
இயல்பாக, உணவுப்பண்டங்கள் என்றதுமே, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் நாக்கில் எச்சில் ஊறத் துவங்கிவிடும். 'ருசித்துச் சாப்பிடவே பிறப்பெடுத்திருக்கிறோம்' என்பது போல, எத்தனை சுவைகள், எவ்வளவு உணவு வகைகள்! ஆனால், எல்லாவற்றையும் ருசித்துப் பார்க்கவிடாமல் செய்துவிடுகிறது... கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மீதான பயம்!
பொதுவாக, சிறுதானியங்களால் செய்யப்பட்ட உணவுகள் உடல்நலத்தை கெடுக்காது. குறிப்பாக, திணையில் செய்யப்படும் உணவுகள் நோய்களை அண்டவிடாது. மழை, குளிர்காலத்திற்கு ஏற்றது திணை. இத்தகைய திணையில் செய்யப்படும் லட்டு, கார்த்திகை மாத சிறப்பு உணவுவகைகளில் பிரசித்தி பெற்றது.
திணை லட்டு செய்வது எப்படி?
தேவையானவை (4 பேருக்கு): திணை - 1 கப், பாசிப்பயிறு - 1 கப், வெல்லம் - 2 கப், நெய் - 50 கிராம், முந்திரி - நான்கு, ஏலக்காய்ப் பொடி - சிறிதளவு.
செய்முறை: திணை, பாசிப்பயிறு இரண்டையும் பொன்னிறமாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வெல்லத்தை பாகுபோல் காய்ச்சி, திணை மற்றும் பாசிப்பயிறு பொடியுடன் கலக்கவும். இதனுடன் நெய், முந்திரி, ஏலக்காய் சேர்த்து கெட்டியாக வரும்வரை கிளறி, லேசாக ஆற வைத்து, உருண்டைகளாகப் பிடித்தால் 'திணை லட்டு' ரெடி.
பலன்: மழை, குளிர்காலத்தில் ஏற்படும் நெஞ்சுசளியை குணப்படுத்தும் வல்லமை திணைக்கு உண்டு. மேலும், குளிர்ந்திருக்கும் உடலுக்கு திணை உஷ்ணத்தை தரும். ஆனால், 'அதிக அளவு உஷ்ணம் உடலுக்கு நல்லதல்ல' என்பதால், பால், நெய்யுடன் சேர்த்து திணையை சாப்பிடுவது நல்லது. இதுதவிர, இனப்பெருக்க உறுப்புசெயல்பாடுகளுக்கு, திணை நல்ல ஊக்கமருந்து! எல்லாவற்றையும் விட, திணையால் உடல் எடை அதிகரிக்காது என்பது கூடுதல் சிறப்பு.
- காந்திமதி, ஊட்டச்சத்து ஆலோசகர்.

