
தமிழ்ச்செல்வி, மதுரை: சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுபட்டியல் குறிப்பிட முடியுமா. சீனி, நாட்டு சர்க்கரை, வெல்லம் மூன்றில் எதனைப் பயன்படுத்தினால் சர்க்கரை நோய் பாதிப்பு வராது?
உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும் குறைக்கவும் உண்ணும் ஒவ்வொரு உணவின் கலோரி அளவை தவறாமல் கணக்கிட வேண்டும். இதற்காகவே நிறைய அலைபேசி செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. மாவுச்சத்து அதிகமுள்ள அரிசிக்கு பதிலாக தினை வகைகளை சாப்பிடலாம். துரிதமாக செமிக்கக்கூடிய கூழ், களியைத் தவிர மெதுவாக செரிக்கக்கூடிய ரொட்டி, தோசை சாப்பிடலாம். வயது வித்தியாசமின்றி சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு மாதத்திற்கான எண்ணெய் அளவு அரை லிட்டர் மட்டும் தான். எனவே எண்ணெய்யை குறைவாக பயன்படுத்த வேண்டும்.
நார்ச்சத்து அதிகமுள்ள கீரை, கொடி வகை காய்கள், நாட்டு காய்கள் பசியை அடக்கி மலச்சிக்கலை தவிர்க்கிறது. மேலும் இவை ரத்த சர்க்கரை மற்றும் கொழுப்புகளை கட்டுப்படுத்துகிறது. காலையில் அரசனைப் போல உண்ண வேண்டும். மதியம் இளவரசனைப் போலவும் இரவு உணவை ஆண்டியைப் போல எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு 7:00 மணிக்கு மேல் உணவுகளை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும். விருந்தும் வேண்டாம்; விரதமும் வேண்டாம். உப்பை குறைப்பதோடு அப்பளம், ஊறுகாயை தவிர்ப்பது நல்லது.
கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம், பனையிலிருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு அனைத்துமே ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் என்பதால் இவற்றை பயன்படுத்தக்கூடாது. அதற்கு பதிலாக செயற்கை இனிப்புகளான ஸ்டிவியா, சுக்கிரலோஸ், மாங்க் போன்றவற்றை சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.
- டாக்டர் சி.பி. ராஜ்குமார், சர்க்கரை நோய் மற்றும் பொதுநல நிபுணர், தேனி
பழனிச்சாமி, வடமதுரை: ஐந்து வயதாகும் எனது குழந்தை பகலிலும், இரவிலும் சரியாக துாங்குவதில்லை. குழந்தைகள் எவ்வளவு நேரம் துாங்குவது அவசியம், அதன் முக்கியத்துவம் என்ன?
குழந்தைகளின் உடல், மன வளர்ச்சிக்கு துாக்கம் மிக அவசியமானது. குழந்தையின் மனநிலை சந்தோஷமாக, துடிப்பாக, கவனமாக இருக்கவும், மூளைத் திறன் அதிகரிக்க, சந்தோஷமான மனநிலையில் இருக்க, புதியவற்றை கற்கவும், கற்றவற்றை ஞாபகம் வைக்கவும் என அனைத்துக்குமே துாக்கம் மிகவும் முக்கியம். குழந்தைகள் கற்ற பதிவுகளை துாக்கத்தில் செயல் நிறுத்தி மனதில் பதிய வைத்து, பின்னர் மன வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது. கைக்குழந்தைள் 12 - 16 மணி நேரம், குழந்தைகள் 11 - 14 , பள்ளிக்கு முந்திய பருவத்தினருக்கு 10 - 13 மணி நேரம், பள்ளி குழந்தைகளுக்கு 9 -11 மணி நேரம், இளம் பதின்ம வயதினருக்கு 8 - 10 மணி நேரம் துாக்கம் தேவை. குழந்தைகளுக்கு சிறு வயது முதலே ஆரோக்கியமான துாக்கப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
துாங்கும் அறையை அமைதியாக, இருட்டாக, குளிர்ந்த நிலையில் வைத்திருப்பது நல்லது. துாங்கும் முன்னர் மூளையைத் துாண்டும் செயல்களை தவிர்க்க வேண்டும். தீவிரமான துக்கமின்மை, இரவில் கால்கள் அதிகமாக உளைவது, குறட்டை விடுதல், உடல் மிகப் பருமன் பிரச்னை இருந்தால் டாக்டரை அணுகுவது நல்லது.
- டாக்டர் ஜே.சி.சேகர்பொது நல மருத்துவர், வடமதுரை
டி. தர்மர், அரண்மனைப்புதுார்: எனக்கு அடிக்கடி கண்கள் சிவந்து விடுகிறது. சில நேரங்களில் கண்களில் நீர் வடிவது தொடர்கிறது. கண்ணீல் நீர் வடிவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
கண்களில் துாசி விழுந்தால் கண்ணீர் சுரந்து அதனை வெளியேற்றும். அடிக்கடி நீர் வடிந்தால் பார்வை குறைபாடு ஏற்படுவதின் அறிகுறியாக இருக்கலாம். 40 வயதிற்கு மேல் நீர் வடிவது தொடர்ந்தால் கண்நீர் அழுத்த நோயாக இருக்கும். அதிக நேரம் கணினி பயன்படுத்துபவராக இருந்தால் அதற்கு ஏற்ப கண் கண்ணாடி அணிந்து பணிபுரிந்தால் கண் சிவத்தல், கண்களில் நீர் வடிவதை தவிர்க்கலாம்.
- டாக்டர் கணபதி ராஜேஷ்துறை தலைவர் கண் மருத்துவப்பிரிவு, அரசு மருத்துவக்கல்லுாரி, தேனி
எஸ்.ராஜேந்திரன், ராமநாதபுரம்: அடிக்கடி முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறேன். இதற்கான தீர்வு என்ன?
பொதுவாக முதுகு வலியானது இளைஞர்களுக்கும், முதியவர்களுக்கும் வருகிறது. இளைஞர்களுக்கு முதுகு வலி என்றால் அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். கடுமையான பணிகளான லோடு மேன், டிரைவர், ஜிம்மில் பயிற்சி பெறுவோர் கடுமையான வேலை செய்வதால் ஜவ்வு தேய்மானம் ஏற்பட்டு வெளியே பிதுங்கி நரம்புகளை அழுத்தும்.
இது போன்ற நேரங்களில் முதுகு வலி இருக்கும். எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை செய்தால் பாதிப்பு தெரியவரும். வெளிய வந்த ஜவ்வை உள்ளே தள்ள முடியாது. மருந்து, மாத்திரைகள் மூலம் சரி செய்ய முடியும். அப்படி சரி செய்ய முடியாத அளவிற்கு சென்றுவிட்டால் நுண் துளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.
வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானம் காரணமாக ஜவ்வு வீக்கமடைந்து நகர்ந்து முன் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இது போன்ற எலும்பு தேய்மானத்தால் வரும் முதுகு வலிக்கு இடுப்பில் பெல்ட் அணிந்து கொள்ளலாம். மாத்திரைகளை உட்கொள்ளலாம். 60 முதல் 70 சதவீதம் வரை பிசியோதெரபி, அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.
- டாக்டர் பா.அனந்து, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ராமநாதபுரம்
எம்.சந்தோஷ்,சிவகங்கை: வைட்டமின் டி குறைபாட்டை எவ்வாறு சரிசெய்வது?
மனித உடலில் செயல்பாட்டிற்கு வைட்டமின் டி முக்கியமானது. வைட்டமின் டி குறைபாடு எலும்பு, தசைகளை பதிக்கும். எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான கால்சியத்தை பராமரிப்பது வைட்டமின் டி பங்கு அதிகம். உடலில் உள்ள செல்களின் வளர்ச்சியிலும், ஹார்மோன்களின் சமநிலையை பராமரிப்பதிலும், நோய் எதிர்ப்பு சக்தியின் செயல்பாட்டை அதிகரிப்பதிலும் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் டி குறைந்தால் தலைமுடி உதிர்தல் அதிகரிக்கும். எளிதில் சோர்வடைவோம். தசைப்பிடிப்பு மற்றும் எலும்புகளில் வலியால் பாதிக்கப்படுவோம். நினைவாற்றல் பாதிக்கப்படும். இவற்றை இயற்கையாகவே உணவின் மூலம் குணப்படுத்தலாம். காளான், தயிர், பசும்பால், பாதாம், ஓட்ஸ், சோயா பால், ஆரஞ்சு பழச்சாறு உள்ளிட்ட உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். தினமும் காலையில் சூரிய ஒளியில் சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி, உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
டாக்டர் மு.தென்றல், மகப்பேறு நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை
கி.விமலா, ராஜபாளையம்: நான் மூன்று மாத கர்ப்பிணி. குளிர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை, ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும்?
கர்ப்பிணிகள் மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். இக்காலங்களில் தாகம் அதிகம் ஏற்படாது. இது கர்ப்பிணிகளுக்கு வறட்சியை ஏற்படுத்தி தலைவலி, உடலில் நீர்ச்சத்து குறையும் அபாயம் ஏற்படும். தேவையான அளவு காய்ச்சிய வெந்நீரை குடிக்க வேண்டும். தற்போது டெங்கு சீசன் என்பதால் வீட்டைச் சுற்றிலும் நல்ல தண்ணீர் தேங்காதபடி பராமரிக்க வேண்டும்.
எச்.எம்.பி.வி என தற்போது பரவி வரும் ஜலதோஷம், காய்ச்சல் வகை குறித்து எச்சரிக்கை உணர்வு அவசியம். லேசான காய்ச்சல் அறிகுறியை மீறி கை கால் வலி, நடுக்கம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடி முதல் கட்ட ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க கர்ப்ப கால மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். கூட்டங்களில் பொதுமக்கள் கூடும் பகுதிகளுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது அவசியம். குளிர்ந்த காற்றினால் தோல் வறட்சி ஏற்படுவதை தவிர்க்க டாக்டர்களின் பரிந்துரை பெயரில் கிரீம்கள் பயன்படுத்தலாம். குளிரிலிருந்து பாதுகாக்க தகுந்த ஆடைகளை, கை, கால் உறைகளை அணிவதாலும் சிக்கலை தவிர்க்க முடியும்.
- டாக்டர் ஏ.ருமானா, ஆரம்ப சுகாதார நிலையம், சத்திரப்பட்டி