மனித இனத்தை அழிவிலிருந்து காக்கும் அரிய மருந்து க்லைப்லோசின்
மனித இனத்தை அழிவிலிருந்து காக்கும் அரிய மருந்து க்லைப்லோசின்
PUBLISHED ON : ஆக 18, 2024

மனிதன் உயிர் வாழ, உறுப்புகள் இயங்க வேண்டும். இந்த உடலை இயக்குவது, ஐம்பெரும் உறுப்புகளான, மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம். இவற்றுள் மிக முக்கியமானது இதயம். பெண் வயிற்றில் கரு உருவாகி மூன்றாம் மாதத்தில் இதயம் உருபெறுகிறது. வாழ்நாள் முழுதும் துடிக்கிறது.
இதயம், நான்கு அறைகள், நான்கு வால்வுகள் கொண்டது. நொடிக்கு, 60 மி.லி., ரத்தத்தைப் பெறுகிறது; நிமிடத்துக்கு 5 முதல் 7 லிட்டர் வரையிலான ரத்தத்தை உடல் முழுதும் செலுத்துகிறது.
ரத்தம் பத்திரம்
இதயத்தின் துடிப்பு அதிகமானால், வெளியேறும் ரத்தத்தின் அளவு குறையும். இதயத் துடிப்பை தான் நாம் நாடித் துடிப்பு என்கிறோம்.
உடலுக்குள் பாயும் ரத்தத்தின் வேகம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதன் விளைவாக, இதயம் செயலிழக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கிய காரணமாகத் தெரிவது, உடலில் சோடியம் என்ற தாதுப் பொருள் அளவு அதிகரிப்பே. சோடியம் அதிகமானால், ரத்தக் குழாய் இறுகி விடுகிறது. இதற்கு அதெரோஸ்க்லெரோசிஸ் என்று பெயர்.
முன்பெல்லாம், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கே, பொதுவாக மாரடைப்பு ஏற்படும்; இப்போது, 30 வயதினருக்கே சர்வ சாதாரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது. 2022ல், நம் நாட்டில் ஒரு லட்சம் பேர், திடீர் மாரடைப்பால் மரணம் எய்தியதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ரத்தக் குழாய் இறுகுவதால், இதயம் மட்டுமல்ல; மூளையும் பாதிப்படைகிறது; ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.
உயர் ரத்த அழுத்தத்துக்கும், சர்க்கரை நோய்க்கும் சரிவர சிகிச்சை பெறாதவர்களுக்கு, இதய செயலிழப்பு என்ற, 'ஹார்ட் பெய்லியர்' ஏற்படுகிறது.
இதய செயலிழப்பு இரு வகைப்படுகிறது; ஒன்று, டயஸ்டாலிக் டிஸ்பங்ஷன்; மற்றொன்று, சிஸ்டாலிக் டிஸ்பங்ஷன். இதை, 'கஞ்ஜஸ்டிவ் ஹார்ட் பெய்லியர்' என்றும் சொல்கிறோம். உடலில் சோடியம் அதிகரித்தால், நீருடன் சேர்ந்து, முகம், கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக நுரையீரலில் நீர் சேர்ந்து, மூச்சிரைப்பை ஏற்படுத்தும். அவசர சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும்.
உடலில், சோடியத்தை நீக்க, 'டாக்சுலா' என்ற மருந்து சிறப்பாக செயல்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொடியது சர்க்கரை
தமிழகத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், கண் பார்வை கோளாறு, சிறுநீரக பாதிப்பு, மார்பு வலி, மாரடைப்பு, நரம்பு பாதிப்பு, கால் நரம்புகளில் பிரச்னை என, ஏதாவது ஒன்று தெளிவான உறுத்தலாகத் தென்பட்டால் மட்டுமே மருத்துவர்களை அணுகுகின்றனர்.
ரத்தத்தில் உள்ள குளூக்கோஸ், இன்சுலின் உதவியால், உடலுக்கு சக்தியைக் கொடுக்கிறது. இன்சுலின் குறைந்தால் அல்லது அது வேலை செய்யாமல் போனால், உடலில் சர்க்கரை அளவு உயர்ந்து, நாளடைவில் உடல் உறுப்புகளை பாதிக்கிறது.
அதிகமான குளூக்கோஸ், கல்லீரலில் டிரைகிளிசரைடு, கெட்ட கொழுப்பாக மாறி தங்கி விடுகிறது. இது தான், 'பேட்டி லிவர்' என்று அழைக்கப்படுகிறது. இது ரத்தத்தில் கடினத்தன்மையை அதிகரித்து, ரத்த ஓட்டத்தைக் குறைக்கிறது.
இதனால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு மட்டுமல்ல; கெட்ட கொழுப்பின் அளவும் அதிகமாக இருக்கும். இது, ரத்தக் குழாயின் உள் சுவரில் அடைப்பை ஏற்படுத்தும். இதயம் மட்டுமல்லாமல், மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயும் இதனால் பாதிக்கப்படும்.
மேலும் சிறு சிறு ரத்தக் குழாய்கள் முற்றிலும் அடைந்து போகும் நிலை ஏற்பட்டு, கால்களில், கைகளில் ஆறாத புண்களான, 'டயாபட்டிக் அல்சர்' உருவாகக் காரணமாகி விடும்.
இது தான், 'காங்க்ரைன்' எனப்படுகிறது.
இதோடு மட்டுமல்லாமல், சிறுநீரகத்தின் உயிர்நாடியான குளோமரஸ் என்ற வடிகட்டிக் குழாயும் பாதிக்கப்படுகிறது. இந்த குளோமரஸ் தான், சோடியம் மற்றும் அதிகமான சர்க்கரையை வடிகட்டி வெளியேற்றும் பணியைச் செய்கிறது.
இது அடைபட்டால், இவை இரண்டும் உடலிலேயே தங்கி, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தி, உடலில் யூரியா, கிரியாடினின் கழிவுகள் உடலில் தங்க ஏதுவாகி விடும்.
ஐந்து முக்கிய பிரச்னைகளான, சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, ஹார்ட் பெய்லியர், கிட்னி பெய்லியர், மாரடைப்பு ஆகியவற்றிலிருந்து நம்மைக் காக்க, பேருதவியாக இருக்கும் மருந்து 'டாபா க்லைப்லோசின்' என்ற டாக்சுலா.
இதய மாற்று அறுவை சிகிச்சை, பேஸ்மேக்கர், டீபைப்ரிலேட்டர் போன்ற கருவிகளைப் பொறுத்திக் கொள்ள முடியாமல் தவிப்பவர்களுக்கு, இந்த மருந்து உபயோகமாக இருக்கிறது.
பேராசிரியர் டாக்டர் சு. அர்த்தநாரி, MBBS,MD,DM,,FACC.FCSI.FSCAIஇருதய நோய் ஊடுருவல் நிபுணர்
98843 53288