PUBLISHED ON : பிப் 28, 2016

வைட்டமின் டி பற்றாக்குறையினால், ரிக்கெட்ஸ் நோய் ஏற்படுகிறது. உணவில் இந்த வைட்டமின் பற்றாக்குறை ஆனாலும், சூரிய வெளிச்சம் படாமல் வளர்த்தாலும், குழந்தைகளுக்கு இந்த நோய் ஏற்படுகிறது.
அறிகுறிகள்: பெரும்பாலும் ஆறுமாதங்களிலிருந்து, ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத்தான், இந்த நோய் அதிகமாக ஏற்படுகின்றது. ஆரம்பத்தில் குழந்தை எப்போதும் சிணுங்கிக் கொண்டே இருக்கும். குழந்தையின் தலை அடிக்கடி வியர்வையால், நன்கு நனைந்து விடும்.
தாயார் போர்வை போர்த்தினால், அதை விலக்கித் தள்ளி அழும். மார்பு எலும்புகளின் ஓரம், உத்திராட்ச மாலை போல பருத்து விடும். பல் முளைக்கும் பருவம் தாண்டி, பல மாதங்களான பின்னர் கூட, பல் முளைக்கும் அறிகுறி கொஞ்சம்கூட இல்லாமல் வாய் பொக்கையாக இருக்கும்.
உடலில் உள்ள எலும்புகள் அனைத்தும் பலவீனமாகி விடும். இதனால் குழந்தைகளின் கால் எலும்புகள் வளைந்து போகும். முட்டிகள் தட்டும்; இடுப்பு எலும்புகள் இயல்பான அகன்ற தோற்றத்தை இழந்து குறுகி விடும். பெண் குழந்தைகளுக்கு ரிக்கெட்ஸ் நோய் ஏற்பட்டு, இடுப்பு எலும்புகள் குறுகிவிட்டால், பின்னர் அவர்கள் வளர்ந்து கர்ப்பம் தரிக்கும் போது, பிரசவம் மிகவும் கஷ்டமானதாகி விடும். ரிக்கெட்ஸ் நோயினால் மற்ற எலும்புகளும் உறுதி குன்றும். சாதாரணமாக, ஆரோக்கியமான குழந்தையின் தலையில் உள்ள உச்சிக்குழி என்னும் பள்ளம், குழந்தை பிறந்த, 18வது மாதத்துக்குள் நன்றாக மூடிக் கொண்டு விடும். ஆனால், ரிக்கெட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட
குழந்தைகளுக்கு, இரண்டு வயதான பின்னரும் உச்சிக்குழி மறையாது.
ரிக்கெட்ஸ் நோய் குடலை அதிகமாக பலவீனப்படுத்தி விடுவதால், குழந்தைகளுக்கு அடிக்கடி ஜீரணக் குறைபாடுகள் ஏற்படும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவை பருத்து, வயிறு பானை போல, முன்னால் தள்ளிக் கொண்டிருக்கும். மூச்சு விட சிரமப்படும். சளி, இருமல் ஆகியவை அடிக்கடி ஏற்படும். நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுவதால், இந்தக் குழந்தைக்கு வலிப்பு நோய் வரவும் அதிக வாய்ப்பு உள்ளது.
சிகிச்சை: வரும்முன் தடுப்பதுதான், இந்த நோய்க்கு சிறந்த சிகிச்சை. தாய்ப்பால் கொடுத்துதான் குழந்தையை வளர்க்க வேண்டும். புட்டிப் பால் கொடுத்தால் குழந்தைக்கு கூடுதலாக, வைட்டமின் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் இரண்டு வேளைகள், குழந்தைக்கு மீன் எண்ணெய் கொடுக்க வேண்டும். நல்ல சூரிய வெளிச்சத்தில் குழந்தையை தினமும் விளையாட விட வேண்டும். நல்ல சத்துள்ள உணவு கொடுக்க வேண்டும். ரிக்கெட்ஸ் நோய் ஏற்பட்டிருப்பதாக சந்தேகப்பட்டால்,
குழந்தையை உடனடியாக மருத்துவரிடம் காட்டி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.