ரத்தத்தில் சர்க்கரை அளவுரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் ஆபத்தா?
ரத்தத்தில் சர்க்கரை அளவுரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தால் ஆபத்தா?
PUBLISHED ON : ஜன 15, 2012

இதய நோய் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு, மிகவும் குறைவதை தவிர்த்தாக வேண்டும். அதாவது வெறும் வயிற்றில், 130 மி.கி., சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து, 180 மி.கி., என்ற அளவில் இருந்தால் போதும். இதைவிட குறைந்தால், அது இதயத்தை மிகவும் பாதிக்கும்
என் வயது 41. அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. ஜெலுசில் மருந்தை அடிக்கடி குடிக்கிறேன். நன்றாக இருப்பதாக உணர்கிறேன். இது சரியா?
ஆர்.சுந்தரேசன், மதுரை
நெஞ்சு எரிச்சல் என்பது ஒரு பொதுச் சொல். இது இதயத்தாலோ, உணவுக் குழாயாலோ, வயிற்றாலோ ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, முதலில் இது எதனால் ஏற்படுகிறது என கண்டறிவது அவசியம். இதயத்தை பொறுத்தவரை, எக்கோ மற்றும் டிரெட் மில் பரிசோதனை செய்வது அவசியம். அதன் முடிவு நார்மலாக இருந்தால், இதயமும் நார்மலாக இருப்பதாக பொருள். உணவுக் குழாய் மற்றும் வயிற்றுப் பகுதியை பொறுத்தவரை, எண்டாஸ்கோபி மற்றும் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையை செய்தால், நெஞ்சு எரிச்சல் எதனால் ஏற்படுகிறது என அறியலாம். அதற்கேற்ப சிகிச்சையும் அமையும். உள்ளே இருக்கும் நோய் என்ன என்று தெரியாமல், ஜெலுசில் போன்ற Antacids மருந்தை எடுப்பது தவறு.
எனக்கு மூன்று ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்கு Atenolol என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். தற்போது என் டாக்டர், Nebivolol மாத்திரையை தந்துள்ளார். இதை தொடர்ந்து எடுக்கலாமா?
வி.சங்கரபாண்டியன், காரைக்குடி
தற்போதுள்ள நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி ரத்தக் கொதிப்புக்கு, Atenolol மருந்தை தவிர்த்தாக வேண்டும். ஏனெனில், அதனால் கிடைக்கும் நன்மைகளை விட, அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகமாக உள்ளன. Nebivolo ரத்தக்கொதிப்புக்கு நல்ல மாத்திரை. இது ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்துவதுடன், இதய துடிப்பையும் சீராக்குகிறது. குறிப்பாக முதியோருக்கு மிகச்சிறந்த மாத்திரை. எனவே, இதை தாராளமாக நீங்கள் தொடர்ந்து எடுக்கலாம்.
நான் இரண்டு ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையாக உள்ளேன். திடீரென மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. பரிசோதனை செய்து பார்த்ததில், Cardio myopathy உள்ளதாக வந்துள்ளது. நான் என்ன செய்வது?
டி.குமாரசாமி, சிவகாசி
'ஆல்கஹால்' (மது) என்பது விஷத்திற்கு ஒப்பானது. இது பல வழிகளில் உடலை பாதிக்கும். குறிப்பாக கல்லீரல், கணையம், வயிறு, மூளை, இருதயத்தையும் பாதிக்கிறது. இதயத்தை பொறுத்தவரை ரத்தக்குழாயை அது பாதிக்காவிட்டாலும், இதய தசை பலூன் போல வீங்கிக் கொண்டு, அதன் பம்பிங் திறனை பாதிக்கிறது. எனவே, உடனே நீங்கள் மதுப்பழக்கத்தை முற்றிலும் தவிர்த்தாக வேண்டும். இத்துடன் நீங்கள் குடிக்கும் நீரின் அளவையும், உப்பின் அளவையும் குறைத்து, மருந்தையும் வேளை தவ றாது எடுத்தால், இதயத்தின் பம்பிங் திறன் முன்னேற வாய்ப்பு உள்ளது.
எனக்கு கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. ஆறு தற்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு, அடிக்கடி, 100 மி.கி.,க்கு கீழ் குறைந்து விடுகிறது. நான் என்ன செய்வது?
எஸ்.பாலுச்சாமி, கோவை
இதய நோய் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைவதை தவிர்த்தாக வேண்டும். அதாவது வெறும் வயிற்றில் 130 மி.கி., சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து, 180 மி.கி., என்ற அளவில் இருந்தால் போதும். இதைவிட குறைந்தால், அது இதயத்தை மிகவும் பாதிக்கும் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, ரத்தத்தில் HbA1C 7.0 என்ற அளவில் இருந்தால் போதும். உங்கள் டாக்டரிடம் சென்று நீங்கள் எடுக்கும் சர்க்கரை மாத்திரையின் அளவை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை
