தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூலிகை மருத்துவம்: வயிறோடு உறவாடுவோம்

மூலிகை மருத்துவம்: வயிறோடு உறவாடுவோம்

மூலிகை மருத்துவம்: வயிறோடு உறவாடுவோம்


PUBLISHED ON : நவ 06, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நம் உட்கொள்ளும் உணவுகள் நமது வயிற்றுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். வயிறு என்பது இரைப்பை, முன் சிறுகுடல், பெருங்குடல் மற்றும் மலப்பை ஆகியன ஒன்றன்பின் ஒன்றாக, இணைந்த உணவுப்பாதையை உள்ளடக்கிய ஒரு மண்டலமாகும். வயிறை நமது நண்பனாக எண்ணி, வயிறுக்கு உகந்த எளிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். வயிறை எதிரியாக நினைத்து, அதிக காரமுள்ள உணவுகள், சாராயம், பல்வேறுவகையான வேதிப்பொருட்கள், மாத்திரைகள் ஆகியவற்றை உட்கொள்வதால் புண்ணாகிவிடுகின்றன.



அதுமட்டுமின்றி, நாம் உட்கொள்ளும் உணவுகள் பெரும்பாலும் அனலில் சமைக்கப் பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக வெப்பத்தில் கரையக்கூடிய அல்லது ஆவியாகக்கூடிய சத்துகள் சமைக்கும் பொழுது ஆவியாகிவிடுவதால் நமக்கு உண்ணும் உணவின் பலன் கிடைப்பதில்லை. ஆகையால் வயிற்றில் புண்கள் உண்டாகின்றன. நமது உணவிலுள்ள ஒவ்வாத பொருட்கள் மற்றும் நச்சுத்தன்மையுள்ள உரம், பூச்சி மருந்து ஆகியன உணவுப்பாதையை சேதப்படுத்துகின்றன. உணவுப்பாதையில் உறுத்தலையும் எரிச்சலையும் ஏற்படுத்தி, புண்களை உண்டாக்கி, அவற்றில் நுண்கிருமிகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகின்றன. இதனால் கடுமையான குடற்புண்களும், உணவுப்பாதை சார்ந்த நோய்களும் உண்டாகின்றன.



ஒவ்வாத உணவுகள் அல்லது பயன்படாத உணவுகளை உட்கொள்வதால் இரைப்பை அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதன் தொடர்ச்சியாக உணவை செரிப்பதற்கு அதிகமான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்து, இரைப்பையின் உட்சுவர்களையும் சேதப்படுத்தி, தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் முயற்சியில் இரைப்பை ஈடுபடுவதால் கொஞ்சங்கொஞ்சமாக இரைப்பை புண்கள் உண்டாகின்றன. அத்துடன் நெஞ்சு கரித்தல், புளித்த ஏப்பம் ஆகியன தோன்றுகின்றன. இரைப்பையில் ஏற்படும் புண்களை கேஸ்டிரிக் அல்சர் என்றும், முன்சிறு குடலில் ஏற்படும் புண்களை டியோடினல் அல்சர் என்றும், குடலில் ஏற்படும் புண்களை கோலிக் அல்சர் என்றும் வகைப்படுத்துகின்றோம். இவ்வாறு தோன்றும் புண்களின் விளைவால் முறையே ஏப்பம், நெஞ்சுகரித்தல், உணவு உண்டபின் வயிற்றுவலி, பித்தவாந்தி பின் மலம் கழிக்கும்பொழுது கறுப்பாக மலம் செல்லுதல் அல்லது உறைந்த ரத்தம் வெளியேறுதல் ஆகியன படிப்படியாக தோன்றும்.



இவ்வாறு தோன்றும் உணவுப்பாதையில் ஏற்படும் புண்களை கட்டுப்படுத்தாவிட்டால் இரைப்பை, குடல் போன்றவற்றில் ஓட்டை விழுந்து, உயிருக்கு ஆபத்து ஏற்படும். அவசரகால சிகிச்சையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆகவே உணவுப்பாதையில் தோன்றம் புண்களை அலட்சியப்படுத்தாமல், எளிதாக செரிக்கக்கூடிய பச்சை காய்கறி, பழங்கள், பழச்சாறுகள், கீரைகள் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாம் முறை அரிசி கழுவிய நீர் குடலுக்கு நல்லது. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதனை உட்கொள்ளலாம். உணவுப்பாதையில் தோன்றும் பல்வேறு வகையான உபாதைகளை நீக்கி, இரைப்பை மற்றும் குடலுக்கு வலிமையை தரும் மூலிகை சீமைதுத்தி.



ஆல்தியா அபிசினலிஸ் என்ற தாவரவியல் பெயர்கொண்டமால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்தச் செடிகளின் பூ மற்றும் பிற பாகங்களும் மருத்துவத்தில் பெரிதும் பயன்படு கின்றன. பூ மற்றும் இலைகளிலுள்ள பிளேவனாய்டுகள் கேம்பரால், குர்சிட்டின், டையோஸ்மெட்டின், பாலிபினாலிக் அமிலங்கள் மற்றும் கவுமாரிக் அமிலங்கள் பல்வேறு வகையான நுண்கிருமிகளை நீக்கி, வயிறு மற்றும் சிறுநீர்ப்பாதையில் தோன்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்து கின்றன. சீமைதுத்தி இலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, கீரைபோல் நீராவியில் வேகவைத்து, கடைந்து சாப்பிட குடற்புண்கள் நீங்கும். சீமைதுத்தி இலைச்சாற்றை 10 மிலியளவு எடுத்து, ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து, தினமும் ஒரு வேளை சாப்பிட வயிற்றுப்புண்கள் ஆறும். மிளகுத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிடுவதுபோல் சீமைதுத்தி இலை மற்றும் பூவிதழ்களை சமைத்து, கீரையாகவோ அல்லது தண்ணீர்ச்சாறு செய்தோ சாப்பிட்டுவர பல்வேறு வகையான குடற் புண்கள் ஆறும்.



-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,

மதுரை. 98421 67567.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us