PUBLISHED ON : நவ 06, 2011

இதயம் காப்போம்: பக்கவாதம் வராமல் இருக்க என்ன வழி
எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து ஆறுமாதங்களாகிறது. தற்போது ஒருவாரமாக காய்ச்சல் உள்ளது. இந்நிலையில் நான் பொது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாமா?
எஸ். சந்திரசேகரன், திண்டுக்கல்
பைபாஸ் சர்ஜரி என்பது இருதயத்தில் உள்ள ரத்தநாள அடைப்பை சரிசெய்ய, நெஞ்சு, கால், கை இவற்றில் ஏதாவது ஒன்றில் இருந்து ரத்தநாளத்தை எடுத்து, இருதய ரத்தநாளத்தில் பொருத்தி, அடைப்பை சரிசெய்யும் அறுவை சிகிச்சை. இதுமுடிந்த பின் 3 மாதங்கள் கழித்து, முழுபரிசோதனை செய்யப்படும். அதில் ரத்தம், சிறுநீர், மார்பு எக்ஸ்ரே, எக்கோ, டிரெட் மில் பரிசோதனை அடங்கும். இந்த பரிசோதனைகளின் முடிவு 'நார்மல்' என இருந்தால் பைபாஸ் சர்ஜரி நல்ல பலன் தந்துள்ளது எனப் பொருள். இதன் பின் ஆண்டுக்கு ஒருமுறை டாக்டரை அவசியம் சந்தித்து அவரது ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும். இதற்கிடையில் தலைவலி, காய்ச்சல் என வேறு சில சிறு, சிறு தொந்தரவுகள் இருந்தால், தாரளமாக பொது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.
எனக்கு மூன்று மாதங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மருந்து, மாத்திரை எடுத்து வருகிறேன். சமீபத்தில் டாக்டரை சந்தித்தபோது அவர், பழைய மருந்துடன், TRIMETAZIDINE' என்ற மருந்தை தந்துள்ளார். இது என்ன மருந்து?
பி. பாண்டியராஜன், மதுரை
'TRIMETAZIDINE' என்பது பல ஆண்டுகளாக இருதய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்து. இது இருதயத்தின் செல்களுக்கு நல்ல பலனளிப்பதாக தெரியவந்துள்ளது. இத்துடன் இருதயத்தின் பம்பிங் திறனையும் அதிகரிக்கச் செய்கிறது. இது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்ல பலனளிக்கிறது. இம்மருந்தை தொடர்ந்து எடுப்பதால் எவ்வித பக்க விளைவும் ஏற்படுவதில்லை. எனவே இம்மருந்தையும் தொடர்ந்து எடுப்பதால் நல்லதுதான்.
பக்கவாதம் வராமல் இருப்பதற்கு உங்களின் ஆலோசனை என்ன?
கே. குமாரசாமி, கோவை
பக்கவாதமும் மாரடைப்பைப் போல ரத்தக்குழாய் நோய்தான். மாரடைப்பில், எப்படி இருதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்படுகிறதோ அதேபோல, பக்கவாதத்தில், மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தஓட்டம் தடைபடுகிறது. இது வராமல் இருக்க, மிகமுக்கியமாக ரத்த அழுத்தத்தை 120/80 என்ற அளவில் வைத்து இருக்க வேண்டும். இத்துடன் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்தல், ரத்தத்தில் எல்.டி.எல்., அளவை 100 மி.கி.,க்கு கீழ் வைப்பது அவசியம். இத்துடன் வாழ்க்கை முறை மாற்றம், தினசரி உடற்பயிற்சி செய்தல், உணவுக் கட்டுப்பாடு அவசியம்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை.
