PUBLISHED ON : ஜன 15, 2012

'தானே' புயலால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில், காலரா தொற்று இருப்பதாக, அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தொற்று பரவாமல் இருக்க, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தால், நம்மையும், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் காப்பாற்றலாம். ''காலராவை தடுக்க தண்ணீரை காய்ச்சி குடிப்பதே தீர்வு,'' என்று கூறுகிறார், மதுரை அரசு மருத்துவமனை டாக்டர் ஜெ.சங்குமணி. அவர் கூறியதாவது:
காலரா என்ற வயிற்றுப்போக்கு நோய், 'விப்ரியோ காலரே' என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. குழந்தைகள் முதல், முதியோர் வரை பாதிக்கும் தன்மை கொண்டது. இந்த கிருமி உள்ள தண்ணீர் மற்றும் உணவுப் பண்டங்களை சாப்பிடுவதால், வயிற்றுப்போக்கு ஏற்படும். சமைத்த உணவை, இந்நோய் தொற்றுள்ளவர்கள் தொட்டிருந்தாலும், மற்றவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம். வெயில் காலத்தில் தண்ணீர் மாசுபடுவதால், இந்நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல மழைக் காலங்
களில் தேங்கிய தண்ணீரால், இந்த பாதிப்பு ஏற்படலாம். எனவே, வாட்டர் கேம்ஸ், வாட்டர் பிளான்டுகளில் இக் கிருமியின் பாதிப்பு இருந்தால், அதை பயன்படுத்துவோரையும் இது பாதிக்கும். அதே சமயம், கொசுக்களுக்கும் இந்நோய்க்கும் சம்பந்தமில்லை.
பாதிப்பு: இக்கிருமி தொற்றிய உணவையோ, தண்ணீரையோ எடுத்த, 6 மணி நேரம் முதல், 5 நாட்களுக்குள், அவருக்கு பாதிப்பு ஏற்படும். இந்நிலையில் மலம், தண்ணீர் போல அடிக்கடி வெளியேறும். உடலின் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறி, உடல் சோர்ந்து பலகீனமாகும். சிறுநீரகமும் பாதிக்கும். அதிக வாந்தியும் ஏற்படும். கால் இழுத்துக் கொள்வது போல இருக்கும். கண்கள் உள்ளே போகும். ரத்த அழுத்தம் குறையும். இதய துடிப்பு அதிகமாகும். உடல் எடை குறையும். உப்புச்சத்து அதிகம் வெளியேறினால், உயிருக்கே ஆபத்தாக முடியலாம். இதை தடுக்க ஆன்டிபயாடிக் மருந்துடன், 'எலக்ட்ரால்' போன்ற உப்புக் கரைசல் தண்ணீரை, பாதிக்கப்பட்டோருக்கு தரவேண்டும்.
வராமல் தடுக்க: கொதிக்க வைத்து ஆறிய குடிநீரையே, குடிக்க வேண்டும். நீரை கொதிக்க வைத்தும், உணவை சமைத்தும், பழங்களின் தோலை உரித்தும் சாப்பிட வேண்டும். குளோரின் கலந்த நீரை குடிக்கலாம். சாதாரண நீரில் தயாரான, தரமற்ற ஐஸ்கிரீம்களை தவிர்க்க வேண்டும். பச்சை உணவு வகைகளையும், தெருவில் விற்கும் பண்டங்களையும், குளிர்பானங்களையும் சாப்பிடக் கூடாது. வரும் முன் காப்பதற்கு, 'ஓரல் வேக்சின்' (வாய்வழியாக எடுத்துக் கொள்ளும் மருந்து) உள்ளது. இவ்வாறு சங்குமணி கூறினார்.
