PUBLISHED ON : செப் 20, 2015
இந்தியாவில், 3 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் காபி பயிரிடப்பட்டு வருகிறது.
நாட்டின் காபி உற்பத்தி ஆண்டிற்கு, 3 லட்சம் டன்கள். கர்நாடகா மாநிலத்தில் அதிகளவில் காபி பயிரிடப்படுகிறது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வட கிழக்கு மாநிலங்களிலும் காபி பயிரிடப்படுகிறது.
கி.பி., 1600ம் ஆண்டுகளில் இந்தியாவிற்கு ஒரு முஸ்லிம் யாத்ரிகர் மூலம், கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மங்களூர் அருகே பாபுதான் மலையில் பயிரிடப்பட்டது. காபியின் மூலம் அந்நியச் செலாவணியாக இந்தியாவிற்கு ஆண்டுதோறும், 2,000 கோடி ரூபாய் கிடைக்கிறது.
இந்தியாவில் காபி உற்பத்தியில் 70 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காபி பயிர்களில், காபியா அரேபிக்கா மற்றும் காபியா கேளிபோரா என்றும் விஞ்ஞான பெயர் கொண்டு விளங்குகிறது. அரேபிக்கா மற்றும் ரொபாஸ்டா காபி, ரூபியேசியே என்ற குடும்பத்தை சார்ந்தது.
இந்த இரண்டு வகைகள் மட்டுமே, வணிக ரீதியாக பயிரிடப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தற்போது அரேபிக்கா காபியில், 12 ரகங்களும், ரொபாஸ்டா காபியில், 3 ரகங்களும் உள்ளன. காபி குடிப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.
காபி நீண்ட கால பயிராகும். அரேபிக்கா காபி, மார்ச் - ஏப்ரல் மாதங்களில் பூ பூத்து, நவம்பர் - டிசம்பர் மாதங்களில் அறுவடைக்கு வரும்.
ரொபாஸ்டா காபியானது பிப்ரவரி- மார்ச் மாதங்களில், மழை கிடைத்தவுடன் பூ பூத்து, டிசம்பர் - ஜனவரி மாதங்களில் அறுவடைக்கு வரும். நம் நாட்டில், சிறந்த புத்துணர்வு பானமாக, காபி உள்ளது.

