தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/இயற்கை உணவு சாப்பிட்டாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!

இயற்கை உணவு சாப்பிட்டாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!

இயற்கை உணவு சாப்பிட்டாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்!


PUBLISHED ON : நவ 19, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 19, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொற்று நோய்களுக்கு இயற்கை மருத்துவத்தில் உடனடி நிவாரணம் உள்ளதா?

உடலில் ஏதாவது தொற்று ஏற்பட்டால், அதை வெளியேற்ற, உடல் முயற்சிக்கும். இதன் அறிகுறி தான் காய்ச்சல். அலோபதி மருந்துகள், குறிப்பாக, ஆன்டி பயாடிக் மாத்திரைகள், கிருமிகளை அழிக்கிறதே தவிர, அதன் மூல காரணத்தை அழிப்பதில்லை. அதனால் தான், எவ்வளவு தான் ஆன்டி பயாடிக் மருந்துகள் சாப்பிட்டாலும், குறிப்பிட்ட இடைவெளியில், காய்ச்சல், சளி தொந்தரவு வந்தபடி உள்ளது.கழிவுகள் உடலினுள் தங்கி, எதிர்ப்பு சக்தி இல்லை என்ற நிலையிலேயே, தொற்று ஏற்படுகிறது. சளியை வெளியேற்ற இருமல், சுவாச குழாயில் படிந்த மாசை வெளியேற்ற, தும்மல் வருகிறது. ஆனால், தும்மல், இருமல் வராமல் இருக்க மருந்து சாப்பிட்டு, கழிவுகளை உள்ளேயே வைக்கிறோம். இயற்கை மருத்துவத்தில், கபத்தை வெளியேற்றுவதோடு, இயற்கையான முறையில் கிருமிகளும் அழிகின்றன.

இந்த பருவத்தில் தொற்று அதிகம் ஏற்பட என்ன காரணம்?

புரட்டாசி மாதம் துவங்கி, அடுத்து வரும் நான்கு மாதங்களுக்கு, வெயில், மழை, குளிர், பனி என்று மாறி மாறி இருப்பதும், சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகம் உள்ளதும், கிருமிகள் வளர்வதற்கான முக்கிய காரணம்.வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமிகளின் பாதிப்பால், காய்ச்சல், சளி, தொண்டை வலி, சுவாச பிரச்னைகள், தலைவலி, கண்களை சுற்றி பாரமாக உணர்வது, வயிற்றுப்போக்கு, தோல் ஒவ்வாமை போன்ற பல பிரச்னைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் வரும். இந்த பருவத்தில், இது இயல்பான ஒன்று தான். சில நேரங்களில் வெயிலும் இருக்காது; மழையும் இருக்காது. இதுபோன்ற சூழலில், கிருமிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். டெங்கு, சிக்குன் குனியா, டைபாய்டு போன்ற வைரஸ் தொற்றுகளும், அதிகம் இருக்கும்.

தவிர்க்க வழி முறைகள் என்ன?

நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவுகளை சாப்பிடுவதாலும், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதாலும், நோய் தொற்றிலிருந்து தப்பிக்கலாம். தினமும் குறைந்தது, 40 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பதும், காற்று, வெளிச்சம் வரக் கூடிய அமைப்பில், வீடு இருப்பதும் முக்கியம். மழைக்காலம் வரும் முன், சில விஷயங்களை செய்ய ஆரம்பித்தால், இதுபோன்ற தொற்றுகளில் இருந்து தப்பிக்கலாம்.

எதிர்ப்பு சக்தி தரும் இயற்கை உணவுகள் எவை?

மஞ்சள். குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ள இதனை, கால் டீஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து குடித்தால் போதும். 10 வயதிற்குட்பட்ட குழந்தை என்றால், கால் டம்ளர் போதும். இஞ்சி - நெல்லி சாறுடன், சிறிது புதினா சாறு, உப்பு, மிளகு துாள் போட்டு குடிக்கலாம். செரிமான சக்தியும் அதிகரிக்கும். இத்துடன், பப்பாளி இலையையும் அரைத்து கொடுக்கலாம்; தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கால் டீஸ்பூன் பட்டை துாளை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து குடிப்பதால், தொண்டை புண், சுவாச கோளாறு சரியாகும். வெந்தயம் முளைக்கட்டி சாப்பிட்டால், கிருமி தொற்று நீங்கும். வாரத்திற்கு ஒரு நாள், சிறிது வேப்பங்கொழுந்து, சிறிது மிளகு சேர்த்து அரைத்து அப்படியே சாப்பிடலாம்.ஐந்தாறு துளசி இலையை, ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து, தினமும் காலையில் குடிக்கலாம்.

சளி, காய்ச்சல், முற்றிய நிலையில் இயற்கை நிவாரணம் என்ன?

ஒரு டம்ளர் தண்ணீரில், கால் டீ ஸ்பூன் சீரகம், தலா, இரண்டு சிட்டிகை மிளகு துாள், மஞ்சள் துாள், ஓர் ஏலக்காய், ஒரு லவங்கம் ஆகியவற்றை கொதிக்க வைத்து, இறக்கும் நேரத்தில், துளசி இலைகளை சேர்த்து, ஆற வைத்து குடிக்கலாம். வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது.

டாக்டர் ஒய்.தீபா,

துறை தலைவர், அரசு இயற்கை மருத்துவ கல்லுாரி,

அரும்பாக்கம், சென்னை.

99628 22500

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us