தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல!

திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல!

திருமணம் செய்ய, குழந்தை பெற வலிப்பு நோய் ஒரு தடையல்ல!


PUBLISHED ON : டிச 01, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 01, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வலிப்பு நோய்க்கு மாந்திரீகமோ, காத்து கருப்போ காரணம் அல்ல; சர்க்கரை நோய்; ரத்த அழுத்தம் போன்று, அதுவும் ஒரு நோய் தான். வலிப்பு நோய் வந்தால், குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது என்பதெல்லாம் முட்டாள்தனம்.

1. வலிப்பு நோய் என்றால் என்ன?

வலிப்பு நோயை, காக்காய் வலிப்பு என்று, மக்கள் அழைக்கின்றனர். இது, மூளை சம்பந்தப்பட்ட நோய். மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும், மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்து பாகங்களும் ஒரு முகமாக, ஒரே நேரத்தில் இயக்கப்படுவதால், வலிப்பு வருகிறது.

2. இதற்கான அறிகுறிகள் என்ன?

நினைவிழந்து கை, கால், முகம் வெட்டி இழுத்தல், திடீரென சுய உணர்வின்றி கவனம் இழத்தல், நினைவிழந்து நின்ற இடத்திலேயே விழுதல், சிறிது நேரத்திற்கு மாறுபட்ட வினோத நடத்தைகள் செய்தல், சில நிமிடங்கள் கண் இமைக்காமல் விழித்தல், வாய் மெல்லுதல், உமிழ்நீர் துப்புதல், கைகளை பிசைதல் போன்ற, அறிகுறிகள் வரலாம்.

3. வலிப்பு நோய்க்கான காரணங்கள்?

மூளையில் அடிபடுதல், மூளைக் காய்ச்சல், மூளையில் கட்டி, நாடா புழுக்களால் ஏற்படும் கட்டிகள், காசநோய் கட்டி, கேன்சர் கட்டி, மூளைக்கு ரத்தம் குறைவாக செல்லுதல், சத்து மாற்றங்கள் (சர்க்கரை, உப்பு, அமிலங்கள்) மற்றும் பிரசவத்தின் போது குழந்தைக்கு ஏற்படும் சுவாச அடைப்பு போன்றவை, இதற்கு காரணம். எவ்வித காரணம் இல்லாமலும், வலிப்பு நோய் வரலாம்.

4. இதற்கான சிகிச்சை முறைகள் என்ன?

பெரும்பாலான வலிப்பு வகைகளை குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியும். இதற்கான மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கின்றன. டாக்டரின் பரிந்துரைப்படி, தேவைப்படும் வரை, மாத்திரைகளை தேவையான அளவிற்கு தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

5. சிகிச்சைக்கான காலம் ஏதும் உண்டா?

பாதிப்பின் தன்மையைப் பொறுத்து மூன்று, ஐந்து ஆண்டுகள் வரை மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். சிலருக்கு நீண்ட காலம் தேவைப்படலாம். மாத்திரைகளை விட்டு விட்டு சாப்பிடுவதால் வலிப்பை கட்டுப்படுத்த முடியாது; அது தொடர் வலிப்பாகவும் மாறிவிடும்.

6. வலிப்பு நோய் உள்ள பெண்களுக்கு அறிவுரை...

திருமணம் செய்யவோ, குழந்தை பெறுவதற்கோ வலிப்பு நோய் ஒரு தடையல்ல. பிரசவ காலங்களில், டாக்டரின் ஆலோசனைப்படி தகுந்த சில வலிப்பு மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். டாக்டர்களின் ஆலோசனையின்றி, எந்த மருந்துகளையும் உட்கொள்ளக் கூடாது. வலிப்பு நோய் உள்ளோர், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டக் கூடாது என்பது முட்டாள்தனம்.

7. வலிப்பு வரும்போது என்ன செய்ய வேண்டும்?

பதட்டப்படாமல் நோயாளியை அமைதியாக கையாள வேண்டும். நோயாளியை ஒரு பக்கமாக, படுக்க வையுங்கள். இதனால் வாயில் அதிகமாக தோன்றும் உமிழ்நீர், நுரை போன்றவை வெளியேறுவது, சுலபமாகும். இதனால், சுவாசத்திற்கு எந்த பாதிப்பும் வராது. நோயாளியின் அருகில் உள்ள பொருட்களை, அகற்ற வேண்டும். இது, நோயாளி அப்பொருட்களின் மேல் முட்டி அடிபடுவதைத் தவிர்க்கும். சிறு தலையணை, துணி மடிப்புகளை, தலைக்கடியில் வைக்கவும். அடிபட்டிருந்தாலோ, வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீட்டித்தாலோ, நிற்காமல் திரும்பத் திரும்ப வந்தாலோ, ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

8. என்னவெல்லாம் செய்யக் கூடாது?

நோயாளியைச் சுற்றி கூட்டமாக நிற்கக் கூடாது; காற்றோட்டமான சூழல் மிக அவசியம். வாயில், பற்களுக்கிடையில் எப்பொருளையும் வைக்கக்கூடாது. கையில் சாவி, கூரான பொருட்கள் தருவதைத் தவிர்க்க வேண்டும். முழு சுய நினைவு வரும் வரை, குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக்கூடாது.

9. வலிப்பு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

தினமும், ஏழு மணிநேரம் முதல் எட்டு மணி நேரம், நன்றாக தூங்க வேண்டும். அதிக உணர்ச்சி வசப்படக் கூடாது. தொடர்ச்சியாக, அருகில் அமர்ந்து, 'டிவி' பார்க்கக் கூடாது. வேளை தவறாமல் உணவு சாப்பிட வேண்டும். பசியோடு இருப்பது கூடாது. புகைத்தல், மது அருந்தக் கூடாது.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களைப் போல, வலிப்பும் ஒரு நோய் தான். இது மாந்திரீகத்தாலோ, காத்து கருப்பாலோ வருவதல்ல. மூளை நரம்புகளின் மாறுபட்ட இயக்கத்தால் வருவது. இதற்கு மருத்துவ சிகிச்சை உண்டு. நோயாளிகள் சீராக மருந்து சாப்பிட்டு, தக்க வாழ்க்கை முறையைக் கடைபிடித்து வலிப்பு வராமல் தடுத்து அச்சமின்றி வாழலாம்.

டாக்டர் கே.பானு,

மூளை நரம்பியல் துறை பேராசிரியர்,

சென்னை மருத்துவக்கல்லூரி,

சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us