, 25 ஆண்டுகளாக, டேபிள் டென்னிஸ் ஒற்றையர் சாம்பியனாக வலம் வந்தவர். அத்துடன், 26வது ஆண்டாக தொடர்ந்து, ரத்த தானம் செய்து, பாராட்டுப் பெற்றவர். தன் கண்ணை தானமாக வழங்க எழுதி கொடுத்துள்ளார். இரண்டாண்டுகளுக்கு முன் இறந்த, தன் தந்தையின் உடலையும், மருத்துவக்கல்லுாரிக்கு தானமாக அளித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். அவரிடம் பேசியதில் இருந்து...

விளையாட்டு வீரர்கள் ரத்த தானம் செய்ய யோசிக்கும் நிலையில், நீங்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்ய முன் வந்தது எப்படி?

ரத்த தான தினத்தில், செய்தித் தாள்களில் வரும் கட்டுரைகளை கூர்ந்து படித்த போது, பல உண்மைகள் தெரிய வந்தன. மக்களிடம், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு இல்லாதது புரிந்தது. அதில் ஒன்று தான், விளையாட்டு வீரர்கள் ரத்த தானம் செய்தால், விளையாட தேவையான சக்தி இருக்காது என்ற தவறான நம்பிக்கையும்.அதை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காக, நானே, தொடர்ந்து ரத்த தானம் செய்யத் தொடங்கினேன். அத்துடன், ஆண்டின் முதல் நாள், பிறந்த நாள், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ரத்த தானம் செய்தால், உடல்நலம் பாதிக்கப்படும் என்ற மூடநம்பிக்கையும் மக்களிடம் உள்ளது. அந்த நாட்களிலும் ரத்ததானம் செய்து முன்மாதிரியாக இருந்திருக்கிறேன்.

நம் நாட்டில், ரத்தத்தின் தேவை எந்தளவுக்கு உள்ளது?

நம் நாட்டில், ஒவ்வொரு இரண்டு நொடியிலும் ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு, 4 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாளும், 38 ஆயிரம் பேர் ரத்த தானம் செய்தால் தான், இந்த அளவை எட்ட முடியும். ஆனால், ஓர் ஆண்டில் சராசரியாகப் பெறப்படுவது, வெறும், 40 லட்சம் யூனிட் ரத்தம் தான். இந்த பற்றாக்குறையால், ஒவ்வொரு நாளும் விபத்தில் பாதிக்கப்படுவோர், கர்ப்பிணிகள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் என, பலரை காப்பாற்ற முடியாமல் போகிறது. ரத்தம் கிடைக்காமல், ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் தள்ளி வைக்கப்படுகின்றன.

யார் ரத்த தானம் செய்யலாம்?

இளைஞர்கள், மூன்று மாதத்துக்கு ஒருமுறையும், 50 வயதுக்கு மேற்பட்டோர், ஆண்டுக்கு இரண்டு முறையும், 1 யூனிட் ரத்தத்தை தானமாக தரலாம். ரத்தம் கொடுப்பதற்கு முன், ரத்தப் பிரிவு, ரத்த அழுத்தத்தின் அளவு, உடலின் வெப்பநிலை மற்றும் 'ஹீமோகுளோபின்' போன்றவை பரிசோதிக்கப்படும்; பின், நம்மிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்படும். ரத்தத்தை தானமாக வழங்குவதால், நம் உடலில் உள்ள, ஹீமோகுளோபின் அளவு பராமரிக்கப்படும். ரத்த குழாய்களில் கொழுப்பு படிவது தடுக்கப்பட்டு, மாரடைப்பு தவிர்க்கப்படும்.நாம் கொடையாக அளிப்பது, ரத்தம் அல்ல; உயிர். இந்த ரத்தத்துக்கு மாற்று எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நாம் அளிக்கும், 1 யூனிட் ரத்தம், நான்கு உயிரைக் காக்கும். நான் இதுவரை வழங்கிய ரத்தத்தால், 100 உயிர்களாவது காப்பாற்றப்பட்டிருக்கும்.

தொடர்ந்து ரத்த தானம் செய்ய விரும்புவோர் செய்ய வேண்டியவை என்னென்ன?

ரத்தம் கொடுப்பதற்கு முன், ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். ரத்தம் வழங்கும் முன் மெல்லிய இசையை ரசித்தபடி, மன அமைதியைக் காக்கலாம். ரத்தம் வழங்கிய பின், பழச்சாறு, சத்தான உணவு அல்லது ஆரோக்கியமான பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். ரத்தம் கொடுத்த முதல் நாளில், வியர்வை வெளியேறும்படியான கடின வேலைகளை செய்யக்கூடாது; மது அருந்தக்கூடாது.

ரத்தம் யார் கொடுக்கக் கூடாது?

பொதுவாக, ஹீமோகுளோபின் குறைவாக உள்ள ரத்தத்தை, தானமாக கொடுக்கக் கூடாது. மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் உள்ள பெண்கள் ரத்த தானம் செய்யக் கூடாது. பாலுாட்டும் பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. மது அருந்தியவர்கள், புகைப் பழக்கம் உள்ளவர்கள் செய்யக் கூடாது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், தொற்றுநோய் உள்ளோர், எய்ட்ஸ், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், வலிப்பு, அறுவை சிகிச்சை செய்துகொண்டோர் வழங்கக் கூடாது. இவ்வாறு பாதிக்கப்பட்டோர் தவறுதலாக ரத்தம் வழங்கி இருந்தாலும், ரத்த வங்கியில், பெறப்பட்ட ரத்தத்தில் டெங்கு, மலேரியா, டைபாய்டு, ஹெப்படைட்டிஸ், எச்.ஐ.வி., உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளனவா என, பரிசோதிக்கப்படும். அதன் பின் தான், தேவையானவருக்கு ரத்தம் ஏற்றப்படும்.

எங்கெல்லாம் ரத்தம் வழங்கலாம்?

சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராஜிவ் அரசு பொது மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, இந்திய செஞ்சிலுவை சங்கம், அரசு பன்னோக்கு மருத்துவமனை, வடபழனி, 'சிம்ஸ்' மருத்துவனை, லயன்ஸ் ரத்த வங்கி, ரோட்டரி ரத்த வங்கி உள்ளிட்டவற்றில் வழங்கலாம்.மேலும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எஸ்.ஆர்.எம்., அப்பல்லோ உள்ளிட்ட தனியார் மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகளிலும் ரத்ததானம் வழங்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us