
அருகில் இருக்கும் போது எதன் அருமையும் புரிவதில்லை'
என்பது, உறவுகளுக்கு மட்டுமல்ல உணவிற்கும் பொருந்தும். விழுந்துக்கிடக்கும் இளநீர்களை பந்தாய் மாற்றி கால்பந்து விளையாடியவர்கள், நகரங்களின் இளநீர் விலையில் மயங்கி விழுவதும்; வயல்வெளிகளை விற்று, வசந்த மாளிகைகளுக்கு கடன் கட்டுவதும்தான் இப்போது வே(வா)டிக்கை.
தெருவோரங்களில் நின்றிருந்த பயிர்களையெல்லாம் அள்ளியெறிந்துவிட்டு, சாக்கடைக்கு வழி கொடுத்துவிட்டோம். உள்ளுக்குள்ளே பெரும் கழிவையே உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
இந்த முடக்கத்தான் கீரையும் நம்மால் ஒதுக்கப்பட்ட ஒரு பயிர்தான். ஆனால், அதன் பயன் என்ன என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
முடக்கத்தான் ரசம் செய்வது எப்படி
தேவையானவை
முடக்கத்தான் இலை 100 கிராம்
மிளகு (அரை) தேக்கரண்டி
சீரகம் (அரை) தேக்கரண்டி
பூண்டு 10 பற்கள்
தக்காளி 2
சிறிய வெங்காயம் சிறிதளவு
கொத்தமல்லி 1 சிட்டிகை
மஞ்சள் தூள் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
நல்லெண்ணெய் தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை
முடக்கத்தான் இலைகள், வெங்காயம், தக்காளி, இவையனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதில் மிளகு, சீரகம், பூண்டு, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு இதையெல்லாம் போட்டு சிறிது நேரம் வதக்கவும். பிறகு, முதலில் நறுக்கி வைத்த பொருட்களை வாணலியில் போட்டு லேசாக வதக்கி, தண்ணீருடன், மஞ்சள்தூள் போட்டு, அது சுண்டிவரும் வரை காத்திருந்தால் முடக்கத்தான் ரசம் தயார்.
பலன்கள்
வாதப்பிடிப்பு, முடக்குவாதம் உள்ளிட்ட வாத நோய்களுக்கும், வாய்வு பிரச்னை, மூட்டு வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உள்ளது. பெண்களின் மாதவிடாய் பிரச்னைக்கும் இது உதவுகிறது. மேலும், முதுகுத் தண்டு வடத்தில் தேய்மானத்தினால் அவதிப்படுபவர்கள் இந்தக் கீரையை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- அ.காந்திமதி, ஊட்டச்சத்து ஆலோசகர்

