PUBLISHED ON : ஜூன் 01, 2016

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது?
ரத்த நாளங்களில் ரத்தம் உறையும் பொழுது, இதயம் மற்றும் மூளைக்கு செல்லும் ரத்தம் குறைகிறது அல்லது முற்றிலுமாக தடைபடுகிறது. இதனால், இதயம் மற்றும் மூளையின் செயல்பாடு குறைந்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுகிறது.
குளோப்பிடோகிரல் என்ற மருந்தை ஏன் மாரடைப்பு மற்றும் பக்கவாத நோயாளிகளுக்கு பரிந்துரைக்கிறார்கள்?
குளோப்பிடோகிரல், நம் இரத்த நாளங்களில் இரத்தம் உறைவதை தடுக்கிறது.
குளோப்பிடோகிரல் எவ்வாறு செயல்படுகிறது?
மருந்து, கல்லீரலை அடைந்து அங்கிருக்கும் CYP2C19 எனும் நொதியால் (என்சைம்) செயல்நிலைக்கு வருகிறது. செயல்வடிவம் பெற்ற குளோப்பிடோகிரல், தட்டணுக்களில் செயல்பட்டு, ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதை தடுக்கிறது.
குளோப்பிடோகிரல் மருந்து அனைவருக்கும் ஏற்றதா?
அனைவருக்கும் ஏற்றது என்று கூற இயலாது. சிலருக்கு முழுமையாகவும் வேறு சிலருக்கு குறைந்த அளவிலும் பயன் தரலாம். முற்றிலும் பலன் தராமலும் போகலாம்.
குளோப்பிடோகிரல் மருந்தால் பின்விளைவுகள் ஏற்படுமா?
கல்லீரலின் செல்லில் சுரக்கும் CYP2C19 நொதி முழுமையாக செயல்படும் போது குளோப்பிடோகிரல் முழுமையான பலன் தரும். பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.
குளோப்பிடோகிரலின் பயன்பாடு சீரற்று இருந்தால் ஏற்படும் பின்விளைவுகள்?
கல்லீரலின் செல்லில் சுரக்கும் CYP2C19 நொதியின் செயல்பாடு பாதியாகவோ அல்லது அதற்கும் குறைவாகவோ இருந்தால் குளோப்பிடோகிரலின் பயன்பாடும் நொதியின் தன்மைக்கேற்ப குறைந்துவிடும். இதனால், குளோப்பிடோகிரலின் பயன்பாடு முழுமையாக கிடைக்காது. இரத்த நாளங்களில் மீண்டும் இரத்தம் உறைந்து மாரடைப்போ பக்கவாதமோ நிகழ அதிக வாய்ப்புள்ளது.
குளோப்பிடோகிரல் பலன் முழுமையாக இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?
அனைத்து வகை நொதிகளும் அந்தந்த நொதி சார்ந்த மரபணுவால் உற்பத்தி செய்யப்படுகிறது. CYP2C19 நொதியும் CYP2C19 என்கிற மரபணுவால் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே CYP2C19 மரபணுவை பரிசோதனை செய்வதன் மூலம் குளோப்பிடோகிரல் முழுமையான பயன் தருமா என்று கண்டுபிடித்துவிடலாம்.
மருத்துவர்கள் இம்மரபணு பரிசோதனையை ஏன் பரிந்துரைப்பதில்லை?
நோயாளிகளின் ரத்த மாதிரிகளை வெளி தேசத்திற்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்ப வேண்டியிருந்தது. இதனால் முடிவுகள் வர காலதாமதம் ஆவதோடு செலவும் அதிகம். தற்போது இந்த வகை மரபணு பரிசோதனைகளை சென்னையிலேயே செய்து கொள்ளலாம்.
தற்போது குளோப்பிடோகிரல் மருந்தை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளும் இப்பரிசோதனையை செய்து கொள்ளலாமா?
கட்டாயம் செய்து கொள்ளலாம்.
இதற்காக ஆகும் செலவு எவ்வளவு?
பரிசோதனை முடிவுகள் வருவதற்கு, 3 அல்லது 4 நாட்கள் ஆகலாம். 1,700 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை செலவாகும்.
- டாக்டர் அரவிந்த் ராமநாதன்,
மரபணு ஆய்வாளர், மனித மரபணுவியல் துறை,
ஸ்ரீ பாலாஜி பொது மற்றும் பல் மருத்துவக் கல்லுாரி,
சென்னை.

