PUBLISHED ON : ஜன 12, 2025

வைரஸ் நோய்களுக்கு பெயர் போன சீனாவிலிருந்து மற்றொரு புதிய வைரஸ் நோய் புறப்பட்டு வேகமாகப் பரவி வருகிறது.
எச்.எம்.பி.வைரஸ் (ஹூயூமன் மெட்டா நியூமோ) புதிதானதல்ல. சீனாவில் தோன்றியதும் இல்லை. ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் 25 ஆண்டுகளாக இந்த வைரஸ் தாக்கம் இருக்கிறது. டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2005 முதல் 2010 வரை இந்த வைரஸ் குறித்து ஆராய்ச்சி நடந்துள்ளது. டாக்டர் சகரிகா பானர்ஜி தலைமையில் நடந்த ஆராய்ச்சியில் குழந்தைகளைத் தாக்கும் சுவாசப்பாதை வைரஸ்களில் 3 சதவீதம் பேர் எம்.எம்.பி. வைரஸால் பாதிக்கப்படுகின்றனர் என 'மெடிக்கல் வைராலஜி' மருத்துவ இதழில் 2011ல் கட்டுரை வெளியிடப்பட்டது.
அழியாத வைரஸ்
இந்த வைரஸ் பெரும்பாலும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளை தாக்குகிறது. முதியவர்களையும் மற்ற இணைநோய்க்கு ஆளானவர்களை தாக்கலாம் என்றாலும் அது வெறும் அனுமானமே. காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் இந்நோய் அறிகுறிகள். அபூர்வமாக செயற்கை சுவாச வசதி தேவைப்படலாம். பெரும்பாலான குழந்தைகள் சாதாரண மருந்துகளிலேயே குணமாகி விடுகின்றனர். 2010க்கு பிறகு இந்த வைரஸ் குறித்து யாரும் யோசித்ததில்லை.
இந்தியாவில் பெங்களூருவில் 2 பேர், தமிழகத்தில் இருவர், குஜராத், மேற்குவங்கம் என பத்துக்கும் குறைவானோரே தற்போது பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சில வாரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகும். சிறிது காலம் கழித்து இந்த வைரஸ் குறித்து நாம் மறந்து விடுவோம். இந்த வைரஸ் கொரோனாவைப் போல அழியாத வைரஸ் தான்.
இந்த வைரஸ் குறித்து யாரும் பயப்பட வேண்டாம். லட்சக்கணக்கான வைரஸ்கள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். சரியான சுய பாதுகாப்பு முறைகளும், எளிய மருத்துவமும் இதற்கு போதும். இந்த வைரஸ் குறித்த புரளிகளையும் தேவையற்ற பயமுறுத்தலான விளம்பரத்தையும் நிறுத்தி விட்டு இந்த வைரஸையும் கடந்து செல்வோம்.
- டாக்டர் ப.சவுந்தர பாண்டியன்
சிறுநீரக இயல் நிபுணர்
மதுரை. 94433 82830