PUBLISHED ON : ஜூன் 30, 2019

* என் வயது 22. ஒரு வருடத்திற்கு முன் சாலை விபத்தில் தோள் மூட்டு விலகியது. அதன் பிறகு 3 முறை தோள்மூட்டு விலகியுள்ளது. என்னை பரிசோதித்த டாக்டர், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுக்க சொன்னதில் தோள்மூட்டு கிண்ணம் பகுதியின் முன் விளிம்பில் எலும்பு முறிந்துள்ளது என்று கூறினார். இதற்கு சிகிச்சை உண்டா.
தோள்மூட்டு ஒரு பந்து கிண்ணம் போன்றது. சாதாரணமாக தோள்மூட்டு விலகும்போது கிண்ணம் பகுதியில் உள்ள குருத்தெலும்பு உறுப்பு கிழியும். இதற்கு பேன்கார்ட் லெசன் என்று பெயர். உங்களுக்கு ஏற்பட்டது சற்று தீவிரமான வகை. ஏனென்றால் வெறும் குறுத்தெலும்பு கிழிவதற்கு பதிலாக அக்குறுத்தெலும்பு இணைந்திருக்கும் எலும்பே முறிந்துள்ளது. இது போனி பேன்கார்ட் எனப்படும். இவ்வாறு ஏற்படும்போது கிண்ணம் பகுதியின் சுற்றளவில் குறைபாடு ஏற்படும். குறைபாடு 20 சதவீதத்திற்கு மேல் இருந்தால்.
லேட்டர்ஜெட் என்னும் சிகிச்சை செய்தால் சரியாகும். நவீன மருத்துவ உலகில் இதை ஆர்த்ரோஸ்கோப்பி முறையிலேயே சரிசெய்யலாம்.
சிகிச்சைக்கு பின் உங்கள் தோள்மூட்டு விலகாது.
* 62 வயதான நான் 2 வருடங்களாக மூட்டு தேய்மானம் அடைந்து வலியால் அவதிப்படுகிறேன். ஆறு மாதங்களுக்கு முன் மாடிப்படி ஏறும்போது நிலை தடுமாறி விழுந்தேன். எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்ததில், இணைப்பு நார் கிழிந்தது தெரிந்தது. அன்று முதல் வலி மிக அதிகமாக உள்ளது. நான்கு மாதங்களாக எந்த முன்னேற்றமும் இல்லை. என்னுடைய வலி நீங்க சரியான சிகிச்சை என்ன.
மூட்டு தேய்மானம் ஏற்கனவே இருப்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படும் காயங்கள் நிலைமையை மோசமாக்கி வலியை தீவிரப்படுத்தும். தற்போது உங்களுக்கு இருக்கும் நிலையில், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரு உறுதியான நீண்ட கால தீர்வை தரும். மருத்துவரிடம் ஆலோசித்து மேற்கொள்ளவும்.
* நான்கு மாதங்களாக தோள்பட்டை வலியால் அவதிப்படும் 54 வயதான எனக்கு தோள்மூட்டில் உள்ள தசைநார் கிழிந்திருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார். இதுவரை 2 முறை எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்துவிட்டேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு எடுத்த எம்.ஆஸ்.ஐ., ஸ்கேனில் Supraspinatus partial tear என்று குறிப்பிடப்பட்டது. இப்போது Supraspinatus full tear என்று கூறப்பட்டுள்ளது. எனக்கு எந்தவிதமான காயமும் இல்லை. அப்படி இருக்கையில் தசைநார் கிழியுமா. எனக்கு சிகிச்சை உண்டா.
Supraspinatus full tear இருந்தால் கிழிந்த பகுதியை கண்டிப்பாக தைத்தாக வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் கிழிந்த தசைநார் சுருங்கி செயலிழந்து வெகு விரைவில் மூட்டு தேய்மானமும் ஏற்படும். உங்கள் வலியை போக்க உங்களுக்கு உள்ள சரியான சிகிச்சை Arthroscopic rotator cuff repair ஆகும். சிறப்பு பயிற்சி பெற்ற சில மருத்துவர்கள் இதை செய்கின்றனர். சிகிச்சை மேற்கொண்டு பலனடையுங்கள்.
டாக்டர். கே.என்.சுப்பிரமணியன்
மதுரை, 93442 46436
