PUBLISHED ON : ஜூலை 10, 2016

இரு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணித்தல், இருக்கையில் சரியாக உட்காராதது, உடற்பயிற்சி இல்லாமல், பளுவான பொருட்களை தூக்குவது உட்பட பல காரணங்களால், முதுகுவலி ஏற்படுகிறது.
இதை குணப்படுத்த, நாம் வழக்கமாக மேற்கொள்ளும் சில காரணங்களை முறைப்படுத்தினால் போதும். இலவம் பஞ்சு மெத்தைகள், பாய், ஜமுக்காளம் மிகவும் நல்லது. உயரம் குறைந்த தலையணை முதுகுவலியை குறைக்கும். நீண்டதூரம் இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். அலுவலகத்தில் பணிபுரிவோர், அரை மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து, சிறிது நேரம் நடக்க வேண்டும். நாற்காலியில் உட்காரும் போது, பாதங்கள், தரையில் பதிந்திருக்கும் படி அமர வேண்டும். உயரம் போதவில்லை என்றால், பாதம், தரையில் படும் படி, எதாவது உபயோகிக்க வேண்டும்.
நாம் உட்காரும் போது, 40 சதவீத எடையை பின்கழுத்துப் பகுதி எலும்புகளும், இடுப்பு பகுதி எலும்புகளும் தான் தாங்குகின்றன. அதனால், நாற்காலியில், நன்றாக நிமிர்ந்து, இடுப்புப் பகுதி நன்கு சேரில் பதியும்படி உட்கார வேண்டும். தேவைப்பட்டால், முதுகுக்கு பின், குஷன் பயன்படுத்தலாம்.
கனமான பொருட்களை தூக்கும் போது, கூடுதல் நிதானம் தேவை. பெண்களுக்கு முதுகுவலி ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், எக்காரணம் கொண்டும் அதிக ஹீல்ஸ் உள்ள செருப்புகளை பயன்படுத்த கூடாது. இதற்கெல்லாம் தீர்வாக, நடைபயிற்சி மிகுந்த பலன் தரும். நடைப்பயிற்சியில், முதுகு, இடுப்பு தசைகள் உறுதியாகின்றன. இது, முதுகுவலி வராமல் தடுக்க உதவும். லேசான வலிகளை கவனிக்காமல் விடும்போதுதான், அறுவை சிகிச்சை வரை பெரிதாகி விடுகின்றன.
