உணவுப்பழக்கத்தில் மாற்றங்களை செய்தால் போதும்; மருத்துவ செலவை குறைத்து விடலாம் என்றால், நமக்கு கசக்கவா செய்யும்? ஆம்... நம்மால் மறக்கப்பட்ட தானியங்களை பயன்படுத்த துவங்கினாலே போதும்; மருத்துவச் செலவு, தானாக குறைந்து விடும்! அந்தவகையில், தயாரிக்கப்படும் உணவுதான் இது!
குறுதானிய உப்புமா செய்வது எப்படி
குதிரைவாலி அரிசி 100 கிராம்
சாமை அரிசி 50 கிராம்
வரகு அரிசி 100 கிராம்
தினை அரிசி 50 கிராம்
காய்கறிகள் 1 கப் (தேவைக்கேற்ப)
நல்லெண்ணெய் தேவைக்கேற்ப
மிளகாய் வற்றல் 6
கடுகு சிறிதளவுசிறிதளவு
உளுத்தம் பருப்பு சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை:
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, அதனுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும். அதில், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வெட்டி வைத்த காய்கறிகளையும், உப்பையும் கலந்து, இரண்டு நிமிடம்
வேக வைக்கவும். இதனுடன், குருணையாக்கப்பட்ட குதிரைவாலி, சாமை, வரகு மற்றும் தினை அரிசியை சேர்த்து, நன்றாக வேகும் வரை கிளறினால் குறுதானிய உப்புமா தயார்!
பலன்கள்:
குறுதானியங்களில் உள்ள கனிமச்சத்து, உடல் கட்டமைப்பை செதுக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து, எலும்பு, பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது; செல் வளர்சிதை மாற்றத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், உடலின் நச்சுத்தன்மையை நீக்குவதுடன், மார்பக புற்றுநோயின் தடுப்பு மருந்தாகவும் இவை செயல்படுகிறது.
- லீலாவதி சீனிவாசன்,
சமையற்கலை நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்.

