
சிக்கலான சிவப்பு நாட்கள்
சிவப்பு துத்தி
மாதந்தோறும் பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான நிகழ்வுதான் மாதவிலக்கு. ஆனால் இது சீராக இல்லாவிட்டாலும் உடல் உபாதைகளை ஏற்படுத்தினாலும் பெண்களின் உடல் மற்றும் மனம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. சிறுமிகளுக்கும், கர்ப்பம் தரித்தவர்களுக்கும், பூப்பு முதிர்வு ஏற்பட்டவர்களுக்கும் மட்டுமே தடைபட்டு இருக்க வேண்டிய மாத விலக்கானது, சாதாரண இளம்பெண்களுக்கு சீராக வரவில்லையெனில் கருப்பை, சினைப்பை மற்றும் நாளமில்லா சுரப்பிகள் போன்றவற்றின் ஹார்மோன் குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். அது மட்டுமின்றி அதிக எடை, உடல்பருமன், ஊட்டச்சத்தின்மை, பரம்பரை, மன அழுத்தம் போன்ற பல காரணங்களாலும் மாதவிலக்கு தடைபடலாம். சில நேரங்களில் மாதவிலக்கு ஏற்பட்டாலும் ரத்தப் போக்கு குறைவாகவே இருக்கலாம். இதனால் பெண்களின் இயல்பான உடல்வாகு மற்றும் உடல் செயல்பாடு மாற்றமடைந்து, தோற்றத்திலும் குணத்திலும் பல தொல்லைகள் உண்டாகின்றன.
மாதவிலக்கு சீராக இல்லையெனில் உடல் பெருத்தல், தேவையற்ற கொழுப்பு இடுப்பு, கழுத்து, மார்பு, தொடை போன்ற பகுதிகளில் அதிகரித்தல் ஆகியன ஏற்படுகின்றன. திருமணமான பெண்களுக்கு இதனால் குழந்தைப்பேற்றிலும் தாமதம் ஏற்படுகின்றன. மாதவிலக்கின்பொழுது ரத்தப்போக்கு சீராக இல்லையெனில் கருப்பையின் தசைப்பகுதிகள் தடித்து, அழற்சி ஏற்பட்டு, கடுமையான வலி மற்றும் மார்பு இறுக்கம் ஏற்படலாம்.
இயல்பான பெண்களுக்கு 3 முதல் 7 நாட்கள் சீரான ரத்தப்போக்குடனும் லேசான வயிறு மற்றும் தொடை வலியுடன் கூடிய மாதவிலக்கு இருக்கவேண்டியது அவசியமாகும்.
அதிகமான கொழுப்பு சார்ந்த உணவுகளையும், நொறுக்குத் தீனிகளையும் தவிர்த்து, மாதவிலக்கான நாட்களைத் தவிர பிற நாட்களில் சீரான நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் இருந்தால் மாதவிலக்கில் சிக்கல்கள் ஏற்படுவதில்லை. மாதவிலக்கில் தொல்லை உள்ளவர்கள் உடல்பருமன் அதிகரிக்காமல், பன்முறை உணவு உண்ணாமல் இருப்பது நல்லது. மாதவிலக்கில் ஏற்படும் தொல்லைகளை நீக்கி, சீரான ரத்தப்போக்கை ஏற்படுத்தும் மூலிகைதான் சிவப்பு துத்தி.
அப்ரோமா அகஸ்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஸ்டெர்குலேசியே குடும்பத்தைச் சார்ந்த பேய்பருத்தி என்ற வேறு பெயரால் அழைக்கப்படும் இந்த சிவப்பு துத்தியின் வேர் பட்டைகளில் அப்ரோமின், ப்ரிடெலின், அப்ரோமேஸ்ட்ரால், கோலின், ஆக்டாகோசனால், டேராக்ஸ்ட்ரால் போன்ற வேதிச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை கருப்பையை சுருங்கி, விரியச் செய்து மாதவிலக்கை ஏற்படுத்தும் தன்மையுடையதுடன், மாதவிலக்கான நாட்களில் கிருமித்தொற்றால் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், அடிவயிற்றுவலி ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன.
சிவப்பு துத்தி இலைகளை நீரில் போட்டு வேகவைத்து, வெந்ததும் அதனை ஒரு துணியில் முடிந்து, அந்த நீரில் தொட்டு முதுகு மற்றும் வயிற்றில் ஒற்றடமிட வயிற்றுவலி, முதுகுவலி, இடுப்புவலி நீங்கும். சிவப்பு துத்தி வேர், சோம்பு, உலர்ந்த திராட்சைப்பழம் ஆகியவற்றை சம அளவு எடுத்து, 4 பங்கு நீரில் போட்டு கொதிக்கவைத்து, ஒரு பங்காக சுண்டியபின்பு வடிகட்டி, காலை மற்றும் மாலை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் 60 முதல் 120 மில்லியளவு குடித்துவர ரத்தப்போக்கு அதிகரிக்கும். மாதவிலக்கு வலி நீங்கும்.
வேர்ப்பட்டையை இடித்து, பொடித்து, சலித்து 3 முதல் 6 கிராமளவு சாப்பிட தள்ளிப்போன மாதவிலக்கு சீராகும்.
குறைவான ரத்தப்போக்கு உடையவர்கள் மற்றும் மாதவிலக்கின் போது கடும் வலி உடையவர்கள் இதனை எதிர்பார்க்கும் மாதவிலக்கு நாட்களில் முதல் இரண்டு நாட்கள் சாப்பிட மாதவிலக்கு ஒழுங்குபடும்.
டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை
1979ல் சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த உலக சுகாதார நிறுவனம் மாநாட்டில் நுரையீரல் சார்ந்த நோய்கள், கண் நோய்கள், வயிறு மற்றும் உணவுப்பாதை நோய்கள், நரம்பு, தசை மற்றும் எலும்பு சார்ந்த நோய்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை நல்ல பலனளிப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் 1983ல் பிலிப்பைன்ஸ் மணிலாவில் நடந்த உலக சுகாதார மாநாட்டில் அக்குபஞ்சர் புள்ளிகளை சீராய்வு செய்யும் கருத்து வலியுறுத்தப்பட்டது.
ஆனால் அக்குபஞ்சர் புள்ளிகளுக்கு புதிய பெயரிட்டு, ஆய்வு செய்யும் முயற்சியானது தனிப்பவர்களின் கருத்து வேறுபாட்டாலும், பலதரப்பட்ட ஊசிகளின் பயன்பாட்டாலும் தோல்வியில் முடிந்து, முறையான ஆய்வுத் திட்டம் இல்லாமல் போய் விட்டது. ஆனால் அக்குபஞ்சர் முறையில் வலி நிவாரணம் கிடைப்பது
அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப் பட்டது. இது அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
உடலின் வலியை கட்டுப்படுத்துவதற்காக நமது உடலில் பலவித வேதிப்பொருட்களை நரம்புகளின் மூலமாக தூண்டும் தன்மை அக்குபஞ்சர் புள்ளிகள் மற்றும் ஊசிகளுக்கு உள்ளது நிரூபிக்கப் பட்டுள்ளது. இன்றும் பல நாடுகளில் அக்குபஞ்சர் மருத்துவம் ஒரு தனி மருத்துவ முறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனக்கு வயது 55 ஆகிறது. எனது வயிற்றில் உணவுகள் செரிமானமாகாமல் எப்பொழுதும் கல் போன்று, பாரமாக இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?
சித்த மருத்துவத்தில் இதனை கல்மாந்தம் என்று குறிப்பிடுகின்றனர். ஆமம் என்னும் வயிற்றில் ஐயம் என்னும் கபமும், வாதம் என்னும் வாய்வும் தங்குவதால் பித்தம் நிலைகுலைந்து, செரிமானசக்தி குறைந்து, கல்மாந்தம் தோன்றுகிறது. கபம் மற்றும் வாதத்தை அதிகரிக்கக்கூடிய குளிர்ச்சியான பொருட்களை உட் கொள்வதை தவிர்த்து, பித்தத்தை அதிகரிக்கும் இளஞ்சூடான உணவுகளை உட்கொள்வது நல்லது. இஞ்சி, கடுக்காய் சேர்ந்த மருந்துகள் இதற்கு நல்ல பலனளிக்கும். பாவனக்கடுக்காய் என்னும் சித்தமருந்தை காலை-2, இரவு-2 பத்து நாட்கள் வெந்நீரில் சாப்பிட கல்மாந்தம் நீங்கும்.

