
பலம் தரும் பலாக்கொட்டை
நாம் தூக்கி எறியும் பழங்களின் தோல், கொட்டை ஆகியவற்றில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நம் பாரம்பரிய வழக்கம். அசைவ உணவை போன்ற ருசியைத் தரும் காளான், சோயா மற்றும் பட்டர்பீன்ஸ் போன்றவை பெருமளவு விரும்பி உண்ணப்படுகின்றன.
பழங்களைவிட ஒரு மரத்தையே உருவாக்கும் பழக்கொட்டையில் உளள மரபணு கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன், செல்களை அழிவிலிருந்து காக்கும் ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதுபோன்ற அற்புத ஆற்றல் தரும், ஆண்களின் வலிமையைப் பெருக்கும் தன்மை உள்ளதுதான் பலாக்கொட்டை."அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த பலாப்பழத்தின் கொட்டை மருத்துவ ரீதியாக உட்கொள்ள ஏற்றது. 100 கிராம் பலாக்கொட்டையில் 135 கிலோ கலோரி சத்து உள்ளது. இவற்றில் உள்ள கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் ஏ, பி, சி போன்ற வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற தனிமங்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் லிக்னான்கள், ஐசோபிளேவோன்கள், சப்போனின்கள் புற்றுநோய், செல் முதிர்ச்சி, செல் அழிவு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை. இவற்றிலுள்ள பிளேவனாய்டுகள், ஆர்டோகார்பெசின் மற்றும் நார்ஆர்டோ கார்பெடின் போன்றவை வீக்கத்தைக் கரைக்கக்கூடியவை. அதிக ரத்த அழுத்தம் மற்றும் குடற்புண்களை ஆற்றும் தன்மையும் பலாக்கொட்டைக்கு உண்டு. இவற்றை நன்கு வேகவைத்து உருளைக் கிழங்கிற்கு பதில் உட்கொள்ளலாம்.
பலாக்கொட்டையை வறுத்தோ, வேகவைத்தோ உட்கொள்ளலாம். விதைகளை நன்கு உலர்த்தி, மைய அரைத்து, கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தியாகவோ, ரொட்டியாகவோ செய்தும் சாப்பிடலாம். தோலுரித்து கழுவி, ஒன்றிரண்டாக இடித்த பலாக்கொட்டை-10, பட்டர்பீன்ஸ்-20,
உருளைக்கிழங்கு-1, பச்சைப்பயறு-100 கிராம் ஆகியவற்றை நீரில் ஊறவைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், பூண்டு, புளிச்சாறு ஆகியவற்றை நீர்விட்டு மைய அரைத்து, வெந்த பலாக்கொட்டை கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்து, கறிவேப்பிலை, கடுகு, மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பு பதத்தில் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு வலிமையும் குளிர்ச்சியும் உண்டாகும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். பலம் உண்டாகும்.
பலாக்கொட்டையை மட்டும் தனியாக அதிகம் உட்கொண்டால் உஷ்ணம் அதிகரித்து, மார்பு மற்றும் வயிற்றில் கடும் வலி, முதுகுப்பிடிப்பு ஏற்படும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இதனை உணவாக சமைத்து உட்கொள்வதே நல்லது.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.
நான் பாங்கில் வேலை பார்த்து வருகிறேன். அங்கு எப்பொழுதும் "ஏசி"யில் அமர்ந்திருப்பதால் என்னுடைய உடம்பிற்கு அதிக குளிர்ச்சி ஒத்துக் கொள்வதில்லை. இதனால் என்னுடைய கைகள் மற்றும் விரல்கள் அதிக குளிர்ச்சியினால் சுருங்கி வயதான தோற்றத்தைப் போன்று உள்ளது. அதிக குளிர்ச்சி உடலுக்கு கேடா? இதற்கு சித்த மருத்துவம் கூறவும்.
குளிர்வசதி செய்யப்பட்டுள்ள அறையில் அடர்த்தி மிகுந்த காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பதாலும், குளிர்ச்சியின் காரணமாக தோல் மற்றும் சுவாசப்பாதையின் நுண்குழல்கள் சுருங்குவதாலும் ஆக்சிஜன் மற்றும் குருதிப் பற்றாக்குறை ஏற்பட்டு, தோற்றத்தில் மாற்றம் ஏற்படலாம். அவ்வப்போது இயற்கையான காற்றுக்கு வந்து சற்று இளைப்பாறலாம். தினமும் மூச்சுப்பயிற்சி, கபாலசுத்தி போன்றவை செய்துவந்தால் நல்லது. ஆவாரை டீ இளமையை நீடிக்கும் தன்மை கொண்டது.
இரவில் பேன் பத்து பாய் தாண்டும் என்பது கிராம வழக்கு. அவ்வளவு விரைவாக ஒருவரிடமிருந்து பரவும் தன்மை உடையது. மனிதர்களை ஒட்டி வாழும் இவற்றில் மூன்று வகைகள் உள்ளன. அவை தலை ரோமத்தில் வாழும் பேன்கள், உடலில் வாழும் பேன்கள், அந்தரங்க பகுதியில் வாழும் பேன்கள். இதன் வாய் பகுதி ரத்தத்தை உறிஞ்சுவதற்கு ஏற்றதாக அமைகிறது. இதன் மார்பு பகுதியிலிருந்து மூன்று ஜோடி கால்கள் கிளம்பி, தோல் பகுதியை கவ்விப்பிடிக்க உதவுகின்றன. முட்டை, ஈறு மற்றும் முதிர்ந்த பேன் என்ற மூன்று பரிணாம வளர்ச்சியை கொண்டுள்ள பேன்கள் முடியிலும், துணி மடிப்புகளிலும் ஒளிந்து உயிர் வாழ்கின்றன. தங்கள் உடலிலிருந்து சுரக்கும் ஒருவகையான பசை போன்ற திரவத்தால் மனித தோலின்மீது ஒட்டிக்கொள்கின்றன. 6-7 நாட்களில் முட்டையிலிருந்து பேனாக மாறுகிறது. தலை சீவுவதாலும், அருகருகே படுத்து உறங்குவதாலும், துணி, தொப்பி போன்றவற்றாலும் ஒருவருக்கொருவர் பரவுகின்றன. விடுதிகளிலும், சிறைச் சாலையிலும் பேன் தொல்லை அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பேன் கடித்த இடத்தை சொறிவதாலும், அவற்றை புண்ணாக்குவதாலும் கிருமிதொற்று உடலுக்கு பரவுகிறது. பேனின் கழிவிலிருந்து வெளியேறும் கிருமிகளால் டைபஸ் சுரம், ட்ரென்ச் சுரம் மற்றும் பலவித சுரங்கள் உண்டாகின்றன. தலை ரோமங்கள் மற்றும் தோலை சுத்தமாக வைத்துக்கொள்வதே பேனிடமிருந்து காத்துக்கொள்ளும் வழியாகும். சீத்தாப்பழக்கொட்டை தூள், மலைவேம்பு இலைச்சாறு போன்றவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தலையில் தடவி ஊறவைத்து குளிக்க, பேன்கள் அழியும்.

