தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/உணவும் சர்க்கரை நோயும் : திருவள்ளுவரின் தீர்க்க தரிசனம்!

உணவும் சர்க்கரை நோயும் : திருவள்ளுவரின் தீர்க்க தரிசனம்!

உணவும் சர்க்கரை நோயும் : திருவள்ளுவரின் தீர்க்க தரிசனம்!


PUBLISHED ON : மே 12, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 12, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலியோ டயட்டும் பல போலி டயட்டுகளும் பரபரப்பாக பேசப்படும் இந்நாளில் உணவை பற்றி திருவள்ளுவரின் தீர்க்க தரிசனம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் குறுகுறுப்புடன் எதிர்பார்ப்பது தெரிகிறது. எங்கு பார்த்தாலும் வாயில் நுழையாத பல உணவு முறைகள் பரிந்துரைக்கப் படுகின்றன. அந்த உணவாவது ஒழுங்காக வாயில் நுழைந்து வயிற்றைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி.

'நான் சாதாரணமாத்தான் சாப்பிடறேன். அப்புறம் ஏன் வெயிட் ஏறுதுன்னுதான் தெரியல. சுகரும் குறையவே இல்லையே டாக்டர்' என புலம்பும் பலரைப் பார்த்திருக்கிறேன். அவர்களின் 'சாதாரணத்தை' அறிந்தால் நம் தலை சுற்றும்.

சமீபத்தில் ஒரு 145 கிலோ நண்பர் என்னைக்காண மனைவியுடன் வந்தார். சர்க்கரை அளவு 450; பிரஷர் நம் 'இஸ்ரோ' ராக்கெட் செல்லும் அளவிற்கு இருந்தது.

'கொஞ்சம் என்னன்னு பாருங்க டாக்டர். நான் சாதாரணமாத்தான் சாப்பிடறேன். இருந்தாலும் எடை குறையவே மாட்டேங்குது. சுகரும் குறையவே இல்லை!'

பக்கத்தில் இருந்த அவருடைய மனைவி குடும்ப ரகசியத்தைப் போட்டு உடைத்தார். 'டாக்டர் இவரு சாதாரணமா எட்டு அல்லது பத்து இட்லி சாப்பிடுவாரு. அதே அளவு வடையும் சாப்பிடுவாரு' கணவருக்குக் கோபம் வந்துவிட்டது.

'நான் ஒண்ணும் ஒரே நேரத்துல சாப்பிடறதில்ல. இட்லி மட்டும்தான் ஒரே நேரத்தில் சாப்பிடுவேன். அந்த பத்து வடைகளை ஒரு நாள் முழுவதும் கேப் விட்டுத்தான் சாப்பிடுவேன்' என்றாரே பார்க்கலாம்!

ஒரு வேளைக்குப் பத்து இட்லி, பத்து வடை சாப்பிடுவது சாதாரணம் என்று நினைக்கிறார் போலும். நுாறு சர்க்கரை நோய் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது.

சரி, உணவை பற்றி திருவள்ளுவர் அப்படி என்னதான் சொல்லியிருப்பார் என்று பார்ப்போமா? ஆயிரக்கணக்கான வருடங்கள் பின்னாலும் வள்ளுவர் சொல்வதை கடைபிடித்தால் நோய் நம்மை அண்டாது. இதோ வள்ளுவரின் தீர்க்க தரிசனம்.

'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு

அருந்தியது அற்றது போற்றி உணின்'

பொருள்: முன்பு உண்ட உணவு நன்றாகச் செரித்து விட்டது என்பதை ஆய்ந்துணர்ந்து பின் அடுத்த வேளை உணவை உண்டால் இந்த உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.

'அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு'

முன்பு உண்ட உணவு முழுவதுமாக செரித்த பின் வேண்டிய அளவு அறிந்து உண்ண வேண்டும்; அப்படி அளவாக உண்பதே இந்த உடம்பை பெற்றவன் அதை நெடுங்காலும் கொண்டு செல்லும் வழி

'தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயளவின்றிப்படும்'

தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவில்லாமல் வளரும்)மகாராஜா பர்கர், ஐந்து தோசை சாப்பிட்டால் ஒரு தோசை இலவசம் போன்ற விளம்பரங்களில் மயங்கி, அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்ற சொலவடையை மறந்துவிட்டோம். வாசகர்களே, கை உணவியலை பின்பற்றுவோம்.

விரல் அளவு எண்ணெய், கை அளவு சோறு, இரண்டு கை அளவிற்கு மேல் காய்கறிகள்,உள்ளங்கை அளவு இறைச்சி.

வள்ளுவரின் சொல்படி நடந்தால் எங்களிடம் உள்நோயாளியாக வந்து அடைபடும் வாய்ப்பு குறைவு. இதன் மூலம் சர்க்கரை நோயை வருமுன் காப்போம்; வந்தால் வீழ்த்துவோம்.

- டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்

சர்க்கரை மற்றும் சுரப்பியில் மருத்துவ நிபுணர்

கோவை, 94432 91655


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us