PUBLISHED ON : அக் 09, 2022

நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களை பாதிக்கும் உடல் பிரச்னைகளில் முக்கியமானது, சிறுநீர் கசிவு. இந்த வயதில் வரும் 80 சதவீத சிறுநீர் பிரச்னைகளில், 60 சதவீத பிரச்னை சிறுநீர் கசிவு. பிரசவ நேரத்தில் பிரச்னைகள் இருந்திருந்தால், இதே பிரச்னை 30 வயதிலும் வரலாம்.
இரண்டு காரணங்களால், பெண்களுக்கு சிறுநீர் கசிவு ஏற்படலாம். முதல் வகை, இருமல், தும்மல் வரும்போது, வேகமாக நடந்தால், சிரித்தால், குனியும் போது, சிறுநீர் கசிவு ஏற்படும். இது, 'ஸ்ட்ரெஸ் யூரினரி இன்கான்டினென்ஸ்' எனப்படும். இதற்கு பயந்து, நிறைய பெண்கள் நடை பயிற்சி செய்வது இல்லை.
இதனால் உடல் பருமன் ஆகிவிடும். அதன் தொடர்ச்சியாக, பல பிரச்னைகள் வரும். அதன் பின், டாக்டரைப் பார்ப்பர். காரணத்தை அலசும் போது, சிறுநீர் கசிவின் தொடர்ச்சியாகவே இவை இருக்கும்.
சிறுநீர் கசிவிற்கான காரணம்
பிரசவத்தின் போது இடுப்புத் தசை வலுவிழந்து விடும். பிரசவத்திற்குப் பின், தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்யாவிட்டால், வயது ஆக ஆக, மேலும் வலுவிழந்து போகும். இதுதான் கசிவிற்கு காரணம்.
சிறுநீர் கசிவு இருந்தால் தோல் தொற்று, சிறுநீரகத் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம். துர்நாற்றம் வீசும்; இதனால், வீட்டிலும், வெளியிலும் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும்.
கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் கசிவது தெரிந்தால், உடனே டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும்.
இடுப்புத் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் செய்தால், பிரச்னையை சரி செய்து விடலாம்.
பிரச்னை பெரிதான பின், உடற்பயிற்சி மட்டும் செய்வதால் பலன் இல்லை. இடுப்புத் தசைகளுக்கு 'சப்போர்ட்' செய்வதற்காக, 'ஸ்லிங்' வைக்க வேண்டும்.
சிறுநீர் கசிவு பாதிப்பு உள்ள 60 சதவீதம் பெண்களில், 45 சதவீதம் பேர், சிறுநீர்ப்பை கூடுதலாக வேலை செய்யும் 'ஓவர் ஆக்டிவ் பிளாடர்' பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம்.
இதனால் கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக கழிப்பறைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுவதும் உண்டு. இதனால், இரவில் துாக்கம் கெடுவதுடன், நீர்ச்சத்தும் குறையும். மருந்து, மாத்திரைகள் மூலம் இதை சரி செய்து விடலாம்.
டாக்டர் ஏ. தமிழ்ச்செல்வி,
சிறுநீரக மற்றும் மகப்பேறு மருத்துவர்,
சென்னை.
044 - 26261896
