PUBLISHED ON : ஜூலை 10, 2016

மருதாணி இலைகளைப் பறித்து, அம்மியில் அரைத்து, கை, கால் விரல்களில் வைத்தால், யாருக்கு அதிகமாக சிவக்கிறது என்று, பல வீடுகளில் போட்டியே நடக்கும். ஆனால், இன்று டாட்டூ பக்கம் செல்வதில், யுவதிகள் அதிகம் நாட்டம் செலுத்துகின்றனர். ஆனால், மருதாணி இட்டுக் கொள்வது, அழகுக்காக மட்டுமல்ல... இதன் பின்னணியில், ஆரோக்கியமும் இருக்கிறது என்று பலருக்கு தெரியவாய்ப்பில்லை.
மருதாணியின் இலை, பூ, பட்டை என, அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. வாதக்குடைச்சல், தலைவலி, கைகால் வலி, எரிச்சல், அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு, மருதாணி நல்ல தீர்வைத் தரும். சருமப் பிரச்னை உள்ளவர்கள், அதிகமாகப் பயன்படுத்தலாம்.
மருதாணி இலையை அரைத்து, உள்ளங்கை, உள்ளங்காலில் தேய்க்கலாம். கண் எரிச்சல், கை, கால் எரிச்சல் குணமடையும். நகப்புண், நகசுத்திக்கு மருதாணி இலைகளை அரைத்து, அதன் மேல் கட்டினால், விரைவில் குணமாகும்.
மருதாணியை நீரில் ஊற வைத்து, மறுநாள் வடிகட்ட வேண்டும். இதை, இலை ஊறல் குடிநீர் என்பர். இது, மிகச்சிறந்த கிருமிநாசினி. காயம்பட்ட இடத்தில், இந்நீரால் ஒத்தடம் கொடுத்தால், கிருமித்தொற்று ஏற்படாமல், விரைவில் குணமாகும்.
மருதாணி விதையை தணலில் போட்டு, உடலில் புகை படும்படி இருந்தால், வெண்புள்ளிகள் மறையும். மருதாணி மிகவும் குளிர்ச்சியானது என்பதால், உடல் சூட்டைத் தணிக்கிறது.
