PUBLISHED ON : ஜூலை 28, 2024

உலக அளவில் மிகப் பரவலாக பாதிப்பு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அதிக எண்ணிக்கையில் உள்நோயாளிகளாய் குழந்தைகள் சிகிச்சை பெறுவதற்கும் முக்கிய காரணமான நோய் ஆஸ்துமா. நம் நாட்டில் 7 கோடி பேர் ஆஸ்துமாவால் சிரமப்படுகின்றனர். பல பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் நாங்கள் நடத்திய 'ஸ்கிரீனிங்' நிகழ்ச்சியில், 100 பேரில் 18 பேர் ஆஸ்துமா அறிகுறிகளுடன் இருப்பது தெரிய வந்தது.
மூச்சுக் குழாய் ஒவ்வாமையாலும், மரபணுக்கள் மூலமாக ஏற்படும் பாதிப்பாலும், மூச்சுக் குழாயில் சுருக்கம், வீக்கம், அதிக சளி உண்டாகி மூச்சை வெளியே விடுவதில் சிரமம் ஏற்பட்டு, மூச்சு விடும் போது விசில் சத்தம் கேட்பது இந்நோயின் முக்கிய வெளிப்பாடு.
அதிக இருமல், மூச்சு விடுவதில் கஷ்டம், அதிக களைப்பு, இப்படி பல பிரச்னைகள் கொடுக்கும் நோய் ஆஸ்துமா. இது குழந்தைகளுக்கு மூச்சிரைப்பு இல்லாமல், தொடர் இருமலாக வருகிறது.
பல குழந்தைகளுக்கு விசில் சத்தம் இல்லாமல், தொடர் இருமல், இரவு நேரத்தில் இருமல், பூங்கா சென்றால், சிரித்தால், மூச்சு விடும் போது இருமல் என்று எந்த நேரமும் வரும். இதுவும் ஆஸ்துமாவில் ஒரு வகை. இது வழக்கமான ஆஸ்துமாவில் இருந்து வேறுபட்டதாக இருமலுடன் இருப்பதால், இதை 'காப் வேரியன்ட் ஆஸ்துமா' என்று சொல்கிறோம்.
மரபணு, மாசுத்தன்மை இணைந்து கொடுக்கும் இந்நோய்க்கு, நல்ல வீரியமான பக்க விளைவுகள் அதிகம் இல்லாத நாள்பட்ட சரியான சிகிச்சை இன்ஹேலர் தான்.
ஸ்டீராய்ட் இன்ஹேலர் தடுப்பு மருந்தாகவும், 'சால்பூடமால்' போன்ற இன்ஹேலர் உடனடி நிவாரண மருந்தாகவும் பலனை தருகிறது.
இது, இன்ஹேலரில் வரும் ஸ்டீராய்டு, வாய் வழியாக விழுங்கும் ஸ்டீராய்டு, ஊசி மூலம் எடுத்துக் கொள்ளும் ஸ்டீராய்டு போன்று பக்க விளைவுகளை தராத பாதுகாப்பான ஸ்டீராய்டு.
கர்ப்பிணியரும் இதை உபயோகிக்கலாம். ஆஸ்துமா கட்டுக்குள் இல்லை என்றால் குறை பிரசவம், கருச்சிதைவு, வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. மாதவிடாய் காலத்தில் பல இளம் பெண்களுக்கு ஆஸ்துமா அதிகமாகலாம்.
'பிரீ மென்ஸ்ட்ரல்' ஆஸ்துமா எனப்படும் இப்பிரச்னைக்கும் நல்ல தீர்வு உண்டு. அலர்ஜி பரிசோதனை மூலம் என்னவிதமான ஒவ்வாமையால் பாதிப்பு ஏற்படுகிறது என்பதையும் துல்லியமாக அறிய முடியும். நுரையீரல் பரிசோதனை செய்து, ஆஸ்துமாவின் தீவிரம் எந்த அளவு உள்ளது என்பதையும் அறிய முடியும்.
ஆஸ்துமா என்று நோயாளிகளிடம் சொல்ல பல மருத்துவர்களுக்கும் தயக்கம் உள்ளது.
சரியான மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையுடன் நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட வயதில் ஆஸ்துமா தானாகவே சரியாகி விடும் என்பது அறியாமை. இன்றும் கூட சிறு குழந்தைகள், இளம் வயதினர், சரியான சிகிச்சை கிடைக்காமல் ஆஸ்துமாவால் உயிரிழக்கும் சோகம் தொடர்கிறது.
பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கு எங்களின் கற்பக சுவாசாலயா சேவை மையம் முழுமையாக இலவச சிகிச்சை அளிக்கிறது.
டாக்டர் ஆர். ஸ்ரீதரன்,ஆஸ்துமா, அலர்ஜி சிறப்பு மருத்துவர்,குழந்தைகள் நல மருத்துவர், சென்னை87544 10349, & 78451 31348