தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/அரிப்பும் அறிகுறியே

அரிப்பும் அறிகுறியே

அரிப்பும் அறிகுறியே


PUBLISHED ON : மார் 26, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 26, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் உடலுக்குள், ஒவ்வாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால், நம்மை எச்சரிக்க செய்வது அரிப்பு. உடலியல் ரீதியில், அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதை செயல்படுத்துவது, நம் தோலில் உள்ள 'மாஸ்ட் செல்கள்'.

அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம் தான். இதை 'இம்யூனோகுளோபுலின் ஈ' என்பார்கள். இந்தப் புரதத்தை, ரத்தசெல்கள் உருவாக்குகின்றன. பிடிக்காத பொருள் முதல்முறையாக உடலுக்குள் நுழையும்போது, இந்த புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும்.

மீண்டும் அதே ஒவ்வாத பொருள் உடலுக்குள் நுழையும் போது, இந்தப் புரதம் ஒவ்வாமை பொருளுடன் சேர்ந்து, மாஸ்ட் செல்களை தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் 'ஹிஸ்டமின்', 'லுயூக்கோட்ரின்' எனும் வேதிப்பொருட்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து அங்குள்ள நரம்பு முனைகளைத் தாக்கும். அதன் விளைவால் தான் அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படுகின்றன.

எதனால் வருகிறது?

அரிப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.

வெளியிலிருந்து வரும் எதிராளிகளில் முன்னிலை வகிப்பது, செயற்கை அழகு சாதனப் பொருட்கள். சோப்பு, வாசனை திரவியம், உதட்டுச்சாயம், நகப்பூச்சு, முகப்பவுடர், கிரீம் போன்றவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாவிட்டால், அரிப்பை ஏற்படுத்தும். சிலருக்குக் கம்பளி, டெர்லின், நைலான், விலங்குத் தோல் போன்ற ஆடைகளை அணிந்தால், உடல் அரிக்க ஆரம்பித்து விடும்.

குளிரும் ஆகாது!

சிலருக்கு, வெயிலும், குளிரும் கூட அரிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் அலர்ஜியாகி அரிப்பு வரும்; கடுமையான வியர்க்குரு வந்தாலும், அரிப்பு வரும். குளிர்காலத்தில் பனிக்காற்றுப் பட்டுத் தோல் வறண்டு, சிலருக்கு எரிச்சல் ஏற்படுத்தலாம். அடுத்து, செல்லப் பிராணிகளால் வரும் அரிப்பு. இதில் பிரதானமானது பூனை. பூனையின் முடி பட்டால் சிலருக்கு உடம்பெல்லாம் எரிச்சல் எடுத்து தடிப்புகள் உண்டாகும்.

வயதானவர்களுக்கு தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை குறைவதால், தோலில் வறட்சி ஏற்பட்டு அரிப்பு ஏற்படுத்துகிறது. சிலருக்கு அருவியில் குளித்து முடித்ததும் அரிப்பு ஏற்படும்.

எச்சரிக்கும் நோய்கள்

உடலில் இருக்கும் எந்தவொரு நோய்த்தொற்றும் அரிப்பை உண்டாக்க வாய்ப்புண்டு. சொத்தைப் பல், சுவாசப்பாதை அழற்சி, சிறுநீரகப் பாதை அழற்சி போன்றவை. குடலில் புழு இருந்தாலும் உடம்பில் அரிப்பு ஏற்படலாம். நீரிழிவு நோய், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு, பித்தப்பை பிரச்னை, 'மல்ட்டிபிள் ஸ்கிலிரோஸிஸ்' எனும் மூளை நரம்புப் பிரச்சினை, பரம்பரை போன்றவையும், அரிப்புக்கு காரணமாக இருக்கலாம்.

சிலருக்கு, சாப்பிடும் உணவும் அலர்ஜியை ஏற்படுத்தலாம். உணவைப் போலவே, உட்கொள்ளும் மருந்துகளும், அரிப்புக்கு ஒரு காரணம் ஆகலாம். எதனால் ஏற்பட்டது என்பதை தெரிந்து கொண்டு சிகிச்சை பெற்றால் தான், அரிப்பு முற்றிலுமாகக் கட்டுப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us