sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

முதியோர் தவறி கீழே விழுந்தால் அலட்சியம் வேண்டாம்

/

முதியோர் தவறி கீழே விழுந்தால் அலட்சியம் வேண்டாம்

முதியோர் தவறி கீழே விழுந்தால் அலட்சியம் வேண்டாம்

முதியோர் தவறி கீழே விழுந்தால் அலட்சியம் வேண்டாம்


PUBLISHED ON : செப் 07, 2014

Google News

PUBLISHED ON : செப் 07, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதியோர் தவறி கீழே விழுந்தால் அலட்சியம் வேண்டாம்; தவறினால் அது நாளடைவில், படுத்த படுக்கையாகி, உயிரிழப்புக்கு வழி வகுத்து விடும். அதுபோல், நீண்ட நேரம், 'ஷூ' அணிவது கூடாது என்கிறார், டாக்டர் டேவிட் விஜய் குமார்.

சென்னையில், முதன் முறையாக, தவறி கீழே விழும் முதியோருக்கான சிறப்பு பிசியோதரபி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். முதியோருக்கான பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில் இதோ:

1முதியோர் அடிக்கடி தவறி கீழே விழுவது ஏன்?

குழந்தைகள் கீழே விழுந்தால் சிறிது நேரம் அழுதுவிட்டு, பழைய படியே சிரித்துக் கொண்டு விளையாட ஆரம்பித்து விடும். ஆனால், முதியோர் விழுதல், சாதாரண உடல் சிராய்ப்பில் ஆரம்பித்து, தலைக்காயம் வரை ஏற்பட்டு, மரணத்தைக் கூட ஏற்படுத்தி விடும். வயது ஆக ஆக, இயங்கும் உறுப்புகளின் திறன், கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என்பதால், உடலை சரியான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு, சிறு மூளை, கண், தசைகள் மற்றும் மூட்டுக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதில், ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்பு உண்டு.

2 தசை வலிமை குன்றுவது இதற்கு காரணமா?

அறிவுத்திறன் வீழ்ச்சி, உதறு வாதம், பக்கவாதம், பார்வை குறைதல், மூட்டு வலி, தசை சார்ந்த நோய்களாலும் பாதிப்பு ஏற்படும். மூளையில் (செரிபலம்) உள்ள, நிலைத்தன்மைக்கான செல்கள் இறப்பால், தளர்வு ஏற்பட்டு, அழுத்தம் தர முடியாத நிலை; தசை வலிமை குறைதல், மூட்டு மடக்கி நீட்ட முடியாத நிலை, எலும்பு சார்ந்த பாதிப்புகளாலும் மயங்கி விழுகின்றனர். 'வெஸ்டிபுலர் பிராப்ளம்' எனப்படும், நடு காதில் ஏற்படும் பிரச்னையும், தலை சுற்றலுக்கு காரணம்.



3 ரத்த அழுத்த பாதிப்பும் காரணமா?


ஒருவர் படுத்த நிலையில் இருக்கும்போது, ரத்த அழுத்தம் சரியாக இருக்கும். ஆனால், திடீரென எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது, ரத்த அழுத்தம் வேகமாகக் குறைவதால், கீழே விழும் நிலை ஏற்படுகிறது. மது, போதை பழக்கமும் காரணம்.

மூளைக்கு செல்லும் ரத்தம் சீராக செல்லாவிட்டாலும், தலை சுற்றல் வரும். இப்படி பல்வேறு காரணங்கள் உள்ளதால், எந்த காரணத்தால் பாதிப்பு வருகிறது என, கண்டறிய வேண்டும். 60 சதவீத முதியோர் தவறி விழும் நிலை உள்ளது.

4 தவறி விழுவதால் ஏற்படும் தொல்லைகள் என்ன?

கீழே விழும் முதியோரில், 20 சதவீதம் பேருக்கு, இடுப்பு எலும்பு முறிவதுண்டு. தலையில் அடிபடுவதால் காயமும், அதனால் மூளையில் ரத்தக்கசிவும் ஏற்படும். சிலர் படுத்த படுக்கையாகி விடுவர். தோல்களில் புண் ஏற்படும்; சிறுநீரக தொற்று ஏற்படும்; மார்பு சளி கட்ட வாய்ப்புள்ளது. அலட்சியம் காட்டினால், உயிர் இழப்புக்கும் வழி வகுத்துவிடும். ஒருமுறை கீழே விழுந்தால், மீண்டும் விழுந்து விடுவோமோ என்ற பயத்தால், பலர் நடக்க பயப்படுகின்றனர். தன் தேவைகளுக்கு மற்றவர்களின் உதவியை நாடுவதே, அவர்களுக்கு மனச்சோர்வை உருவாக்கி விடுகிறது.

5 நிலை தடுமாறும் நிலை எந்த வயதில் வருகிறது?

முதியோருக்கு, 70 வயதில் நிலை தடுமாறும் நிலை வருகிறது. 80, 90 வயதுகளில் உள்ளோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 60 வயதிலேயே இதற்கான ஆரம்பகட்ட பாதிப்புகள் வந்து விடுகின்றன. ரத்த ஓட்டத்தை சீராக்கவும், நிலை தடுமாறி விழும் நிலைக்கும் தீர்வு காண பயிற்சிகள் செய்ய வேண்டும்.

6 இதற்கான பிரத்யேக பயிற்சிகள் ஏதும் உள்ளதா?

பேலன்ஸ் டிரெய்னிங் புரகிராம் என்ற, ஆறு வார பயிற்சி உள்ளது. ஆரம்ப நிலை என்றால், அடிப்படை பயிற்சி எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தே செய்யலாம். பாதிப்பு அதிகம் இருந்தால், 'பிசியோதரபிஸ்ட்' மற்றும் பயிற்சி சாதனங்கள் உதவியுடன், பயிற்சி மையங்களில் சென்று பயிற்சி பெற வேண்டும். மேலும், 'வாபில் போர்டு', பேலன்ஸ் போர்டு, டிராம்போலைன் போர்ட், பாசு பால், டேண்டன் வாக்கிங் பிளாட்பார்ம், வைபிரேஷன் போர்டு, வாக்கிங் டிரெய்னர் என, பல்வேறு பயிற்சிகள் உள்ளன. இவை, முதியோருக்கு நல்ல பலன்களைத் தரும்.

7நீண்ட நேரம், 'ஷூ' அணிவோருக்கும் இந்த பாதிப்பு வரும் என்கிறார்களே?

அலுவலங்களில், நீண்ட நேரம் 'ஷூ' அணிவோர், விரல்களை அசைக்க முடியாத நிலை வருவதால், வயதாகும்போது, தவறி விழும் பாதிப்பு வருவது உண்மை தான். நீண்ட நேரம், 'ஷூ' அணிவோர், சிறிதுநேரம் கழற்றி வைத்து, கால், விரல்களுக்கு சற்று நேரம் அசைவு தருவது நல்லது. 'ஷூ' அணிவது அவசியம் என்றால், விரல்களை உள்ளிருந்தபடியே அசைவு தர வசதியுள்ள, முன்புறம் அகலமான, 'ஷூ'க்களை பயன்படுத்தலாம்.

8 முதியோருக்கு சிறப்பு ஆலோசனை என்ன?

'டைம் டு டாய்லட்' பயிற்சி முக்கியம். எந்த நேரத்தில் சிறுநீர் கழிக்கும் நிலை வருகிறது என, தெரிந்து கொண்டு, அதற்கு சற்று முன் சிறுநீர் கழிப்பது நல்லது. இரவு நேரங்களில், சிறுநீர் சிந்திவிடுமோ என, அவசரமாக செல்லும்போது தான் தவறி விழுகின்றனர். மாலை 6:00 மணிக்கு மேல், காபி, டீ, தண்ணீர் அதிகம் குடிப்பதை, முதியோர் குறைத்துக் கொள்வது நல்லது.

* கண் பார்வை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண்ணாடி அணிவோர், பார்வை திறனை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும். காதுகளில் அழுக்கு படியாமல் சுத்தம் செய்ய வேண்டும்.

* பக்க விளைவுகளால் பாதிப்பு வரும் என்பதால் மருந்து, மாத்திரை சாப்பிடுவோர், டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். கால்களுக்கு பொருத்தமான காலணிகளை அணிய வேண்டும்.

* குளியல் அறை வழுக்கி விடாத வகையிலும், தண்ணீர் தேங்காமலும் பார்த்துக் கொள்வதோடு, அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை கைக்கு எட்டும் துாரத்தில் வைத்துக் கொள்வதாலும், தவறி விழும் நிலையில் இருந்து தப்பலாம்.

- டாக்டர் டேவிட் விஜய் குமார்,

இயக்குனர், முதியோர் பிசியோதரபி மையம்,

38/1, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,

நுங்கம்பாக்கம், சென்னை.






      Dinamalar
      Follow us