PUBLISHED ON : பிப் 28, 2016

உடலும், மனமும் சோர்வடைந்த நிலையில், ஒரு கப் டீ குடித்தால், புத்துணர்ச்சி கிடைக்கும் என்பது, அனைவரும் அறிந்த உண்மை. சாதாரண டீயை விட, கிரீன் டீ யை பருகுவதால் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் கிடைக்கின்றன, என்கிறது மருத்துவ ஆய்வுகள்.
பசுந்தேயிலையின் கொழுந்து, இளம் இலையில் இருந்து தயாரிக்கப்படும் கிரீன் டீயில், ஆறு விதமான பாலிபீனால்கள் என்ற சத்துப் பொருள் கலந்துள்ளன. அதில், எபிகேட்சின், கேலோகேட்சின், கேட்சின், எபிகேட்சின் கேலட், எபிகேட்சின் கேலோகேட்சின், எபிகேலோ கேட்சின் என்ற சத்து கலந்துள்ளது. கேபின், தியோபுரோமின், தியாபிலின் போன்ற, ஆல்கலாய்டு என்ற நுண் சத்தும் கலந்துள்ளன. இவை, மனித உடலுக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாமல், மனித உயிர்களை காக்கும் சஞ்சீவிகளாகவும் செயல்படுகின்றன என, மருத்துவர்கள் புகழ்கின்றனர்.
கிரீன் டீயின் ரகசியமே, அதில் அதிகளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் (நோய் எதிர்ப்பு சக்தி) தான். பழம், காய்கறி, கீரைகளில் உள்ளதை விட, பல மடங்கு சத்துகள், கிரீன் டீயில் உள்ளன. ஒரு கப் கிரீன் டீ, 10 கப், ஆப்பிள் பழச்சாறுக்கு சமம் என, கூறப்படுகிறது. சீனர்கள், கிரீன் டீயை தொடர்ச்சியாக பருகுவதால் தான், அவர்களின் சராசரி வயது, 90ஐ தாண்டியுள்ளது என,
ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
கிரீன் டீயின் நன்மைகள்
* ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து, தேவையற்ற கொழுப்பை குறைத்து, உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கிறது.
* இதய நோய் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள தியோபிளவின் என்ற நுண் சத்து, ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து, குளூக்கோஸ் வினையை ஊக்கப்படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து, சோம்பலை போக்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது; இதில் உள்ள பாலிபீனால்கள் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் அழிக்கிறது. ரத்தப்புற்று, நுரையீரல் புற்று, தொண்டை புற்று, வயிறு, குடல், ஈரல் புற்று மற்றும் மார்பகப்புற்று போன்றவற்றின் தீவிரத்தை குறைக்கிறது.
* எலும்பில் உள்ள தாது பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து, எலும்பை பலப்படுத்துகிறது. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது; வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. இதில் உள்ள எபிகேலோ கேட்சின் என்ற நுண்சத்து, மூளையின் செயல் திறனை அதிகரித்து, நினைவாற்றலை பெருக்குகிறது. சருமத்தை பாதுகாத்து, இளைமையாக வைக்கிறது; முகப்பரு, வறண்ட சருமம், சரும அலர்ஜிக்கு சிறந்த நிவாரணியாக உள்ளது.
* ரத்த அழுத்தம், பக்கவாதத்தை தடுக்கிறது. எலும்புகள் பலமடையவும், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது; மூட்டு வலியை தடுக்க உதவுகிறது; உடலில் ஏற்படும் புண்கள், காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது. இதில் உள்ள பாலிபீனால்கள் மன இறுக்கத்தை போக்கி, மூளையில், ஆல்பா அலைகளை தூண்டி மனதுக்கு அமைதி தருகிறது.