ஆறு மாதங்களுக்கு எல்லாம் மாறணும் - 'கொரோனா' மீள எச்சரிக்கை
ஆறு மாதங்களுக்கு எல்லாம் மாறணும் - 'கொரோனா' மீள எச்சரிக்கை
PUBLISHED ON : மே 02, 2020

கொரோனா காரணமாக அனைத்து விஷயங்களும் மாற வேண்டியுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்கு நாம் கடைபிடிக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அப்போலா மருத்துவமனை கேப்ஸ்டோன் கிளினிக்கின் தொற்று நோய் பிரிவு டாக்டர் வி.ராமசுப்ரமணியன் கூறியது:
பிரதமர் மோடி சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதன் மூலம் கொரோனா தொற்று உயராமல் பார்த்துக் கொண்டார். ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்ட பின் ஜூலை- ஆகஸ்டில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை அதிகமாகலாம். அதற்கு அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் அப்படியே குறையலாம். ஒட்டுமொத்தமாக ஆறு மாதங்களுக்கு இந்த வைரசை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.பாதுகாப்பாக இருங்கள்நமது வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. இருமல் தும்மல் வரும்போது முழங்கை அல்லது 'டிஷ்யூ' பேப்பர் வைத்து மூக்கு வாயை மறைக்க வேண்டும்.
இதன்மூலம் சளி எச்சில் நீர்த்திவலைகள் பரவுவதை தடுக்கலாம். 'டிஷ்யூ'பேப்பரை குப்பை தொட்டியில் துாக்கி எறிந்து கையை நன்கு கழுவ வேண்டும். வைரஸ் உள்ள நீர்த்திவலைகள் நாம் பயன்படுத்தும் மேற்பரப்பில் இருக்கலாம். எனவே அடிக்கடி கை கழுவுதல் அவசியம். முகத்திற்கு அருகே கையை கொண்டு செல்லுதல் கூடாது. வெளிஇடங்களில் உங்கள் அருகில் இருப்பவர்களிடம் இருந்து 3 முதல் 6 அடி துாரம் தள்ளி இருப்பது நல்லது. முகத்தில் 'மாஸ்க்' அணிவது கட்டாயம். பொதுமக்கள் என் 95 அல்லது அறுவை சிகிச்சைக்கான 'மாஸ்க்'அணிய தேவையில்லை. இரண்டு அடுக்கு கொண்ட துவைத்து பயன்படுத்தக்கூடிய காட்டன் 'மாஸ்க்' போதுமானது. முதியவர்கள் சர்க்கரை நோய் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு அதிகம். முதியவர்களை எளிதில் தொற்றும் என்பதால் அவர்களை பாதுகாக்கவேண்டும். வீட்டில் இருக்க சொல்ல வேண்டும்.
பதட்டம் வேண்டாம்
காய்ச்சல் இருமல் ஏற்பட்டால் பதட்டம் அடைய வேண்டாம். இரண்டு அல்லது மூன்று நாட்கள் நீடித்தால் டாக்டரிடம் முன்கூட்டியே 'அப்பாயின்ட்மென்ட்' வாங்கி ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள். இதன் மூலம் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்கலாம். கொரோனா சோதனை தேவையா என்பதை டாக்டர் முடிவு செய்வார். கொரோனாவால் 80 சதவீதம் பேருக்கு சிறிய பாதிப்பு தான் இருக்கும். 20 சதவீதம் பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படலாம். 5 சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படலாம் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே மரணம் அடைவர் என்பதால் பெரிதாக அச்சப்பட தேவையில்லை.அலுவலகங்களில் எப்படிஅலுவலகங்களுக்கு பலரும் வந்து செல்லலாம். எனவே வீட்டில் இருந்து பணி செய்வதே நல்லது. அந்த ஊழியர்கள் தனிமையை உணரக் கூடாது. நிர்வாகத்தினர் அடிக்கடி அவர்களுடன் பேச வேண்டும்.
அலுவலகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஊழியர்கள் இடைவெளி விட்டு அமரும்படி இருக்கைகளை மாற்றி அமைக்க வேண்டும். இருக்கையை சுத்தம் செய்ய வேண்டும். 'ஆல்கஹால் அடங்கிய சானிட்டசைர்' அலுவலகத்தின் எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும். கை வைத்து இழுக்கும் வகை அல்லாமல் முழங்கை வைத்து தள்ளி திறக்கும் வகையில் கதவுகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அலுவலகத்திற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். ஊழியர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதிக்க வேண்டும்.
தேவைப்பட்டால் டாக்டரை அணுக வேண்டும் கைகுலுக்குவதை தவிர்ப்பது கைகழுவுவது போன்றவற்றின் அவசியத்தை ஊழியர்களுக்கு எடுத்துச் சொல்வது அவசியம். 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு மூலம் தொற்று பரவலாம் என்பதால் மாற்று முறையை கண்டறிய வேண்டும். அலுவலகங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். பயணத்தை தவிர்த்து அலைபேசி 'வீடியோ' அழைப்பில் பேசலாம்.
கட்டட பணியில் கவனம்
கட்டட பணியில் 50 முதல் 500 தொழிலாளர்கள் வரை இருப்பர். ஊரடங்கு உத்தரவால் அதிருப்தியில் உள்ளனர். இவர்களுக்கு இத்தாலி அமெரிக்காவில் கொரோனா ஏற்படுத்தும் மரணம் பற்றி தெரியாது. நோயின் தீவிரம் பற்றி அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 5 அல்லது 8 பேர் ஒரே அறையில் தங்குதல் கூடாது. குறைந்தது ஆறு அடி துாரம் இடைவெளி இருக்க வேண்டும். பஸ்சில் கும்பலாக பயணம் செய்ய கூடாது. தொழிலாளர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை தினமும் பரிசோதனை செய்ய வேண்டும். கைகழுவுதல் அவசியத்தை எடுத்துச்சொல்ல வேண்டும். ஒரு மணி நேர இடைவேளையில் அனைவரையும் ஒரே சமயத்தில் சாப்பிட அனுப்பக்கூடாது. எப்போதும் பாதுகாப்பாக இருப்போம். கொரோனோவின் பிடியில் இருந்து மீள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.
