- 1நீரிழிவு நோய் என்பது என்ன?
சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற, இன்சுலின் என்ற ஹார்மோன் அவசியம். எனவே தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு எனப்படுகிறது.
- முதலாவது வகை நீரிழிவு என்றால் என்ன?
முதலாவது வகை நீரிழிவு குழந்தைகள், சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கு ஏற்படும். இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கும்.இவ்வகை நீரிழிவு, நூற்றில் பத்து சதவீதத்தினருக்கு ஏற்படுகின்றது.
- இரண்டாவது வகை நீரிழிவு என்றால் என்ன?
தேவையான அளவு இன்சுலின் சுரக்காவிட்டாலும் அல்லது சுரக்கப்படும் இன்சுலின் தகுந்த முறையில் செயல்பட விட்டாலும் அது இரண்டாம்
வகை நீரிழிவு. இந்த வகை நீரிழிவு
கிட்டத்தட்ட 90 சதவீதத்தினரிடம் காணப்படுகிறது. இவ்வகை நீரிழிவு அதிக உடற் பருமன் உள்ளவர்களிடம் பெருமளவு காணப்படுகின்றது.
- மூன்றாவது வகை நீரிழிவு என்றால் என்ன?
கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு மூன்றாவது வகை எனப்படுகிறது. இவ்வகை நீரிழிவானது நூற்றில் நான்கு சதவீத பெண்களுக்கு கர்ப்பகாலத்தின்போது ஏற்படுகிறது. கர்ப்பகாலம் முடிந்த பின் மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், எதிர்காலத்தில் குழந்தைக்கும், தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பு உள்ளது.
- நீரிழிவு நோயின் அறிகுறிகள் என்னென்ன?
சில சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அடிக்கடி தாகம், அதிக பசி, மிக வேகமாக எடை குறைவது, கண்பார்வை மங்குவது மட்டுமல்லாமல், காயம், சிராய்ப்பு ஏற்பட்டால் ஆறுவதற்கு அதிக காலம் ஆவது போன்றவையே.
- நீரிழிவை கவனிக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
நீரிழிவை துவக்கத்திலேயே கவனிக்கவில்லை என்றால், நிலைமை மோசமாகி விடும். கட்டுக்குள் இல்லாத நீரிழிவு, பல முக்கியமான உடல் உறுப்புகளையும், செயல்பாடுகளையும் பாதித்துவிடும். பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம், கோமா மற்றும் கால்களை இழத்தல் போன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும்.
- நீரிழிவு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்?
பொதுவாக நீரிழிவு நோயாளிகள் அரிசி உணவை எடுத்துக்கொள்ள கூடாது, என்று நினைக்கின்றனர் அது தவறான கருத்து. அரிசி உணவை அளவாக எடுத்து கொள்ளலாம். உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், சீதாப்பழம் போன்றவற்றை எடுத்துக்கொள்ள கூடாது.
- நீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி?
உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சி, நோயின் தீவிரத்தைத் தவறாமல்
கண்காணித்தல் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகள் மூலம் இன்சுலின் ஊசி மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் நீரிழிவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
- நீரிழிவு நோய்க்கான உணவு வகைகள் ?
சப்பாத்தி அல்லது கோதுமை ரொட்டி, கேழ்வரகு, கம்பு போன்ற கார்போ- ஹைட் ரேட்கள் நிறைந்தவற்றைச் சாப்பிட வேண்டும். பசியுடன் இருந்தாலும் இனிப்புப் பதார்த்தங்கள் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள். நேரம் தவறாமல் சாப்பிடுவது நல்லது.
10உணவில் இறைச்சி அதிகம் எடுத்துக்கொண்டால் நீரிழிவு நோய் ஏற்படுமா?
மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவற்றில் 'சச்சுரேடட்' என்ற கொழுப்பு அதிகமாக உள்ளது. இது நீரிழிவுக்கு மிகப் பெரிய எதிரி. இவை உடலில் கொலஸ்ட்ராலின் அளவை உயர்த்தி நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடும். ஆதலால்
இவைகளைத் தவிர்ப்பது
(அல்லது) மிகவும் அபூர்வமாக
உண்ணுதல் நல்லது.
----
தி.செங்குட்டுவன், நீரிழிவு மருத்துவர்.