கனவு தவிர்... நிஜமாய் நில்! - சிசேரியனைத் தொடர்ந்து சுகப் பிரசவம்!
கனவு தவிர்... நிஜமாய் நில்! - சிசேரியனைத் தொடர்ந்து சுகப் பிரசவம்!
PUBLISHED ON : ஜூலை 28, 2019

முதல் குழந்தை, 'சிசேரியன்' மூலம் பிறந்து இருந்தால், அடுத்த குழந்தையும் அதே முறையில் தான் பிறக்க முடியும் என்று பலரும் அச்சப்படுகின்றனர்; அப்படி நடக்காது.
போலியோவால் பாதிக்கப்படும் பெண்ணின் இடுப்பெலும்பு வடிவம் மாறி இருக்கலாம். சிலருக்கு விபத்து நடந்து, இடுப்பெலும்பில் முறிவு ஏற்பட்டு இருக்கும்... இப்படிப்பட்டவர்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும், அது சிசேரியன் மூலமாகத்தான் இருக்கும்.
பிரசவ சமயத்தில், குழந்தையின் கால் முதலில் வெளியில் வரும் சாத்தியம் இருப்பது, பிளசன்டா என்ற, தாய் - சேய் இணைப்புத் திசு, கர்ப்பப்பையின் வாயை முற்றிலும் மூடி இருப்பது போன்ற காரணங்களால், சிலருக்கு சிசேரியன் செய்ய நேரிடலாம். இரண்டாவது பிரசவத்தின்போது இந்தப் பிரச்னைகள் இல்லாமல் இருந்தால், சிசேரியன் அவசியம் இல்லை.
முதல் சிசேரியன் செய்யும் போது, கர்ப்பப்பையின் வாயில் தையல் போட நேரிடலாம். அடுத்த முறை பிரசவ வலி வரும் போது, இந்தத் தையல் அப்படியே இருக்குமா அல்லது விரிந்து போவதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது தான், மகப்பேறு மருத்துவரின் பயம்.
பிரசவ நேரத்தில், கர்ப்பப்பையின் வாய், 7 செ.மீ., வரை விரிந்து கொடுக்கும். எதிர்பாராமல் குழந்தையின் இதயத் துடிப்பு குறைந்து போவது, உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது இது போன்ற நேரங்களில், அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்திருப்போம்.
இதே பெண்ணுக்கு, அடுத்த பிரசவத்தின் போது, கர்ப்பப்பை போதுமான அளவு திறப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், சுகப் பிரசவத்திற்கு முயற்சிக்கலாம்.
டாக்டர் ஜெயஸ்ரீ கஜராஜ்,
மகப்பேறு சிறப்பு மருத்துவர்,
சென்னை.
99406 66793
