
பல நுாற்றாண்டுகளாக நம் சமையலறைகளில் பிரதானமாக பயன்டுத்தப்படுவது நெய்.
இட்லி, ரொட்டி, பருப்பு, குழம்பு, லட்டு, அல்வா போன்ற இனிப்புகள் வரை, நெய் அன்றாட உணவுகள் மற்றும் பண்டிகை உணவுகள் இரண்டிலும் முக்கிய அம்சமாக இருக்கிறது.
நம் நாட்டில் நெய்யின் பயன்பாடு பல நுற்றாண்டுகளாகவே இருக்கிறது.
கலாசார முக்கியத்துவம் நெய்யின் பயன்பாட்டிற்கு இருந்தாலும், சமீப ஆண்டுகளாக நெய் சாப்பிடுவது கொழுப்பை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதே சமயம் பாரம்பரிய மருத்துவ முறைகளில் மருந்திலும் சரி, அன்றாட உணவிலும் சரி நெய் பிரதான பங்கைவகிக்கிறது.
இதை உறுதி செய்யும் விதமாக பல ஆய்வுகள் செய்யப்பட்டன. இவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நெய்யில் இருப்பதாகவும், மிதமான அளவில் தினசரி உணவில் நெய் சேர்த்துக் கொள்வது நல்லது என்றும் கூறப்படுகிறது.
நெய்யில் ஒமேகா--3 மற்றும் ஒமேகா--6 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை உயிரணு சவ்வுகளின் பலத்தை பராமரிக்கவும், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் அவசியம். இந்த கொழுப்புகள் வீக்கத்தைக் குறைக்கவும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
ப்யூட்ரிக் அமிலம் போன்ற நெய்யின் கூறுகள் குடலில் நோயெதிர்ப்பு செல்களை உருவாக்கவும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
நெய்யில் உள்ள ஒமேகா--3 என்ற கொழுப்பு அமிலம் வீக்கத்தை நிர்வகிக்க உதவுகிறது, இதனால் நல்ல ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
ஆயுர்வேதத்தில் நெய் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சாத்வீக உணவாக நெய்யை கருதுகின்றனர்.
இது மனதையும் உடலையும் துாய்மை அடைய செய்து, அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சி உணர்வைத் தர உதவுகிறது. ஆயுர்வேதத்தின் படி, நெய் செரிமான நொதிகளின் சுரப்பைத் துாண்டுவதன் மூலம் உணவைஜீரணிக்க உதவுகிறது. இது பெரும்பாலும் மூலிகை மருந்துகளை வழங்குவதற்கான ஒரு ஊடகமாக பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் நெய்யில் உள்ளன. இத்தனை நன்மைகள் இருந்தாலும், நெய்யில் இன்னும் நிறைவுற்ற கொழுப்பும் உள்ளது.
நம் குடும்பங்களில் நெய் பயன்பாடு தவிர்க்க முடியாது என்பதால், எந்த அளவு தினசரி உபயோகிக்கலாம் என்பது முக்கியம்.
ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகபட்சம் மூன்ற டீஸ்பூன் வரை சாப்பிடலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.