
ஜெகதீஸ்வரி, மதுரை: எனது மூத்த மகனுக்கு இரண்டரை வயதாகிறது. சில பற்கள் கறுப்பாக இருக்கிறது. எதனால் இப்படி ஏற்பட்டது?
குழந்தைகளுக்கு வரும் பல் சொத்தை பெரியவர்களுக்கு வரும் சொத்தையில் இருந்து மாறுபட்டது. உணவு உட்கொள்ளும் முறையும் பற்களை சுத்தம் செய்யும் விதமும் தான் பல் சொத்தை வருவதற்கு காரணம். பால்பற்கள், அதுவும் விழப்போகும் பற்கள் தானே என்று பெற்றோர் அலட்சியம் காட்டக்கூடாது.
நிரந்தர பற்கள் முளைக்கும் வரை பால் பற்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் உரிய நேரத்தில் சரியான வரிசையில் நிரந்தர பற்கள் முளைக்கும். குழந்தைகள் சாப்பிடும் உணவில் அதிகளவில் மாவுசத்து எனப்படும் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் இருக்கும். அவை பற்களில் ஒட்டிக் கொள்ளும் தன்மை உள்ளவை. வெகுநேரம் பற்களின் மேல் ஒட்டிக் கொள்ளும் போது ஒரு படலம் போன்று உருவாகும்.
உமிழ்நீர் அதன் மேல் பட்டு அமிலம் போன்ற திரவம் சுரக்கும். இது பற்களை அரிக்கும் தன்மை கொண்டது. வேகமாக பரவி பல் சொத்தை ஏற்படுத்தும். அதுதான் பற்கள் அனைத்தும் கருப்பாக இருப்பது போல தெரியும். உடனடியாக டாக்டரிடம் சிகிச்சை பெறுவது நல்லது.
- டாக்டர் ஜெ. கண்ணபெருமான் பல் சீரமைப்பு நிபுணர், மதுரை
சிந்தாமணி, குடும்பத்தலைவி கொடைக்கானல்: மாதவிடாய் நிறுத்தத்திற்கு பின் இடுப்பு வலி, முழங்கால், உடல் அசதி ஏற்படுவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவது வழக்கம்.இத்தருணத்தில் உடல் எடை அதிகரிக்கும் சூழல் ஏற்படும். இதனால் முழங்கால், இடுப்பு வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இதை சரி செய்ய உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். முட்டை, பால், உலர் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் அதிகரித்து எலும்புகளுக்கு வலு அதிகரிக்கும். இதன் மூலம் இப்பிரச்னை படிப்படியாக சரியாகும்.
- டாக்டர் நீத்து கிரண், கொடைக்கானல்
சிவா, தேனி: தற்போது அனைவரும் அலைபேசியில் நேரத்தை அளவுக்கு அதிகமாக செலவிடுகின்றனர். இச் சூழலில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் துாக்கம் ஏன் அவசியம்?
ஒரு மனிதன் தனது வாழ்நாட்களில் 75 ஆண்டுகள் வாழ்ந்தால் அவர் கட்டாயமாக 25 ஆண்டுகள் துாக்கத்தில் கழித்திருக்க வேண்டும். ஏனெனில் நம் மூளையின் செயல்பாடு நாம் உறங்கும் போதுதான் மிக அதிகளவில் இயங்கும்.
இந்த சமயத்தில்தான் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஓய்வு எடுப்பதுடன், தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும். நம் மூதாதையரிடம் ஒரு பழக்கம் இருந்தது. அது முன்னிரவு துாக்கம், பின்னிரவு துாக்கம் என்பார்கள். முன்னிரவில் இரவு 7:00 மணிக்கு துாங்கி, நள்ளிரவு 12:00 அல்லது 1:00 மணிக்கு எழுந்துவிடுவர்.
பின் பின்னிரவு துாக்கமாக மீண்டும் அரை மணி நேரம் கழித்து துாங்கி, அதிகாலை 4:00 மணிக்கு எழுந்துவிடுவர். இதுதான் மனித உடலுக்கான ஆரோக்கியமான துாக்கமாக மனநல மருத்துவத்தில் பரிந்துரைத்துள்ளது. ஆனால் தற்போது முன்னிரவு துாக்கம் என்பது யாரும் துாங்குவது இல்லை. இதனால்தான் அதிகளவில் மனநல பாதிப்புகள் ஏற்பட்டு, அது உடல்நல பாதிப்பாக உருவெடுத்து விடுகிறது. வாழ்க்கையில் எதை செய்கிறீர்களோ இல்லையோ நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் தொடர்ந்து துாங்கிவிட்டால் நம்மை அது பல பாதிப்புகளில் இருந்து காப்பாற்றும்.
-டாக்டர் கோரா ராஜேஷ், மாவட்ட மன நல மருத்துவர், தேனி
கே.நர்மதா, ராமநாதபுரம்: காய்ச்சல், உடம்பு வலி, வாந்தி, வயிற்று வலி உள்ளது. இதற்கு தீர்வு என்ன?
இந்த காய்ச்சல் உண்ணிக்காய்ச்சலாக இருக்கலாம். இது கிருமிகளால் வரக்கூடியது. செடி கொடிகள், புதர், பயன்படுத்தப்படாத வீடுகள், அறைகளில் உள்ள உண்ணிகளால் இந்த காய்ச்சல் கிருமி பரவி பாதிப்பை ஏற்படுத்தும். மற்ற காய்ச்சல்களில் இருந்து இதில் உடலில் உண்ணி கடித்த இடத்தில் கருப்பு சிவப்பு தழும்பு இருக்கும்.
கையிடுக்கு, தொடையிடுக்கு, கழுத்து பகுதியில் நெறி கட்டும். இது போன்ற பாதிப்புகள் தீவிர காய்ச்சல் இருந்தால் உண்ணி காய்ச்சலாகும். இந்த காய்ச்சல் தீவிரமடைந்தால் டெங்கு காய்ச்சல் போன்று சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.
ரத்த தட்டணுக்களை பாதிக்கும். கல்லீரல், மண்ணீரலை பாதிக்கும். சில சமயங்களில் சிறு மூளையையும் பாதிக்கும். காய்ச்சல் ஏற்பட்டவுடன் டாக்டர்கள் ஆலோசனையுடன் 'டாக்கிசைக்கிளின்' மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரம்ப கட்டத்தில் கட்டுப்படுத்தினால் உடலில் பாதிப்பு இருக்காது. இந்த காய்ச்சல் ஒரு வாரம் வரை இருக்கும்.
- டாக்டர் மு.முஹம்மது ஜாஸிர், பொது மருத்துவ சிகிச்சை நிபுணர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்
அ.பிரியா, சிவகங்கை: குழந்தைகளின் பற்களை எவ்வாறு பாதுகாப்பது?
குழந்தைகளின் பற்களைப் பாதுகாக்க தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும். ப்ளூரைடு பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய சர்க்கரை உணவுகளை குறைக்க வேண்டும். முதல் பல் வந்தவுடன் மென்மையான துணியால் ஈறுகளைத் துடைக்க வேண்டும். மென்மையான பற்பசை மற்றும் பிரஷ் கொண்டு ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கலாம்.
குழந்தையின் முதல் பல் வந்தவுடன் பல் டாக்டரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். பல் துவாரங்கள் அல்லது பிற பிரச்னை இருந்தால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறலாம். குழந் தைகளுக்கு பல் துலக்கும் பழக்கத்தை சிறு வயதிலிருந்தே ஏற்படுத்த வேண்டும்.
- டாக்டர் ஜெ.விஜயபாரத், பல் டாக்டர் அரசு மருத்துவமனை, காளையார்கோவில்
மனோகரன், விருதுநகர்: கோடையில் வயிற்று போக்கு, மஞ்சள் காமாலை, சிரங்கு புண்களால் குழந்தைகள் அவதிப்படுவதை தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யலாம்?
கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்க குழந்தைகள், சிறுவர்கள் சுகாதாரம் அவசியமானது. ரோட்டு கடைகளில் சாப்பிடாமல் இருப்பது, தண்ணீரை காய்ச்சி குடிப்பது, செருப்பு போட்டு வெளியே செல்வது அவசியம். வெயில் காலத்தில் சிரங்கு புண்களும் அதிகம் வருகிறது. குழந்தைகளை தினமும் இருமுறையாவது ஈரத்துணியால் உடலை துடைத்து விடுவது, சிறுவர்களை பருத்தி ஆடைகளை அணிய செய்வது அவசியம்.
கை, கால்களை அடிக்கடி கழுவ அறிவுறுத்த வேண்டும். நகத்தை வெட்டி சுத்தமாக வைக்க வேண்டும். வெளியில் வெட்டி வைத்த பழங்களை வாங்க நேர்ந்தால் அந்த பொருள் ஈ தாக்காமல் மூடி வைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க, நீர்ச்சத்து குறையாமல் இருக்க நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
- டாக்டர் அரவிந்த்பாபு, குழந்தைகள் நலத்துறை, பேராசிரியர், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை