PUBLISHED ON : ஜூலை 13, 2025

பிறரை சாராமல் வாழும் முதுமை என்றும் இனிமையாக இருக்கும். பொருளாதார ரீதியாகவும் சரி, உடல் நலம் சார்ந்தும், பிறரின் தேவை எப்போது எதிர்பார்க்க துவங்குகின்றோமோ, அப்போது தான் முதுமை பலருக்கு கொடுமையாகி விடுகிறது.
பொதுவாக உணவு, மருத்துவ பரிசோதனை, மனநலம் பேணல் அனைத்திலும் கவனமாக இருப்பவர்கள், சின்னச்சின்ன விஷயங்களால் பாதிக்கப்பட்டு விடுகின்றனர் என்கிறார், கோவை அரசு மருத்துவமனை எலும்பு முறிவு மற்றும் சிகிச்சை பிரிவு இயக்குனர் டாக்டர் வெற்றிவேல் செழியன்.
அப்படி என்னென்ன விஷயங்கள்?
என்னதான் பார்த்து பார்த்து இருந்தாலும், ஒரு சில நோய்கள் ஏன் வருகிறது என்றும் தெரியாது; தடுக்கவும் முடியாது. ஆனால், சில விபத்துக்களை நாம் தவிர்த்து விட முடியும்.
முதியோர் உள்ள வீடுகள், முதியோர் இல்லங்களில் கால்மிதி, தண்ணீர் சிந்திய டைல்ஸ், பாத்ரூம் தரை ஆகிய மூன்று காரணங்களால் கீழே விழுந்து, பலர் முதுகு உடைந்து சிகிச்சைக்கு வருகின்றனர்.
அறுவைசிகிச்சை செய்தாலும், வயது காரணமாக இயல்பு நிலைக்கு வருவதில் பல்வேறு சிரமங்கள் இருக்கும். முதியோர் இருக்கும் வீடுகளில், தற்போது சந்தைகளில் எளிதாக கிடைக்கும் தரையோடு ஒட்டி இருக்கும் கால்மிதியை பயன்படுத்த வேண்டும்.
வீடுகட்டும் போதே, அதிகம் வழுக்கும் டைல்ஸ் பயன்படுத்துவதையும், அல்லது தண்ணீர் கொட்டினால் தெரியாமல் இருக்கும் பளபளப்பான டைல்ஸ்சும் தவிர்க்கலாம்.
தண்ணீர் சிந்தினால், உடனுக்குடன் துடைத்துவிடவேண்டும்; குழந்தைகளுக்கும் இதை பழக்கப்படுத்த வேண்டும். பாத்ரூம்களில் முதியோர் பிடித்து நிற்கவும், எழுந்து இருக்கவும் ஸ்டீல் கம்பிகள் பொருத்த வேண்டும்.
இவை தவிர, முதியோர் பலர் குதிக்கால் வலி, கணுக்கால் மூட்டு வலி, பாதத்தில் எரிச்சல், போன்றவற்றால் சிரமப்படுவார்கள். கால் பாதங்களில் உள்ள திசுக்கள் தேய்வதே இதற்கு முக்கிய காரணம்.
வீடுகளுக்குள் பயன்படுத்துவதற்கான, பிரத்யேக செருப்புகளை பயன்படுத்தினால் இதுபோன்ற பாதிப்புகள் இருக்காது. வெளியிடங்களில் எடை குறைவாக, குஷன் செருப்புகளை பயன்படுத்த வேண்டும்.
இதுபோன்ற சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவது, பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.