PUBLISHED ON : ஏப் 06, 2025

இந்தியாவில் பல் சார்ந்த விழிப்புணர்வு மிகவும் குறைவு என்பதால், முதுமையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக, கூறுகின்றனர் டாக்டர்கள்.
ஓரல் மெடிசின் மற்றும் ரேடியாலஜி துறை நிபுணர் நந்தினி கூறியதாவது:
பிற உடல் உறுப்புகளை போன்று, பற்களையும் ஆரோக்கியமாக பராமரிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக, வயது முதிர்ந்தவர்கள் இதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. உடல் ஆரோக்கியத்துடன் பல்லுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.
முதுமையில் எலும்புகள் போன்று, பற்களிலும் தேய்மானம் ஏற்படும். பற்கள் தேய்மானம், ஈறு இறங்குதல், பல் தளர்வு, பல் ஆடுதல், பல் விழுதல், வாய் உலர்தல், பல்லின் வேர் பகுதியில் சொத்தை என, பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
வயதானால் இதுபோன்ற பிரச்னைகள் இயல்பு என்று கருதி, சரிசெய்ய முடிந்தவற்றையும் அலட்சியம் காரணமாக விட்டுவிடுகின்றனர்.
வைட்டமின் டி குறைபாடு
அதேபோன்று, மூட்டுவலி, உடலில் வேறு பிரச்னைகள் காரணமாக வெளியிடங்களுக்கு செல்ல முடியாத முதியவர்களுக்கு, வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படுகிறது. இச்சத்து குறைபாடு வாய் சார்ந்த பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.
வயதானவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, கட்டாயம் பல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். மிருதுவாக உள்ள பிரஷ் பயன்படுத்த வேண்டும். உடல் இயக்க குறைபாடு உள்ளவர்கள், எலக்ட்ரிக் டூத் பிரஷ் பயன்படுத்தலாம்.
முதுமையில் ஆரோக்கியம்
பல் சார்ந்த பிரச்னைகளை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட்டால், முதுமை ஆரோக்கியமாக இருக்கும். பல் பிரச்னைகள் ஆரம்பிக்கும் போது, உணவு உட்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டு, பிற ஆரோக்கிய சீர்கேடுகளை ஏற்படுத்திவிடும்.
பல் கூச்சம் ஏற்படும் போதே, டாக்டர்களை பார்த்து சரிசெய்துகொள்ள வேண்டும். எந்த நிலையிலும் சிகிச்சைகள் உண்டு என்பதால், தயக்கமின்றி சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.