PUBLISHED ON : ஜூலை 28, 2024

இதயம் சுருங்கி விரிந்து, உடலின் பிற உறுப்புகளுக்கு ரத்தத்தை அனுப்பும் பணியை தொடர்ந்து செய்கிறது. இதயத் துடிப்பு இயல்பாக இருந்தால் மட்டுமே இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். ஒழுங்கற்ற இதயத் துடிப்பிற்கு 'அரித்மியா' என்று பெயர்.
இதயத் துடிப்புகளை ஒருங்கிணைக்கும் மின் அலைகள் சரியாக வேலை செய்யாதபோது சீரற்ற இதயத் துடிப்பு ஏற்படலாம். இதனால் படபடப்பு, தலைசுற்றல், மூச்சுத்திணறல், மார்பு வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
பேஸ்மேக்கர்
பேஸ்மேக்கர் என்பது, ஒரு சிறிய பேட்டரி மூலம் இயங்கும் கருவி. மார்பின் மேற்பகுதியில் தோலின் அடியில் பொருத்தப்படுகிறது. 'லீட்ஸ்' எனப்படும் மெல்லிய கம்பிகளால் இதயத்துடன் இணைக்கப்படுகிறது. இதயத் துடிப்பை தொடர்ந்து கண்காணித்து, நோயாளிக்கு ஏற்றவாறு இதயத் துடிப்பின் வேகத்தை மாற்றக்கூடிய திறன் கொண்டது.
கார்டியோவர்ட்டர் - டிபிபிரிலேட்டர்
மெதுவான இதயத் துடிப்பை பேஸ்மேக்கர் சரி செய்வது போன்று, கார்டியோவர்ட்டர் - டிபிபிரிலேட்டர்கள் அதிவேக இதயத்துடிப்பு, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை கண்டறிந்து சரி செய்ய உதவுகிறது. சீரற்ற இதயத்துடிப்பை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சையளிக்கும் திறன் ஐ.சி.டி.,களில் உள்ளது. இது, தேவையில்லாத இதய அதிர்ச்சியை குறைக்கிறது.
செயற்கை நுண்ணறிவு - ஏ.ஐ.,
இதயத்தில் ஏற்படும் நிகழ்வுகளை துல்லியமாக கணிக்கவும், கண்டறியவும், தேவைக்கு ஏற்ப செயல்படவும் ஏ.ஐ., உதவுகிறது.
சீரற்ற இதயத்துடிப்பு ஏற்படும் முன்னரே, இதயத்தில் உள்ள மின் அலை மாற்றங்களை கணித்து, சீரற்ற இதயத் துடிப்பு வராமல் தடுக்கிறது. அத்துடன், நோயாளியின் தேவைக்கு ஏற்ப இதயத்தில் பொருத்தப்பட்ட கருவிகளின் செயல்பாட்டை மாற்றியமைக்கவும் உதவுகிறது.
மொபைல் மற்றும் கிளவுட் தொழில்நுட்பங்கள்
மொபைல் போன்களை கொண்டு ப்ளூடூத் அல்லது பிற ஒயர்லெஸ் தொழில்நுட்பங்களின் வழியாக பேஸ்மேக்கர்கள், ஐ.சி.டி.,களிலிருந்து இதய துடிப்பு, பேட்டரி ஆயுள், சாதனத்தின் செயல்திறன் ஆகிய தகவல்களை பெறலாம்.
நோயாளிகளின் சீரற்ற இதயத்துடிப்பு, சாதனத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் மொபைல் செயலி எச்சரிக்கும்.
பேஸ்மேக்கர் மற்றும் ஐ.சி.டி.,களில் இருந்து நோயாளி குறித்த தரவுகளை, 'கிளவுட் ஸ்டோரேஜ்'ஜில் பாதுகாப்பாக சேமிக்க முடியும்; தொடர்ந்து கண்காணிக்க இது உதவும்.
இதயத் துடிப்பின் போக்குகளை கண்டறிவது உள்ளிட்டசெயல்பாடுகளை கிளவுட் கம்ப்யூட்டிங் செயல்படுத்துகிறது. டாக்டர்கள் இதை எந்த இடத்திலிருந்தும் காண முடியும். இதனால், இருந்த இடத்தில் இருந்தே மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தொடர் சிகிச்சைகள் எளிதாகின்றன.
டாக்டர் டி.ஆர்.முரளிதரன்,இயக்குனர், இதய அறிவியல் துறை, எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனை,சென்னை96444 96444 info@srmglobalhospitals.com