PUBLISHED ON : பிப் 27, 2022

'என்ன தான் நான் நன்றாக வேலை செய்தாலும், யாரும் அதைப் புரிந்து கொள்வதில்லை' என்ற புலம்பல்கள், அங்கலாய்ப்புகள் அதிகம் கேள்விப்படுவோம். ஒவ்வொரு முறையும், எதிர்மறை விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் போது, நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்கள் ஒவ்வொன்றும் நம் எதிர்மறை எண்ணங்களை, புலம்பல்களை கேட்கின்றன என்பது அறிவியல் உண்மை.
மனக் குமுறல்களை அடுத்தவர்களிடம் சொல்லி புலம்பும் போது, மன பாரத்தை கொட்டித் தீர்த்து விட்டோம் என்ற நிம்மதி அந்த நேரத்தில் இருந்தாலும், உண்மையில் நம் மன கஷ்டத்தை, மன அழுத்தத்தை அதிகப் படுத்தவே செய்கிறோம். எப்படி?
பயம் தரும் பேய் படத்தை திரும்ப திரும்ப பார்ப்போமா? ஆனால், மாற்றவே முடியாத மற்றவர்களின் குணத்தை, நடவடிக்கையை மட்டும் திரும்ப திரும்ப பேசுகிறோம். அப்படிச் செய்யும் போது, அந்த விஷயம் ஆழமாக நம் மனதில் பதிந்து விடுகிறது; மனச் சோர்வு அதிகரிக்கிறது. யாரைப் பற்றி பேசுகிறோமோ அந்த நபர் மீது கோபம், வெறுப்பு அதிகரிக்கும்.
ஏதாவது பிரச்னை என்றால், மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் தான். பகிர்ந்து கொள்வதற்கும், ஒரே விஷயத்தையே புலம்புவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் போது, மன அமைதி, தெளிவு கிடைக்கலாம். ஆனால், அங்கலாய்க்கும் போது, எதிர்மறை உணர்வுகளே அதிகரிக்கும்.
நிறுவனங்களில், குடும்பங்களில் இருக்கும் சில நடைமுறைகளை நம்மால் மாற்ற முடியாத பட்சத்தில், அமைதியாக அதை ஏற்றுக் கொள்வது தான் நல்லது. ஒரு சில விஷயங்கள் நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, வேலையைவிட்டு விட்டு பணம் இல்லாமல் வாழ முடியுமா? திருமண வாழ்க்கையில் விவாகரத்து செய்து விட்டு தனியே போராட முடியுமா? அப்படி முடியாத நிலையில் அமைதியாக ஏற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம்.
வெறுப்பு, கோபம் இவற்றில் இருந்து வெளியில் வர, முதல் இரண்டு வாரம் எந்த நபர், விஷயம் மீது வெறுப்பு உள்ளதோ, அதைப்பற்றி எதுவும் பேச வேண்டாம். அடுத்த வாரம் அதில் உள்ள நல்ல செயல்கள் பற்றி மட்டும் பேசலாம். அதற்கு அடுத்து, அவர்களுடன் எந்த சமரசமும் இல்லாமல், அதே நேரம் முரண்பாடும் இல்லாமல், எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், நேரடியாக தொடர்பு கொள்ள முயற்சி செய்யலாம்.
இந்தப் பயிற்சியை செய்து பாருங்கள். பதற்றம், பயம், கோபம், வெறுப்பு எல்லாம் போய் அமைதி வரும். அப்படி இல்லாமல், மற்றவர்களைப் பற்றி எதிர்மறையாக பேசப் பேச, காலப் போக்கில் என்ன ஆகிவிடுமோ என்ற பதற்றம் மட்டுமே மிஞ்சும்.
டாக்டர் சித்ரா அரவிந்த்,
மனநல ஆலோசகர்,
சென்னை
05660 75475
