
பழங்கள், காய்கறிகள் எவ்வளவு 'பிரஷ்'ஆக, விலை உயர்ந்ததாக இருந்தாலும், ஜூஸரில் போட்டு பிழியும்போது, அதிலுள்ள வைட்டமின்களையும் தாதுக்களையும் சேர்த்தே ஜூஸர் அரைத்து விடுகிறது. பிழிந்தெடுத்த பழ, காய்கறிச் சாற்றில், கொஞ்ச நஞ்சம் மிஞ்சும் நார்ச்சத்தும், அதன் இயல்புத் தன்மையை இழந்துவிடும். பறித்த காய்கறி, பழங்களின் மேல் தோலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து ஆக்சிடேஷன் என்ற வேதி மாற்றத்திற்கு உட்படும். 'பிரஷ்' ஆகப் பறித்த பழங்களை சாப்பிட்டால், இந்த வேதி மாற்றம் நம் உடலுக்குள் நடந்து, அதில் உள்ள சத்துக்கள் முழுமையாக பலன் தரும். இன்னொரு விஷயம், பழங்களை கடித்து மென்று சாப்பிடும்பொழுது, அதில் உள்ள நார்ச்சத்துக்கள் பற்களுக்கு இடையில் உள்ள துகள்களை சுத்தம் செய்து, பல் சொத்தையிலிருந்து பாதுகாப்பு தரும். இனி பழத்தையும், காய்கறிகளையும் பிழிந்து, கலர் கலராக வெறும் தண்ணீரை குடிக்காமல், அப்படியே சாப்பிடலாம்.
டாக்டர்.திவாகர்,ஊட்டச்சத்து நிபுணர்

