PUBLISHED ON : ஜன 12, 2025

சிலருக்கு வாயில் அடிக்கடி புண் ஏற்படும். எந்த புண் என்றாலும் அச்சமடைய அவசியம் இல்லை.
பதினைந்து நாட்களுக்கு பின்னும் தொடர்ந்து புண் ஆறாமல், வலி இல்லாமல் இருந்தால், கண்டிப்பாக டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும்.
காரணம், வாய் கேன்சராக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதனால் 'பயாப்சி' எனப்படும் பாதித்த இடத்தில் சிறிய சதையை எடுத்து பரிசோதனை செய்ய தயங்கக் கூடாது. பலரும், வாய் புண் தானே என்று கடைசி நேரத்தில் வருகின்றனர். ஒருவேளை கேன்சராக இருக்கும் பட்சத்தில், சிகிச்சை செய்தாலும் பலன் இல்லாமல் போகிறது.
சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன். வெளிளியல் சாப்பிடுவது இல்லை. தினசரி உடற்பயிற்சி செய்கிறேன். குறிப்பாக, மன அழுத்தம் இல்லாமல் வாழ்கிறேன், சிகரெட், மது பழக்கம் இல்லை. எனக்கு ஏன் கேன்சர் வரபோகிறது என்று இன்றைய கால கட்டத்தில் யாரும் நினைக்க கூடாது.
நம் மரபணுவில் ஒன்று, தன்னுடைய வேலையை செய்ய மறந்து விட்டால், கேன்சர் வரலாம். சில நேரங்களில் தவறாக வேலை செய்யும். அதாவது, வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை என்று ஏதோ ஒரு எதிரி உள்ளே வந்தால் அதை அழிக்க வேண்டும் என்பதை மறந்து அதனுடன் சேர்ந்து கொண்டு இன்னும் பல ஆயிரம் எதிரிகளை உருவாக்கி, பரவ ஆரம்பிக்கும்.
எனவே சிறிய கட்டி, புண்ணாக இருந்தாலும் 15 நாட்களுக்கு மேல் இருந்தால் வலி இல்லையே, எதற்கு மருத்துவ ஆலோசனை என்று நினைக்கக் கூடாது.
கேன்சர் என்று உறுதியானால் ஆரம்ப நிலையில் இருந்தால், மாத்திரை, மருந்து கொடுத்தோ, அறுவை சிகிச்சை செய்தோ முழுமையாக குணம் பெறலாம்.
பல்லில் எற்படும் கேன்சர் மற்ற இடங்களுக்கும் பரவலாம். வழக்கத்திற்கு மாறாக வாயில் ஏதேனும் வித்தியாசமாக இருக்கிறதா என்பதை மாதம் ஒரு முறை சுய பரிசோதனை செய்வதும் அவசியம்.
சிலருக்கு பலவித வைட்டமின் குறைபாட்டினால் வாயில் புண் வரலாம். தாங்களாகவே 'பி காம்ப்ளெக்ஸ்' மாத்திரை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி புண் வந்தால், ரத்தம் தொடர்பான பிரச்னையாகவும் இருக்கலாம்.
மன அழுத்தம் இருந்தாலும் புண் வரும்.
கர்ப்ப காலத்தில் பல் சிகிச்சை செய்யலாமா என்பது பலருக்கும் ஏற்படும் சந்தேகம். அவசியம் ஏற்பட்டால் பல் எடுக்கலாம். தேவையான பல் சிகிச்சையும் செய்யலாம்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள், கடைசி மூன்று மாதங்கள் மட்டும் பல் தொடர்பான சிகிச்சைகளை தவிர்க்கலாம்.
மற்ற எக்ஸ் ரே பரிசோதனைகளை விட, பல்லுக்கு எடுக்கும் எக்ஸ் ரேவில் கதிரியக்கம் மிகவும் குறைவு. ஆனாலும், தேவையில்லாமல் கர்ப்ப காலத்தில் எக்ஸ் ரே எடுக்க வேண்டாம்.
அவசியம் என்றால், மகப்பேறு மருத்துவரின ஆலோச னை யுடன் எடுக்கலாம் என்ன விதமான மருந்து, சிகிச்சையாக இருந்தாலும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் எடுத்துக்கொள்ளக் கூடாது.
டாக்டர் ஹெச்.தமிழ்செல்வன்,
டீன், ஸ்ரீராமசந்திரா பல் மருத்துவக் கல்லுாரி, சென்னை044-45928000dean.dental@sriramachandra.edu.in