தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/சிறுநீர் தடைபட்டால் அவதி தான்!

சிறுநீர் தடைபட்டால் அவதி தான்!

சிறுநீர் தடைபட்டால் அவதி தான்!


PUBLISHED ON : ஜன 08, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிறுநீர் தடைபட்டு உருவாகும் வியாதிகள், ஆயுர்வேத மருத்துவத்தில், 'மூத்ராகாதம்' என, அழைக்கப்படும். இதில், 13 வகைகள் உண்டு.

சிறுநீர் தடைபட்டு நோய்கள் உருவாக, பல காரணங்கள் உள்ளன. இயற்கையின் வேகங்களான மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்குவது, வேகமான வாகனங்களில் நீண்ட பயணம் செய்வது, மிகவும் வறட்சியான வாயுவை, சீற்றமடைய வைக்கும் உணவுகளை உண்பது, கடுமையான உடலுழைப்பு, ஜீரண சக்தி குறைதல், உட்கொண்ட உணவு அஜீரணமான நிலையில், மேலும், மேலும் உணவை உட்கொள்வது, வீரியம் மிகுந்த தீக்ஷணமான மருந்துகளைப் பயன்படுத்துவது ஆகியவை, உடலில் வாயுவைச் சீற்றமடைய வைத்து, சிறு நீரைத் தடைசெய்யும்.

வாணி என்ற, 35 வயது நிறைந்த பெண், சிறுநீர் தடை பாதிப்புடன், சஞ்சீவினி, ஆயுர்வேத வைத்திய சாலையை நாடி வந்தார். இங்கு வரும் முன், அவருடைய நிலை, கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தது:

சிறுநீர் கழிக்கச் சென்றால், ஒவ்வொரு முறையும், மிகக் குறைந்த அளவே வெளியேறும். கழிப்பறையில், வெகு நேரம் காத்திருப்பார். அப்படியும், சிறுநீரை பலவந்தமாகத்தான் வெளியேற்ற முடிந்தது. ஒரு சில நாட்களில், வாணியின் நிலை கவலைக்குரியதாயிற்று. பலவந்தமாக சிறுநீர் கழிக்க முயன்ற போது, ஆசன பகுதியில் வலியும் ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் வாணி, எங்களிடம் வந்தார். வாணியின், இந்த நிலைக்கு காரணம் என்ன என, ஆராய்ந்தோம். வாணிக்கு, இதற்கு முன் செய்யப்பட்ட சிகிச்சைகளின் பக்க விளைவுகளே, இந்த நோயை உருவாக்கியது என்பது தெரியவந்தது.

மருந்தின் பக்க விளைவே

சில மாதங்களுக்கு முன், வாணியை, சிக்-குன் குனியா ஜுரம் தாக்கியது. அதற்கு, வலி மாத்திரைகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகள், ஜுரத்தைக் குறைக்கும் மருந்துகளை எடுத்தார். இதையடுத்து அவருக்கு, ஜீரணசக்தி பாதிக்கப்பட்டது. வயிற்றுக் கோளாறினால், வாந்தி எடுக்கத் துவங்கினார். வாந்தியில், சிறிது ரத்தமும் வந்தது. பிறகு அவருக்கு, அதிக அளவு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்த, 'லோமோட்டில்' என்ற மருந்தும், எலக்ட்ராலும் பேதியைக் கட்டுப்படுத்தும் மருந்துகளாக உட்கொண்டிருக்கிறார்.

ஆனால், வயிற்றுப்போக்கு முழுமையாக கட்டுப்படவில்லை. அவர் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம், சிறிது மலமும் சேர்ந்து கழித்தார்.

இதற்கு மருத்துவர்கள், அவருக்கு வயிற்றில் தொற்று இருப்பதாக கணித்து, மீண்டும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்தினார். இதன் பிறகு அவருக்கு, சிறுநீர் கழிப்பது கடினமாகியது. சிறுநீரை முக்கி வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. அப்போது அவரைப் பெண் வைத்தியரிடம் அனுப்பி, அவருக்கு Pelvic infection என கணித்து, மிகக் கடுமையான வீரியம் மிகுந்த, ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பயன்படுத்தினர்.

இது போன்ற தீக்ஷணமான மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தியதன் பக்க விளைவாக, அவருக்கு, சிறுநீர் தடை ஏற்பட்டு சிறுநீரை முக்கி வெளியேற்றும் நிலை ஏற்பட்டது.

சிறுநீரின் தடைக்கு காரணம் ஆராயும் முயற்சியில், அவருக்கு ஸ்கேன் மற்றும் அனேக பரிசோதனைகள் செய்யப்பட்டு, இறுதியில் Cystoscopy என்ற சிகிச்சை முறையை செய்ய வலியுறுத்தினார்.

இந்த நிலையில், வாணி ஆயுர்வேத சிகிச்சையை நாடி வந்தார்.

இவருக்கு, 'மூத்திர அதீத' என்ற வியாதி, இவரைத் தாக்கியுள்ளதாக கணிக்கப்பட்டு, முறையாக வைத்தியம் துவங்கியது. சஞ்சீவனி வைத்திய சாலையில் நோயாளியைத் தங்கவைத்து, சிறுநீர் தடையை அகற்ற சிகிச்சை துவங்கியது. சிறுநீரைச் சரிவர இயக்க உதவும் நெய் மருந்துகள், எண்ணைக் குளியல், கஷாய மருந்துகள், மருந்து தைலங்கள் உதவியுடன், வஸ்தி என்னும் எனிமா சிகிச்சை, சிறுநீரகப் பைக்குள் மருந்து தைலங்களை ஏற்றும் உத்தர வஸ்தி என்ற சிகிச்சை, இடுப்புக்குக் கீழ்ப் பகுதியில், வாயுவின் போக்கைச் சீர் செய்யும், கஷாய மருந்துகளால், வேது செய்வது போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

படிப்படியாக வாணியின் சிறுநீர் நன்றாக வெளியேறியது. முறையாக ஆயுர் வேத சிகிச்சை பின்பற்றியதின் விளைவாக, அவர் ஒரு பெரிய வியாதியிலிருந்து தப்பினார்.

சில வேளைகளில் நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் தீக்ஷணமான மருந்துகளின் விளைவாக, வேறு பல வியாதிகள் உருவாகின்றன. மருந்துகளின் பக்க விளைவுகளால் உருவாகும் வியாதிகள், 'அயட்ரோஜெனிக் டிசீஸ் (iatrogenic disease)' என அழைக்கப்படும்.

அறுவை சிகிச்சைகள், உடலுக்குள் கருவி செலுத்தி செய்யப்படும் பலவித பரிசோதனைகள், தவறான சிகிச்சைகள், ஒரே நேரத்தில் எடுக்கும், இரண்டு மருந்துகளின் சேர்க்கையினால் உண்டாகும் விளைவுகள் ஆகியவற்றால், நோய்களும், இறப்பும் (iatrogenic diseases / death) ஏற்படுகின்றன.

- டாக்டர் கிரிஜா,
சஞ்சீவனி ஆயுர்வேத யோகா மையம்,
சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us