PUBLISHED ON : நவ 24, 2013
வயதான தம்பதியர், மழை மற்றும் குளிர்காலத்தில் பிரச்னைகள் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?
பொதுவாக ஆஸ்துமா, சி.ஓ.பி.டி., நோய், நிமோனியா, ஸ்வைன்புளு என்ற பன்றிக்காய்ச்சல் போன்ற நுரையீரல் நோய்கள் குளிர்காலங்களில் நம்மை அதிகம் பாதிக்கும். இதில் இருந்து தப்பிக்க குளிர்காலங்களில் உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மழையில் நனையக் கூடாது. குளிர்ச்சியான பொருட்களை உபயோகிக்கக் கூடாது. பழைய சாதம் சாப்பிடக்கூடாது. பிரிஜ்ஜில் வைத்திருக்கும் பொருட்களை சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். நீண்டநாள் வைத்த பொருட்களை சாப்பிடக் கூடாது. அதிக நெரிசல் உள்ள இடங்களுக்குச் செல்லக் கூடாது. ஏனெனில் அதிக மக்கள் இருக்கும் இடத்தில் பன்றிக் காய்ச்சல் எளிதில் பரவும். புகைபிடிப்போர், மழைக்காலங்களில் அதிகம் புகைப்பர். அது மிகத் தவறு. புகைப்பதை நிறுத்த வேண்டும்.
ஏற்கனவே மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருப்பவர்கள், அதை சரியான நேரத்திற்கு எடுக்க வேண்டும். உணவுப் பொருட்களை சரியான நேரத்தில் மிதமான சூட்டில் எடுக்க வேண்டும். சுத்தமான சுற்றுச்சூழல், ஆரோக்கியமான உணவு, மாசு இல்லாத காற்று இவைதான் உங்கள் நுரையீரலை நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
கிராமத்தில் வசிக்கும் வயதான, ஆஸ்துமா பாதிப்புள்ள தாய், தொந்தரவு அதிகரிக்கும்போது 'நரம்பு ஊசி' (டெரிபிலின்) போட்டுக் கொள்கிறார். இதனால் பிரச்னை வருமா?
பொதுவாக கிராமங்களில் மட்டுமின்றி, நகரங்களிலும்கூட இளைப்பு அதிகமாகும்போது, இந்த 'டெரிபிலின்' ஊசியை பயன்படுத்துகின்றனர். இது சரியான சிகிச்சை கிடையாது. ஆஸ்துமாவிற்கு 'இன்ஹேலர்கள்' தான் சரியான தீர்வு. ஐம்பது ஆண்டுகளாக பெரிய மருத்துவமனைகளில் இந்த 'டெரிபிலின்' உபயோகிப்பதை நிறுத்தி விட்டனர். 'டெரிபிலின்' தொடர்ந்து உபயோகித்தால் படபடப்பு, வயிற்று எரிச்சல், கைநடுக்கம், சீரற்ற இருதய துடிப்பு ஏற்படும். இதனால் உயிருக்குகூட ஆபத்தாக முடியலாம்.
ரத்தத்தில் உள்ள 'டெரிபிலின்' அளவை பார்த்துத்தான் இதை உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் சிக்கலான பின்விளைவை ஏற்படுத்தும். எனவே 'டெரிபிலின்' போடாமல் இருப்பது நல்லது. ஆஸ்துமாவிற்கு தொடர்ந்து சரியான 'இன்ஹேலரை' எடுத்தால் பிரச்னைகள் வராது. இளைப்பு மிக அதிகமானால் 'நெபுலைசர்' கொடுக்கலாம்.
ஒரு வயது குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல். இருவாரங்கள் மருந்து எடுத்தால் போதும் என தெரிவித்து இருந்தீர்கள். எங்கள் டாக்டரோ, ஒரு மாதம் வரை மருந்துகள் எடுக்க வேண்டும் என்கிறார். அவர் சொல்வது சரியா?
பொதுவாக 10 முதல் 14 நாட்கள் வரை மருந்துகள் எடுத்தாலே நிமோனியா சரியாகும். நிமோனியா காய்ச்சலில் பல வகை உண்டு. நோய்க்கு காரணத்தை பொருத்து, அதற்கான மருத்துவமும் மாறுபடும். பொதுவாக 'ஸ்டேபிலோகோகஸ்' நிமோனியா எனச்சொல்லப்படும் நிமோனியா மிக வீரியமுள்ளது. இவை நுரையீரலை மட்டும் பாதிக்காமல், நிமோட்டாசெல் என்ற காற்றுப்பைகளை நுரையீரலுக்குள் உருவாக்கும்.
அத்துடன் இந்த வகை நிமோனியா நுரையீரலுக்குள் நிரந்தரமான தழும்புகளைக் கூட உண்டுபண்ணும். இதில் கடுமையான காய்ச்சல்கூட ஒரு மாதம் வரை இருக்கும். இதனால் நிறைய தொந்தரவுகள் ஏற்படும். இதுபோன்ற நிமோனியா காய்ச்சலுக்கு ஒரு மாதம் வரை மருந்துகள் எடுக்க நேரிடும். உங்கள் குழந்தையை பாதித்தது 'ஸ்டேபிலோகோகஸ்' நிமோனியாவாக இருக்கலாம். அதனால்தான் உங்கள் டாக்டர், ஒருமாதம் வரை மருந்து கொடுத்து இருப்பார். நீங்கள் கட்டாயமாக ஒருமாதத்திற்கு மருந்துகள் கொடுக்க வேண்டும்.
- டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425-24147
