PUBLISHED ON : ஆக 07, 2024

'உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆக., 1 முதல் 7 வரை கொண்டாடப்படுகிறது.
தாய்ப்பால் தரும் தாய்மார்கள் குழந்தையை சரியான முறையில் பிடித்து பால் கொடுக்காவிட்டால், மார்பு காம்பில் புண், பிளவு பாதிப்பு ஏற்படும்.
ஆகஸ்ட் முதல் வாரம் முழுதும் தாய்ப்பால் அவசியம் குறித்து, பல்வேறு அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
முறையாக தாய்ப்பால் கொடுப்பது, தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து, தாய்ப்பாலுாட்டல் நிபுணர் டீனா அபிஷேக் கூறியதாவது:
தாய்ப்பாலுாட்டலில் ஆரம்பத்தில் சிரமம் ஏற்படலாம். பால் வராதது, குழந்தை சரியாக பால் குடிக்காமல் இருத்தல் போன்றவற்றை சமாளிப்பது குறித்து, முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பது அவசியம்.
குழந்தை வாயை முழுதும் திறந்து, நன்கு உறிஞ்சும்போது, தாயின் மார்பகத்தில் பால் சுரப்பு அதிகரிக்கும். மார்பகத்தை சுத்தமாகவும், வறட்சியில்லாமல் வைத்தல் முக்கியம். சுவாச நோய்கள், வயிற்றுப்போக்கு, குடல் பிரச்சனை போன்றவற்றை தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்திகளை, தாய்ப்பால் கொண்டுள்ளது.
தாய்ப்பாலை குடிக்கும் குழந்தைக்கு எளிதில் செரிமானம் ஆகும். மேலும், தாய்ப்பாலில் உள்ள டி.எச்.ஏ., மற்றும் ஏ.ஏ. போன்ற ஒமேகா - 3 கொழுப்பு, குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியம்.
அதேநேரம், தாய்ப்பால் கொடுக்கும் முறையை தெரிந்து வைத்திருப்பது அவசியம். குழந்தையின் முகம் தாயின் மார்பகத்தை நோக்கி இருக்க வேண்டும். இவை, குழந்தைக்கு பால் பாய்ச்சல் அதிகமாக உறிஞ்ச உதவும். அப்போது, தாயின் முதுகு, கழுத்து நேராக இருக்க வேண்டும். தேவைபட்டால், தலையணை பயன்படுத்தி தாய்ப்பால் கொடுக்கலாம்.
சரியான முறையில் பிடிப்பு இல்லாமல் தாய்ப்பால் கொடுப்பதால், பால் வராது. மார்பகத்தில் வலி ஏற்படும். இவற்றால், மார்பு காம்பில், புண், பிளவு பாதிப்பு ஏற்படும்.
பால் ஊட்டலில் சிரமங்கள், மார்பகத்தில் வலி போன்றவை இருந்தால், டாக்டரின் ஆலோசனை பெறுவது அவசியம்.