PUBLISHED ON : நவ 06, 2011
எனது சகோதரருக்கு 3 வாரங்களுக்கு முன், சென்னையில் பைபாஸ் சர்ஜரி நடந்தது. அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு, ரயில் அல்லது விமானம், எதில் பயணிப்பது நல்லது?
எஸ்.பார்த்திபன், மதுரை.
பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கால், கை களில் இருந்தோ ரத்தக் குழாயை எடுத்து பொருத்தும் அறுவை சிகிச்சை. இந்த அறுவை சிகிச்சை முடிந்த பின், 2 வாரங்களுக்கு விமானப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. அதன் பின் மேற்கொள்ளலாம். உங்கள் சகோதரருக்கு மூன்று வாரங்கள் ஆகிவிட்டதால், ரயில், கார் அல்லது விமானத்தில் நன்றாகவே பயணம் செய்யலாம்.
இதய நோயாளிகள், மதியம் சிறிது நேரம் தூங்குவது நல்லதா?
எஸ். பிரகாஷ், ராமநாதபுரம்
மதிய தூக்கம் என்பது பல்வேறு வகைகளில் இதய நோயாளிகளுக்கு உதவுகிறது. அதாவது உடலை, 'ரீசார்ஜ்' செய்வதுடன், களைப்பை போக்கி மனதையும் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. சமீபத்தில் நடந்த நவீன ஆய்வில், மதியம் சிறிது நேரம் தூங்குவதால் ஆயுள் கூடுவதாக தெரிய வந்துள்ளது. எனவே, மதியம் சில நிமிடங்கள் தூங்குவது நல்லது தான். அதற்காக, நன்கு சாப்பிட்டு விட்டு, பல மணி நேரம் தூங்கினால், உடல் எடையும், சர்க்கரை அளவும் அதிகரிக்கும் என்பதும் உண்மையே.
டாக்டர் சி.விவேக் போஸ்
மதுரை.
