தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உடற்பயிற்சி செய்வதால் ஹார்ட் - அட்டாக் வருமா?

உடற்பயிற்சி செய்வதால் ஹார்ட் - அட்டாக் வருமா?

உடற்பயிற்சி செய்வதால் ஹார்ட் - அட்டாக் வருமா?


PUBLISHED ON : ஜூலை 09, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 09, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொரோனா வைரஸ் இரண்டு விதங்களில் இதயத்தை பாதிக்கலாம். இது, சுவாச பாதையை பாதிக்கும் வைரஸ் என்பதால் 80 சதவீதம் நுரையீரலையும், 20 சதவீதம் மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது.

இதய தசைகளில் தொற்றை ஏற்படுத்தி, வீக்கத்தை உண்டு பண்ணுவது நேரிடையான பாதிப்பு. தீவிர வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட தழும்பு நுரையீரலில் இருக்கும். இதயம் ரத்தத்தை 'பம்ப்' செய்யும் போது, தழும்பு உள்ள இடத்தில் ரத்தம் செல்லாது. இதனால், கூடுதல் பளு ஏற்பட்டு, வலது பக்க இதயம் பலவீனம் ஆகலாம்.

கொரோனா தொற்று, கால்கள், மூளை, இதய ரத்த குழாய் என்று எங்கு வேண்டுமானாலும் ரத்த உறைவை ஏற்படுத்தலாம். இதனால் மாரடைப்பு, கால்களில் இருந்து நுரையீரலுக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பை ஏற்படுத்தலாம்.

அதிக உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு உட்பட இணை நோய்கள் இருந்தால், உடலின் உள் உறுப்புகளில் வீக்கம், இதய கோளாறுகளை ஏற்படுத்தும். இத்துடன் கொரோனா தொற்றும் சேரும் போது பாதிப்பு, எந்த உடல் கோளாறு இல்லாதவர்களை விடவும் அதிகம் இருக்கும். வைரஸ் தொற்றால் ஏற்பட்ட இதய பாதிப்பு, 3 - 6 வாரங்களில் சரியாகி விடும். சிலருக்கு இரண்டு நாட்களில், சில வாரங்களில் மாரடைப்பு ஏற்படுகிறது.

என்ன காரணம்

வைரஸ் தொற்றில் இருந்து முழுதும் குணம் அடைந்து விட்டாலும், அது ஏற்படுத்திய பாதிப்பு முழுமையாக நீங்கி, பழைய நிலைக்க வர, சில வாரங்கள் ஆகலாம். என் அனுபவத்தில், கொரோனா தொற்றுக்கு முன் ஒருவருக்கு இயல்பாக இருந்த இதயத் துடிப்பு, குணமான பின் மாறுபடுகிறது.

ரத்த அழுத்தமும் மாறலாம். வைரஸ் பாதித்த பகுதிகளில், 'ரிப்பேர்' செய்யும் வேலை நடப்பதால் ஏற்படும் விளைவு இது. எனவே, இந்த சமயத்தில், இதயத்திற்கு கூடுதல் வேலை தரும் உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

கடந்த 20, 30 ஆண்டுகளாக முறையான உடற்பயிற்சி செய்யாமல், கொரோனா சரியான இரண்டு வாரங்களில் அக்கறையாக உடற்பயிற்சி செய்து, எதுவும் கிடைக்கப் போவது இல்லை. தொற்று சரியான பின் அடுத்த இரண்டு வாரங்கள், வீட்டின் உள்ளேயே தினசரி பணிகளை செய்தால் போதும். அந்த சமயத்தில் சுவாசிப்பதில் சிரமம் போன்று என்ன அறிகுறி தெரிந்தாலும், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

இரண்டு வாரங்கள் கழித்து அடுத்த மூன்று வாரங்கள், நிதானமான நடைபயிற்சி மட்டும் செய்தால் போதும். உடலை சிரமப்படுத்தும் எந்த உடற்பயிற்சியும் அடுத்த ஒரு மாதத்திற்கு செய்ய வேண்டாம்.

அறிகுறிகள் இல்லாமல் வைரஸ் தொற்று இருந்து, 'பாரசிட்டமால்' எடுத்து, மூன்று நாளில் சரியாகி விட்டது; வேறு எந்த பிரச்னையும் இல்லை என்றால், ஒரு வாரத்தில் வழக்கமாக செய்யும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

நான்கைந்து பல் பூண்டு சாப்பிடுவது, மஞ்சள் கலந்த பால் குடிப்பது, 'ஜிங்க்' மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் உடனடியாக நோய் எதிர்ப்பு சக்தி வந்து விடாது. சமச்சீரான ஒழுங்கு முறையை கடைப்பிடிப்பதால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

தினமும் 30 நிமிடங்கள், வாரத்தில் ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்தால், தொற்று ஏற்படும் வாய்ப்பு 30 சதவீதம் குறைவு. தவறாமல் உடற்பயிற்சி செய்வதால், நோய் எதிர்ப்பு அணுக்கள் 50 சதவீதம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. நல்ல துாக்கம், ஊட்டச்சத்தான உணவு, ஆரோக்கியமான உடல் இவை தான் நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

டாக்டர் சாய் சதீஷ்,

இதய கோளாறு சிறப்பு மருத்துவர்,

அப்பல்லோ மருத்துவமனை,

சென்னை


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us