
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முடக்கத்தான் கீரை துவையல் செய்வது எப்படி?
உடல் நலனை விரும்புவோர், முறையான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால், நெடுநாள் நலமாக வாழலாம். 'உணவே மருந்து' என்று இருந்த நிலைமாறி, இன்று 'மருந்தே உணவு' என்றாகி விட்டது. அந்தகாலத்தில் இன்றிருப்பதுபோல் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள் கிடையாது. மருத்துவ காப்பீடு கிடையாது. அவர்களுக்கு உணவுதான் மருந்து. அதனால் தான், ஆரோக்கியம் அவர்களிடம் இருந்தது. அப்படி ஒரு ஆரோக்கியத்தை தரும் மருந்துதான் 'முடக்கத்தான் கீரை துவையல்' எனும் உணவு!முடக்கத்தான் கீரை 1 கப்
மிளகாய்வற்றல் 6 - 8
நல்லெண்ணெய் தேவையான அளவு
பெருங்காயம் சிறிதளவு
உளுத்தம் பருப்பு சிறிதளவு
கடுகு சிறிதளவு
புளி எலுமிச்சம்பழ அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாயை நன்கு வறுத்துக் கொள்ளவும். அதனுடன் புளியையும், சுத்தம் செய்த கீரையையும் சேர்த்து, நன்கு வதக்கி எடுத்து அரைத்தால் கமகமக்கும் துவையல் தயார். மிக்சியில் அரைப்பதை விட, அம்மிக்கல்லில் அரைத்தால் கூடுதல் சுவை இருக்கும். குறைந்தது மூன்று நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
பலன்:
வைட்டமின்களும், தாது உப்புக்களும் நிறைந்தது முடக்கத்தான் கீரை. இந்த துவையலை, உணவில் தொடர்ந்து சேர்த்துக் கொள்வதன் மூலம், மூலநோய், மலச்சிக்கல், பாதவாதம், மூட்டு நோய்கள் போன்றவை குணமடையும். மூட்டுகளில் தங்கியிருக்கும் புரதம், யூரிக் அமிலம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் கொழுப்புத்திரட்சி படிமங்களை கரைத்து வலிகளை போக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு, இக்கீரை மிகவும் நல்லது.
- காந்திமதி, ஊட்டச்சத்து ஆலோசகர்

