PUBLISHED ON : ஜூன் 13, 2010

நினைவுத் திறனை அதிகரிக்க மாத்திரை உண்டா?
க. பாலகுமரன், ராமநாதபுரம்:
என் வயது 20. சிறுவயதில் இருந்து இரு காதுகளும் மந்தமாக உள்ளன. மருத்துவரிடம் காண்பித்ததற்கு CT SCAN செய்து காது நரம்புகள் மந்தமாகவும், மூக்கு தண்டுவடம் வளைந்து உள்ளதாகவும் தெரிவித்தார். இரு காதுகளுக்கும் கருவிகள் பொருத்தும்படி கூறுகின்றார். இதற்கு மாற்று வழியே கிடையாதா அல்லது அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தலாமா?
சிறு வயதிலேயே காது கருவி பொருத்தி கொள்வது சிரமம் தான். இது காதுகளிலும் கேட்கும் திறன், எந்த அளவு குறைந்துள்ளது என்பதை தகுந்த முறையில் பரிசோதனை செய்ய வேண்டும்.
சிறு வயது தொற்றால் கூட இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். காதில் சுரக்கும் மெழுகு அடைத்துப் போதல், மூக்கு கோணல் ஆகியவற்றால் கூட செவித்திறன் குறையலாம். இந்த இரண்டு காரணங்கள் குறித்து, சிகிச்சை செய்த பின், செவித்திறன் அதிகரித்துள்ளதா என பாருங்கள். வெளியிலிருந்து பார்த்தால் தெரியாத வகையிலான, "ஹியரிங் எய்டு' கருவிகள் உள்ளன. அவற்றை பொருத்தி கொள்ளலாம். இல்லையெனில், "கோச்லியர்' மாற்று சிகிச்சை செய்ய வேண்டும். தகுந்த மருத்துவரிடம் மீண்டும் ஆலோசனை பெறுங்கள்.
மீனலோசினி, விழுப்புரம்:
ஞாபக சக்தி அதிகரிக்க ஏதேனும் மாத்திரை உள்ளதா?
நினைவுத் திறனும், நினைவை மீட்டெடுத்தலும், தேர்வு எழுதுபவர்களுக்கு இன்றியமையாதவை. நன்கு பயிற்சி பெற்றால் தான் நினைவுத் திறன் வளரும். நினைவுத் திறனை வளர்க்க எந்த மருந்து, மாத்திரைகளும் கிடையாது.
மின் மற்றும் ரசாயனக் குறிப்புகளை கொண்டே, நம் மூளை செயல்படுகிறது. ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டே இருந்தால் தான், அது குறித்த சிந்தனை, "சட்'டென வரும். இது, மின் குறிப்புகளால் கிடைக்கிறது. மாறாக, ரசாயனத்தை மூளை உள்ளிழுத்துக் கொள்ள, நேரம் தேவைப்படுகிறது. எனவே, தேர்வு எழுதுவதற்கு முன், நன்றாக தூங்க வேண்டும்.
"டிவி'யில், மாறி மாறி வரும் காட்சிகள், மூளையில் மின்னலைகளை வேகமாக மாற்றுகின்றன. தொடர்ந்து "டிவி' பார்க்கும்பாது, மூளைக்குத் தேவையான ரசாயனத்தை கிரகித்து கொள்வதை, மின்னலை தடுத்து விடுகிறது.
தினமும் 40 நிமிட உடற்பயிற்சி செய்யும் போது, உடலுக்கு தேவையான ரசாயனத்தை, கால் தசைகள் வெளியேற்றுகின்றன. இந்த ரசாயனம் மூளை வரை சென்று, மூளை திறம்படச் செயல்பட உதவுகிறது.
சி. சந்திரமுருகன், சென்னை:
என் வயது 54. எடை 64 கிலோ. சுகர், பி.பி., எதுவும் கிடையாது. சில நாட்களாக இடது முழங்கால் அடிப்பகுதி வலிக்கிறது. இது எதனால்? இதற்கு என்ன செய்ய வேண்டும்?
இரவில் உறங்கும் போது முதலில் தலை மரத்துப் போகும். பின், புரண்டு படுத்தால் சரியாகிவிடும். தற்சமயம் கைகள் மரத்துப் போகின்றன. சில சமயம் விரல்கள் விறைத்து விடுகின்றன. இது எதனால்? இதற்கு என்ன செய்ய வேண்டும்? ஹீமோ குளோபின் 11 தான் உள்ளது.
வயது ஏற ஏற, எலும்பில் உள்ள சுண்ணாம்புச் சத்து குறைந்து, எலும்பு வலுவிழக்கிறது. புகை பிடிப்பவர்களும், போதுமான அளவு சுண்ணாம்புச் சத்தை உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்களும், விரைவில் அதை இழந்து விடுவர்.
கழுத்தில் உள்ள எலும்புகள் மிகவும் சிறியவை. தலையின் பாரத்தைத் தாங்க வேண்டியவை. இதனால், கழுத்து எலும்புகள், இடையிலுள்ள நரம்புகளை அழுத்தி, அதன் பாதிப்பு கை வரை பரவுகிறது. நமநமப்பு, மரத்து போதல், நடுக்கம் ஆகியவை இதன் அறிகுறிகளே. படுக்கும் நிலையை மாற்றியமைக்கும்போது, கை மரத்துப் போதல் சரியாகி விடுவதால், இது குறித்து கவலைப்படத் தேவையில்லை.
உடல் எடை அதிகரித்தாலும், முதுகெலும்பு பாதிக்கப்படும். இடுப்பு எலும்பு வழியே, கால் நரம்புகள் கீழிறங்குவதால், கால் மரத்துப் போதல் உட்பட பிரச்னைகள் ஏற்படலாம். இதற்கு, "பிசியோதெரபி' சிகிச்சை செய்து கொள்ளலாம். எனினும், எலும்பு மற்றும் நரம்பியல் நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும். yourhealthgm@yahoo.co.in

