தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மூலிகை மருத்துவம்: கொ”த்தொல்லை தாங்கவில்லையா?

மூலிகை மருத்துவம்: கொ”த்தொல்லை தாங்கவில்லையா?

மூலிகை மருத்துவம்: கொ”த்தொல்லை தாங்கவில்லையா?


PUBLISHED ON : ஆக 21, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 21, 2011


Follow on Google
அ நிறம் | அளவு

லங்குகளுக்கும் மனிதர்களுக்கும் பல்வேறு நோய்க்கிருமிகளை பரப்புவதில் முதலிடத்தை வகிக்கும் கொசுக்களை கண்டு பயப்படாதவர்கள் இருக்க முடியாது. உலகம் முழுவதும் பக்க விளைவுகள் இல்லாத கொசுவிரட்டிகள் மற்றும் கொசுக்கொல்லிகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் நடந்துகொண்டே வருகின்றன. நம்மை நடுங்கவைக்கும் கொசுக்கள் குலுசிடே குடும்பத்தைச் சார்ந்தவை. இவை முட்டை, லார்வா, பியுபா மற்றும் முதிர்ந்த கொசு என்ற நான்கு வளர்ச்சிப்பருவங்களை கொண்டுள்ளன. ஒரு முட்டையானது முதிர்ந்த கொசுவாக மாற 5 முதல் 14 நாட்கள் ஆகின்றன. அதன்பின் 4 முதல் 8 வாரங்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. ஆணுடன் இணைந்த பெண் கொசுக்கள் நிலையான, அசுத்தமான, தேங்கிக்கிடக்கின்ற நீரில் முட்டை இடுகின்றன. கொசுக்களில் ஏறத்தாழ 3500 வகைகள் இருப்பதாக உயிரியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.



கொசுவின் வாய்ப்பகுதியில் நீண்ட, நுண்ணிய, குழல் போன்ற பகுதி காணப்படுகிறது. பெரும்பாலான ஆண் கொசுக்கள் தாவரப்பூக்களிலுள்ள தேனை உறிஞ்சி உயிர்வாழ்கின்றன. ஆனால் பெண் கொசுக்கள் முட்டை உற்பத்தி செய்யவும், முட்டை ஈனவும் மனித அல்லது விலங்கு ரத்தத்தை நாடுகின்றன. அப்பொழுது வாய்ப்பகுதியிலுள்ள கூர்மையான குழலை நமது தோலில் குத்தி, எச்சில் போன்ற ஒரு திரவத்தை உட்செலுத்துகின்றன. இந்த திரவம் நமது ரத்தத்தை உறையவிடாமல் தடுத்து, ரத்தக்குழாய்களை சுருங்கவிடாமல் விரியவைத்து, ரத்தத்தட்டுக்களை சேதப்படுத்தி, கொசுக்கள் சுலபமாக ரத்தத்தை உறிஞ்சிக்கொள்ள உதவுகின்றன. இந்த திரவத்தில் அடங்கியுள்ள புரதமானது நமது தோலில் செலுத்தப்படும்பொழுது இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியின் விளைவாக ஜி மற்றும் ஈ வகை இம்யுனோ குளோபின்கள் உடனடியாகவோ, சில மணி நேரங்கள் கழித்தோ நமது உடலில் உற்பத்தியாகின்றன.



அதனை தொடர்ந்து கொசு கடித்த இடங்களில் ஒவ்வாமை ஏற்பட்டு, சிறு, சிறு தடிப்புகள், அரிப்பு, சிவந்த நிறம் ஆகியன ஏற்பட்டு, அவற்றை அதிகம் சொரிவதால் பிற கிருமித்தொற்று ஏற்பட்டு, புண்கள் உண்டாகின்றன. கொசுக்கள் நமது உடல் வியர்வை மற்றும் மூச்சிலுள்ள கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஆக்டினால் போன்ற வேதிப்பொருட்களால் கடிக்க வேண்டிய இடத்தை அடையாளம் கண்டுகொள்கின்றன. முழங்காலுக்கு கீழுள்ள பகுதிகள், முழங்கைக்கு கீழுள்ள பகுதிகள், முகம், கழுத்து போன்ற பகுதிகள், அதிகம் வியர்ப்பதால் பெரும்பாலும் கொசுக்கடிக்கு இலக்காகின்றன. கொசுவின் தலைப்பகுதியிலுள்ள ஆண்டனாவானது 72 வகையான நாற்றங்களை கண்டறியும் தன்மையுடையன. ஆகையால்தான் பூக்கள், இறந்த உயிரினங்கள், கழிவுநீர், மனிதத்தோல் ஆகியவற்றை கொசுக்கள் சரியாக கண்டுபிடித்து கடிக்கின்றன. மனித வியர்வையிலுள்ள 72 வகையான பொருட்கள் கொசுக்களால் எளிதாக உணரப்படுவதால் மனிதர்களே கொசு தாக்குதலுக்கு அதிகம் ஆளாகின்றனர். வியர்வையில் தோன்றும் நாற்றத்தை கட்டுப்படுத்தி, கொசுவை விரட்டும் மணமுள்ள அற்புத மூலிகைதான் காவட்டம்புல் என்ற பால்ம்ரோசா புல். சிம்போபோகான் மார்ட்டினி என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த புற்கள் வறட்சியான பகுதிகளிலும்கூட நன்கு வளர்கின்றன. சோபியா என்ற வகையைவிட மோட்டியா என்ற வகை புல்லிலிருந்து எடுக்கப்படும் வேதிச்சத்துக்கள் மிகுந்த மணமும், கூடுதல் செயல்பாடும் கொண்டவையாக கண்டறியப்பட்டுள்ளன. இதன் இலைகளை ஆவியாக்கி, குளிரச்செய்து, வடிகட்டி, பால்ம்ரோசா என்ற எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த எண்ணெயில் மிர்சின், லினலுல், ஜெரானியால், டைபென்டன், லிமோனினிர் போன்ற வேதிச்சத்துக்கள் உள்ளன. இவை வியர்வை துர்நாற்றத்தை நீக்கி, கொசுக்களை ஓடச்செய்து, கொசுக்கடியிலிருந்து நம்மை காக்கின்றன.



பால்ம்ரோசா எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய், வேப்பெண்ணெய் ஆகியவற்றை சம அளவு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் உடலின் மேல் தடவிவர கொசுக்கடியிலிருந்து காத்துக்கொள்ளலாம். வேப்பெண்ணெய் 50மிலி எடுத்து 10 கிராம் வெள்ளை மெழுகு சேர்த்து, லேசாக உருக்கி, இளகியதும் வடிகட்டி, சூடாறும் முன் பால்ம்ரோசா எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், சிட்ரோனெல்லா எண்ணெய் ஆகியவற்றை வகைக்கு 10 மில்லி கலந்து மூடி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த களிம்பை கொசு கடித்த இடங்களில் தடவிவர ஒவ்வாமை நீங்குவதுடன், கொசு கடிக்காமலும் காத்துக்கொள்ளலாம். வீட்டிலுள்ள ஆவியாகும் கொசு விரட்டிகளில் இரண்டு சொட்டுகள் பால்ம்ரோசா எண்ணெய் மற்றும் சிட்ரோனெல்லாவை கலந்து வரலாம்.



நாம் குடிக்கும் காப்பியால் நன்மையா தீமையா என்று பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆனாலும் நாளுக்கு நாள் காப்பித்தூள் விற்பனையும், காப்பி குடிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கவலை, சோம்பல், அசதி, உடல்வலி போன்ற நிலைகளில் காப்பி குடித்துவர அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் சுறுசுறுப்பு உண்டாகிறது. இதற்கு காரணம் இவை சோர்வை உண்டாக்கும் நரம்பு செல்களை தடை செய்து, எபினெப்ரின் என்னும் பொருளை அதிகரித்து, இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், கல்லீரலில் குளூக்கோசை வெளிப்படுத்துதல் மற்றும் டோப்பமைன் உற்பத்தி ஆகியவற்றை அதிகப்படுத்தி, சுறுசுறுப்பை உண்டாக்குகின்றன. ஆனால் சிலருக்கு இந்த விளைவுகள் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகின்றன. அதிகமாக காப்பி உட்கொள்பவர்களுக்கு கண் அழுத்தம் அதிகமாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சித்த மருத்துவ நூல்களில் காப்பியை கரப்பான் பண்டமாக குறிப்பிட்டுள்ளனர். அதிகமாக உட்கொண்டால் தூக்கமின்மையும், தோல் வியாதியும் உண்டாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் காப்பிக்கு சிறுநீரகம் மற்றும் பித்தப்பை கற்களை கரைக்கும் தன்மையுண்டு எனவும் தமிழ் மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன.



-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,

மதுரை. 98421 67567.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us